கட்சி நிதி விவகாரம்: தைரியம் இருந்தால் என்னை கைது செய்யுங்கள்! பா.ஜ.க.வுக்கு கேஜ்ரிவால் சவால்!!
டெல்லி: கட்சிக்கு நன்கொடை பெற்ற விவகாரத்தில் தைரியம் இருந்தால் என்னை கைது செய்து பாருங்கள் என்று பாரதிய ஜனதாவுக்கு ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் சவால்விடுத்துள்ளார்.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு வரும் 7-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியே ஆட்சியை கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்புகள் கூறி வருகின்றன.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்கு வந்த ரூ. 2 கோடி நிதி குறித்து சர்ச்சையைக் கிளம்பியது. ஆம் ஆத்மியிலிருந்து பிரிந்து போய் தனி அமைப்பாக இயங்கி வரும் ஆம் ஆத்மி தொண்டர்கள் படை இயக்கம் (அவாம்) என்ற அமைப்புதான் இந்த பிரச்சனையை கிளப்பியது.
அதாவது ஆம் ஆத்மி கட்சிக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 5-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு 4 நிறுவனங்களிடம் இருந்து தலா ரூ.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.2 கோடி நன்கொடை வந்ததாகவும் அந்நிறுவனங்களுக்கு ரூ.50 லட்சம் தருகிற அளவுக்கு பணம் கிடையாது என்றும், இதில் முறைகேடு இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
இந்த பணம் ஹவாலா பணம்தான் என்று மத்திய அமைச்சர்கள் அடுத்தடுத்து குற்றம்சாட்டினர். மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லியும் கையும் களவுமாக ஆம் ஆத்மி கட்சி சிக்கிக் கொண்டது என்று விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் தங்களது கட்சிக்கான நன்கொடை குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்; அப்படி நாங்கள் முறைகேடாக பணம் பெற்றது நிரூபிக்கப்பட்டால் ஆம் ஆத்மியின் அங்கீகாரத்தை ரத்து செய்யுங்கள்.. அதற்கான தண்டனையையும் நாங்கள் ஏற்க தயார் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதத்தை அக்கட்சி அனுப்பி இருந்தது.
இது தொடர்பாக கருத்து தேர்தல் பிரசாரத்தின் போது ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் பேசியதாவது:
மத்தியில் பாரதிய ஜனதா அரசுதானே இருக்கிறது. அனைத்து போலீஸ் மற்றும் விசாரணை அமைப்புகளும் உங்களிடம்தானே இருக்கிறது.
சி.பி.ஐ, அமலாக்கப் பிரிவு, உள்வுத் துறை, வருமான வரித்துறை அனைத்தும் உங்களிடம்தானே இருக்கிறது. உங்களுக்கு தைரியம் இருந்தால் என்னை ஏன் கைது செய்யவில்லை? என் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்துவதால் உங்களுக்கு நடவடிக்கை எடுக்க தைரியம் இல்லை.
பிரதமர் நரேந்திர மோடி என்னை நக்சலைட் என்றும் காட்டுக்குள் அனுப்பி விட வேண்டும் என்றும் கூறுகிறார்.. நான் என்ன நக்சலைட்டா? பாரதிய ஜனதாவின் நுபுர் சர்மாவோ என்னை குரங்கு என்கிறார்..
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்னை திருடன் என்கிறார்.. பாரதிய ஜனதாவின் முதல்வர் வேட்பாளர் கிரண்பேடியோ என்னை நச்சுக் காற்று என்கிறார்... அவர்களுக்கு தைரியமே கிடையாது.. நான் எந்த ஒரு தவறுமே செய்யவில்லை.. எனது மிக மோசமான எதிரிகள் கூட நான் நேர்மையானவன் என்றுதான் கூறுவார்கள்..
லோக்சபா தேர்தலின் போதும் கூட இதேபோல விஷம பிரசாரம் நடந்தது.. கிரண்பேடியைப் பார்த்து கேட்கிறேன்.. என் கண்களை நேருக்கு நேராகப் பார்த்து நான் நேர்மையற்றவன் என்று சொல்லுங்களேன்..
பாரதிய ஜனதாவைப் பொறுத்தவரையில் பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு தரக்கூடாது என்று நினைக்கிறது.. அக்கட்சியைச் சேர்ந்த சிலர் பெண்கள் 4 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்கின்றனர்.. ஒருசிலரோ பெண்கள் ஜீன்ஸ் அணியக் கூடாது; செல்போன் வாங்கக் கூடாது என்கின்றனர்..
இவ்வாறு அரவிந்த் கேஜ்ரிவால் கூறினார்.












Click it and Unblock the Notifications