கொடுமை.. நெஞ்செல்லாம் பதறுது.. ஆந்திராவில் கொதிக்கும் பால் பாத்திரத்தில் தவறி விழுந்த 1.5 வருட குழந்தை மரணம்
அமராவதி: ஆந்திரா மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் கொதிக்கும் பால் இருந்த பாத்திரத்தில் தவறி விழுந்த 1.5 வயதுக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. பால் பாத்திரத்தில் விழுந்ததால் படுகாயமடைந்த குழந்தைக்குத் தீவிரச் சிகிச்சை தரப்பட்டுள்ளது. இருப்பினும், சிகிச்சைப் பலனில்லாமல் குழந்தை உயிரிழந்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது.
வீட்டில் குழந்தைகள் இருந்தால்.. குறிப்பிட்ட வயது வரை நாம் அவர்களைக் கண்காணிப்பிலேயே வைத்திருக்க வேண்டும். குழந்தைகள் எப்போது என்ன செய்வார்கள் என்றே தெரியாது. நாம் கண் மூடி திறப்பதற்குள் அவர்கள் செய்யும் காரியங்களால் மிக மோசமான சம்பவங்கள் நடந்துவிடும். அப்படியொரு சம்பவம் தான் ஆந்திராவில் நடந்துள்ளது.

தவறி விழுந்த குழந்தை
ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் தான் இந்தச் சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குப் பள்ளி ஒன்றின் சமையலறையில் கொதித்துக் கொண்டிருந்த பால் பாத்திரத்தில் தவறி விழுந்து, 17 மாதக் குழந்தை ஒன்று உயிரிழந்தது. இந்தத் துயரச் சம்பவம் கடந்த செப்டம்பர் 20ம் தேதி, சனிக்கிழமை நடந்துள்ளது.
ஆந்திராவின் கோரபாடு அருகே உள்ள அம்பேத்கர் குருகுல் பள்ளியில் இந்தச் சம்பவம் நடந்தது. அங்கிருந்த சிசிடிவி கேமராவில் இது தொடர்பான வீடியோ பதிவாகியிருந்த நிலையில், அது இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பி இருக்கிறது. அக்குழந்தை தனது தாயுடன் பள்ளியின் சமையலறைக்குள் செல்கிறது. அங்குக் கொதிக்கும் பால் இருக்கும் பாத்திரம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இருவரும் முதலில் அந்தப் பால் பாத்திரத்தைக் கடந்து சென்றுவிடுகிறார்கள்.
பால் பாத்திரம்
இருவரும் ரூமை விட்டு வெளியே சென்றுவிடுகிறார்கள். அப்போது சில நொடிகளில் அங்கு ஒரு பூனை வருகிறது. அந்தப் பூனையைப் பார்த்த குழந்தை அதன் பின்னால் போகிறது. அம்மா வெளியே நின்றுவிட்ட சூழலில், பூனையைப் பின்தொடர்ந்து, அக்குழந்தை சமையலறைக்குள் வந்தது. பூனை பால் பாத்திரத்திற்கு அருகில் செல்ல, குழந்தை அதைப் பின்தொடர்ந்து சென்றது. பிறகு பூனை அங்கிருந்து போய்விட்டது. ஆனால், குழந்தை பாத்திரத்தை நெருங்கியதும், அது தடுமாறிக் கொதிக்கும் பால் இருந்த பாத்திரத்தில் விழுந்தது.
என்ன நடந்தது
வலியில் அலறிய அந்தக் குழந்தை உடனடியாகக் கதறியபடி பாத்திரத்தில் இருந்து வெளியே வரப் போராடியது. மிகவும் கஷ்டப்பட்டு எழுந்து நின்றது. இருப்பினும் கொதிக்கும் பால் உடல் முழுவதும் பட்டதால் எழுந்து நிற்கவே மிகவும் சிரமப்பட்டது. கதறியபடியே பால் பாத்திரத்தில் இருந்து வெளியே வர முயன்றது. அப்போது குழந்தையின் அலறல் சத்தம் கேட்டுப் பதறிப்போன தாய், ஓடி வந்து குழந்தையைப் பாத்திரத்தில் இருந்து தூக்கினார். இத்துடன் அந்த வீடியோ முடிவடைகிறது.
கொதிக்கும் பாலில் விழுந்த குழந்தைக்கு உடலில் மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்தக் குழந்தையை அருகே இருந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இருப்பினும், அந்தக் குழந்தை சிகிச்சைப் பலனில்லாமல் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அகஷிதா
உயிரிழந்த குழந்தையின் பெயர் அக்ஷிதா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. பள்ளியில் செக்யூரிட்டியாக பணிபுரியும் கிருஷ்ணா வேணியின் மகள் தான் இந்த அக்ஷிதா. சம்பவத்தன்று, கிருஷ்ணா வேணி தனது மகளைப் பள்ளிக்கு அழைத்து வந்திருந்தார். அப்போது தான் இந்த கொடூரம் நடந்துள்ளது.
அக்குழந்தை சூடான பால் பாத்திரத்திற்கு அருகில் சென்று தவறி விழுந்தது. மகளின் அழுகுரல் கேட்ட கிருஷ்ணா வேணி உடனடியாகச் சமையலறைக்கு ஓடிவந்து குழந்தையை வெளியே எடுத்தார். பலத்த காயமடைந்த அக்ஷிதா உடனடியாக அனந்தபூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தீக்காயங்கள் மோசமாக இருந்ததால் குழந்தை மேல் சிகிச்சைக்காக கர்நூல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது. தீவிரச் சிகிச்சை அளித்தும் கூட சிகிச்சை பலனளிக்காமல், அக்ஷிதா உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications