நல்லியை விட உதய் மீது மவுனிகாவுக்கு கள்ளக்காதல்! உணவில் 10 தூக்க மாத்திரை கலந்து கொலை
சித்தூர்: ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து இளம்பெண் ஒருவர் கணவரை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3 பேரை கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம், பாதபட்டினம் பகுதியில் உள்ள மொண்டி கொல்ல தெருவைச் சேர்ந்தவர் நல்லி ராஜு (27). இவருக்கு மவுனிகா (25) என்பவருடன் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் மவுனிகாவிற்கு அதே ஊரைச் சேர்ந்த குண்டு உதயகுமார் என்பவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதையறிந்த கணவர் நல்லி ராஜு கள்ளக்காதலை கைவிடுமாறு மவுனிகாவை எச்சரித்தாராம்.
ஆனால் மவுனிகாவோ அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் உதயகுமாருடன் கள்ளக்காதலில் இருந்தாராம். இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாகவும் இருந்துள்ளனர். கள்ளக்காதல் விவகாரத்தால் நாளுக்கு நாள் கணவன்- மனைவி இடையே தகராறு அதிகரித்து வந்தது.
அது போல் மவுனிகா, உதயகுமாருடன் பழகாத வகையில், நல்லி ராஜு பல்வேறு கட்டுப்பாடுகளை மவுனிகாவுக்கு விதித்தாராம். இதனால் ஆத்திரமடைந்த மவுனிகா, கணவரை கொல்ல திட்டமிட்டிருந்தாராம்.
அதன்படி கடந்த 5ஆம் தேதி மவுனிகா வீட்டில் சமைத்த உணவில் 10 தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்தாராம். பின்னர் திடீரென நல்லி ராஜுவுக்கு தூக்கம் வந்தது. இதனால் அவருடைய அறைக்கு தூங்க சென்றாராம். அப்போது நண்பர் மல்லிகார்ஜுனுடன் உதயகுமார், நல்லி வீட்டிற்கு வந்தாராம்.
அங்கு அசந்து தூங்கி கொண்டிருந்த நல்லி ராஜுவின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி மூச்சுத்திணற வைத்து கொலை செய்து விட்டதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து நல்லியின் உடலை உதயகுமாரும், மல்லிகார்ஜுனும் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று அங்குள்ள குடியிருப்பு பகுதியில் சடலத்தை வீசிவிட்டு வந்தனர். பின்னர் மவுனிகா, தனது நாடகத்தை அரங்கேற்றினார். வெளியே சென்ற கணவர் வீடு திரும்பவில்லை என மவுனிகா தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து கடந்த 6 ஆம் தேதி குடியிருப்பு பகுதியில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது இது திட்டமிட்ட கொலை என தெரியவந்தது.
அந்த வீடியோவில் யாரோ இரு சக்கர வாகனத்தில் மூட்டையுடன் சுற்றி வந்ததை கண்டறிந்தனர். விசாரணையில் அவர் உதயகுமார் என தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்தியதில் மவுனிகா பிடிபட்டார்.
இதையடுத்து உதயகுமார், மவுனிகாவை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவர் நல்லியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து மவுனிகா, உதயகுமார், மல்லிகார்ஜுன் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications