மொபைல் பயன்படுத்துவோருக்கு “இடி”யாக வந்து இறங்கிய செய்தி.. ஜியோவை ஃபாலோ செய்யும் ஏர்டெல், வோடஃபோன்!
டெல்லி: செல்போன் ரீசார்ஜ் கட்டணத்தை 25% வரை ஜியோ நிறுவனம் உயர்த்தி உள்ளது. ஜியோவை தொடர்ந்து ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு செல்போன் நிறுவனங்களின் கட்டணங்கள் உயர இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், ஜியோ நிறுவனம் தமது செல்போன் சேவை கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஜியோ கட்டண உயர்வு: தொலைத்தொடர்பு சேவையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ, 4ஜி சேவைக்குள் அடியெடுத்து வைத்தபோது கட்டணங்களை அதிரடி சலுகையில் வழங்கியது. ஜியோவால் தங்கள் கட்டணத்தையும் குறைக்கும் நிலைக்கு மற்ற ஆபரேட்டர்களும் தள்ளப்பட்டனர். ஆனால், தற்போது விலை அதிகரிப்பிலும் மற்ற நிறுவனங்களுக்கு முன்னோடியாக மாறியுள்ளது.
நாடு முழுவதும் செல்போன் கட்டணத்தை 12 முதல் 25% வரை உயர்த்தி ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. ரூபாய் 155 ஆக இருந்த அன்லிமிட்டட் வாய்ஸ் கால் பிளானுக்கான மாதாந்திர கட்டணம் 189 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜியோவின் இந்தப் புதிய கட்டண உயர்வு ஜூலை மூன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
19 பிளான்கள் கட்டண உயர்வு: ஜியோ நிறுவனம் 19 பிளான்களுக்கு கட்டண உயர்வை அறிவித்துள்ளது. ரூ. 155 ஆக இருந்த மாதக் கட்டணம் ரூ. 189 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 1 GB டேட்டா வீதம் 28 நாள்களுக்கு வழங்கப்பட்டு வரும் பிளானின் புதிய கட்டணம் 249 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பிளான் தற்போது வரை 209 ரூபாயாக உள்ளது.
நாள் ஒன்றுக்கு 1.5 GB டேட்டா வீதம் 28 நாள்களுக்கு வழங்கப்படும் பிளான் 239 ரூபாயாக இருந்து வரும் நிலையில், இதன் புதிய கட்டணம் 299 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 2 GB டேட்டா வீதம் 28 நாள்களுக்கு வழங்கப்பட்டு வரும் பிளானின் கட்டணம் 299 ரூபாயில் இருந்து 349 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு 2.5 GB டேட்டா வீதம் 28 நாள்களுக்கு வழங்கப்பட்டு வரும் பிளானின் கட்டணம் 349 ரூபாயில் இருந்து 399 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ 399 ஆக இருந்த கட்டணம் ரூ. 449 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
2 மாத பிளான்: நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா வீதம் 56 நாள்களுக்கு வழங்கப்பட்டு வரும் பிளானின் புதிய கட்டணம் 579 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இதன் கட்டணம் 479 ரூபாயாக இருந்தது.
நாள் ஒன்றுக்கு 2 GB டேட்டா வீதம் 56 நாள்களுக்கு வழங்கப்பட்டு வரும் பிளானின் புதிய கட்டணம் 629 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இதன் கட்டணம் 533 ரூபாயாக இருந்தது.
வருடாந்திர பிளான், போஸ்ட்பெய்டு: தினசரி 2.5 GB டேட்டா வழங்கும் வருடாந்திர திட்டம் இதற்கு முன்பு 2,999 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது ரூ.3,599 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 1,559 ரூபாய்க்கு 336 நாட்களுக்கு வழங்கப்பட்ட வருடாந்திர பிளான் 1,899 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், போஸ்ட்பெய்ட் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. ரூ. 299 பிளான் ரூ. 349 ஆகவும், ரூ. 399 பிளான் ரூ. 449 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது அனைத்து பிளான்களிலும் 12 % முதல் 25 % வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
5ஜி டேட்டா இலவசம்: நாள்தோறும் 2 ஜிபி அல்லது அதற்கு மேல் டேட்டா வழங்கப்படும் அனைத்து திட்டங்களுக்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது 4ஜி டேட்டாவில் பிளானுக்கு உரிய டேட்டாவையும், 5ஜியில் அன்லிமிட்டெட் டேட்டாவையும் பயன்படுத்தலாம்.
இதுகுறித்து ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத் தலைவர் ஆகாஷ் எம்.அம்பானி கூறுகையில், "புதிய திட்டங்களின் அறிமுகமானது, 5ஜி மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தில் செய்யும் முதலீடுகள் மூலம் நிலையான வளர்ச்சியை மேம்படுத்தும். இது எங்கும் நிறைந்த, உயர்தர, மலிவான இணையதள சேவை.
டிஜிட்டல் இந்தியாவின் முதுகெலும்பான ஜியோ, இதற்கு பங்களிப்பதின் மூலம் பெருமிதம் கொள்கிறது. ஜியோ எப்போதும் நம் நாட்டிலும், வாடிக்கையாளரிடத்திலும் முதலிடத்தில் உள்ளது. மேலும், இந்தியாவுக்காக தொடர்ந்து முதலீடு செய்துகொண்டே இருக்கும்" எனக் கூறியுள்ளார்.
வாடிக்கையாளர்கள் புலம்பல்: ஜியோவின் கட்டண உயர்வால் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர். ஜூலை 3 முதலே அமலுக்கு வரும் என்று ஜியோ அறிவித்தபோதும் நெட்டிசன்கள் தங்களது புலம்பல்களை இப்போதே தொடங்கி விட்டனர்.
பிள்ளையார் சுழி போட்ட ஜியோ: ஜியோ நிறுவனம் தற்போது தனது சேவை கட்டணத்தை அதிகரித்து பிள்ளையார் சுழி போட்டுள்ள நிலையில் அடுத்தடுத்து ஏர்டெல், வோடபோன் ஆகிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களும் கட்டண அதிகரிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ஜியோ மட்டுமல்லாது மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்களும் கலக்கத்தில் உள்ளனர்.
2016 இல் ஜியோ தனது சேவையை அறிமுகப்படுத்திய பிறகு முதல் முறையாக, 2019ல் கட்டணங்களை உயர்த்தியது. அதன்பிறகு கடந்த 2021 டிசம்பரில் அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் 20% கட்டண உயர்வை செயல்படுத்தின. அதன்பிறகு கட்டண உயர்வு பற்றி ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்களும் பேசி வந்தன. இந்நிலையில் ஜியோ கட்டண உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் அவையும் விரைவில் கட்டணத்தை உயர்த்தும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications