வங்கதேசத்தில் பரபரப்பு.. அடித்து நொறுக்கப்பட்ட துர்கா பூஜை சிலைகள்.. மூவர் பலி..காரணம் கேட்டால் ஷாக்
டாக்கா: வங்கதேசத்தில் இன்று பல்வேறு இடங்களிலும் துர்கா பூஜை கொண்டாடும் இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இதில் குறைந்தபட்சம் 3 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று நாடு முழுவதும் துர்கா பூஜை கொண்டாடப்படுகிறது. அதேபோல அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளில் உள்ள இந்துக்களும் துர்கா பூஜை கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சூழலில் வங்கதேசத்தில் சில துர்கா பூஜை கொண்டாடத்தின் போது, பல்வேறு இடங்களில் தாக்குதல் நடைபெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

துர்கா பூஜை வன்முறை
வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் இன்று துர்கா பூஜை கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்து தெய்வங்களின் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்தச் சூழலில் பல்வேறு இடங்களில் இப்படி வைக்கப்பட்ட சிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த மோசமான வன்முறைச் சம்பவத்தில் குறைந்தபட்சம் 3 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

என்ன காரணம்
துர்கா பூஜை அன்று இப்படி இரு வேறு சமூகத்தினர் இடையே வன்முறை ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் உள்ள கொமிலா என்ற நகரில் நானுவார் தீகி ஏரி அருகே நடைபெற்ற துர்கா பூஜை நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானைச் சிலர் இழிவுபடுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவின. இதையடுத்து கொமிலா பகுதியில் வைக்கப்பட்டிருந்த துர்கா பூஜை சிலைகள் அடித்து நொறுக்கப்பட்டன.

அத்துமீறிய வன்முறையாளர்கள்
இதைத் தொடர்ந்தே நாட்டில் துர்கா பூஜை நடைபெறும் பல்வேறு இடங்களிலும் வன்முறை பரவியது. வங்கதேசத்தில் உள்ள பல்வேறு புகழ்பெற்ற இந்து கோயில்களும் இதில் சேதப்படுத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வன்முறை தொடர்பான தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்த முயன்றனர். இருப்பினும், போலீசாருக்கு கட்டுப்படாமல் வன்முறையாளர்கள் காவலர்களை நோக்கி கற்களை வீசியதால் பதற்றம் அதிகரித்தது. இதையடுத்து கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், ரப்பர் குண்டுகள் மூலம் துப்பாக்கிச் சூட்டை நடத்தியும் பாதுகாப்புப் படையினர் வன்முறையாளர்கள் கலைத்தனர்.

3 பேர் பலி
இந்த தொடர் வன்முறைச் சம்பவத்தில் குறைந்தபட்சம் 3 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. வன்முறை ஏற்பட்டுள்ள இடங்களில் நிலைமையைக் கட்டுப்படுத்த கூடுதலாகப் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். குரானைச் சிலர் இழிவுபடுத்திவிட்டதாகப் பரவிய பொய்யான தகவல் காரணமாகவே இந்த வன்முறை ஏற்பட்டுள்ளதாக வங்கதேச இந்து ஒற்றுமை கவுன்சில் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மிக மோசமான சம்பவங்கள் நடந்துள்ளதாகக் குறிப்பிட்ட இந்து ஒற்றுமை கவுன்சில், வரும் காலத்தில் என்ன நடக்கும் என உறுதியாகக் கூற முடியாது என்றும் இந்த ஆண்டு துர்கா பூஜையை வங்கதேசத்தில் உள்ள இந்துக்களால் மறக்க முடியாது என்றும் வங்கதேச இந்து ஒற்றுமை கவுன்சில் தெரிவித்துள்ளது.

விசாரணை தீவிரம்
வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான வன்முறைக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை நடத்த வங்கதேச அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள அந்நாட்டின் சிறுபான்மை துறை அமைச்சகம், இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது. மேலும், வங்கதேசத்தில் வாழும் சிறுபான்மையினருக்கு உரியப் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications