‛‛மூடப்படும் கதவுகள்’’.. தினமும் ஒரு மணிநேரம் அயோத்தி ராமருக்கு ஓய்வு..ஏன் தெரியுமா? காரணம் பாருங்க
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் இன்று முதல் தினமும் ஒரு மணிநேரம் மூடப்படும் என்று தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார். கோவில் கருவறையில் உள்ள குழந்தை வடிவ ராமருக்கு 5 வயது தான் ஆகிறது. காலை 4 மணிக்கு தூக்கத்தில் கண்விழிக்கும் அவரால் நீண்ட நேரம் விழித்து கொண்டு இருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. நாகரா கட்டடக்கலை நுட்பத்தில் சிற்ப தூண்களுடன் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த மாதம் கோலாகலமாக கும்பாபிஷேகம் நடந்தது.

கடந்த மாதம் 22ம் தேதி மதியம் 12.15 மணி முதல் 12.45 மணிக்குள் நடந்த கும்பாபிஷேகத்தில் பிரதமர் மோடி பங்கேற்று கோவிலில் நிறுவப்பட்டுள்ள 5 வயது பால ராமர் சிலைக்கு சடங்குகள் செய்து வைத்தார். அதன்பிறகு சிலையின் கண்கள் திறக்கப்பட்டது. தற்போது பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர்.
கோவில் கருவறையில் நிறுவப்பட்டுள்ள இந்த 5 வயது பால ராமர் சிலையை கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் செய்துள்ளார். 51 இன்ச் உயரம் 200 கிலோ எடையில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. ராமர் விஷ்ணுவின் அவதாரமாக உள்ளார். இந்நிலையில் தான் ராமர் சிலையை சுற்றி விஷ்ணுவின் 10 அவதார வடிவங்கள் சிற்பமாக இடம்பெற்றுள்ளது.
கும்பாபிஷேக தினத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. பிரதமர் மோடி உள்பட முக்கிய விவிஐபிக்கள் மட்டுமே தரிசனம் செய்தனர். அதன்பிறகு ஜனவரி 23ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர். அதிகாலையிலேயே பக்தர்கள் கோவில் அருகே குவிந்து தரிசனத்துக்கு தயாராகி விடுகின்றனர்.
இந்நிலையில் தான் தினமும் அயோத்தி ராமர் கோவில் ஒருமணிநேரம் மூடப்படும் என கோவிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‛‛அயோத்தி ராமர் கோவிலில் உள்ள ராமர் 5 வயது குழந்தையாக இருக்கிறார். அவரால் நீண்ட நேரம் கண்விழித்து இருக்க முடியாது. அவருக்கு ஓய்வு என்பது வழங்கப்பட வேண்டி உள்ளது.
இதனால் கோவில் கதவுகளை தினமும் ஒருமணிநேரம் மூடி வைக்க அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று (அதாவது நேற்று) முதல் மதியம் 12.30 மணி - 1.30 மணி வரை கோவில் கதவுகள் சாத்தப்பட்டு குழந்தை ராமருக்கு ஓய்வு அளிக்கப்படும்'' என தெரிவித்துள்ளார்.
மேலும் கோவிலுக்கு தினமும் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வரும் நிலையில் தரிசன நேரம் என்பது நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். முன்னதாக அதிகாலை 4 மணி முதல் குழந்தை பருவ ராமருக்கு பூஜைகள் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications