Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெங்களூர் மாநகராட்சி தேர்தலால் திடீர் ஹீரோக்களான தமிழர்கள்.. வாக்குகளை பெற கட்சிகள் சாகசம்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக தமிழர்களின் வாக்கு உள்ளது. எனவே, திடீர் ஹீரோக்களாக மாறியுள்ள தமிழர்களை நோக்கி பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் படையெடுக்க ஆரம்பித்துள்ளன. அவர்களை கவர தேவையான சாகசங்களை அனைத்து கட்சியினருமே செய்துவருகின்றனர்.

கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில் 'இது கன்னடர்கள் ஏரியா' என்று சில இடங்கள் குறிப்பிடப்படுகின்றன. அந்த அளவுக்கு நகரின் பெரும்பாலான ஏரியாக்களில் வேறு மாநில மக்கள்தான் அதிகமாக வசித்து வருகின்றனர். அதிலும் தமிழர்களும், தெலுங்கர்களும் மிக அதிகம்.

தமிழர், தெலுங்கர்

தமிழர், தெலுங்கர்

காந்திநகர், ஸ்ரீராமபுரம், சாந்திநகர், கே.பி.அக்ரஹாரம், ராஜாஜிநகர் உள்ளிட்ட நகரின் மையப்பகுதிகளிலுள்ள ஏரியாக்களில் தமிழர்களே அதிகம் வசிக்கின்றனர். கேஆர்புரம் உள்ளிட்ட கிழக்கு பெங்களூர் மற்றும் பொம்மனஹள்ளி, ஹெச்எஸ்ஆர் லேஅவுட் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய தெற்கு பெங்களூரில் தெலுங்கர்கள் அதிகம் வாழ்கின்றனர்.

கன்னடர்கள்

கன்னடர்கள்

கெங்கேரி, ராஜராஜேஸ்வரிநகர், ஸ்ரீநகர், பசவனகுடி, பனசங்கரி, விஜயநகர் உள்ளிட்ட மேற்கு பெங்களூர் பகுதிகளில்தான் கன்னடர்கள் முழு அளவில் பெரும்பான்மையோராக உள்ளனர். சிவாஜிநகர், டேனரி ரோடு, ஹெப்பால் போன்ற வடக்கு பெங்களூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உருது பேசும் முஸ்லீம்கள் அதிகம். தமிழர்களும் அங்கு கணிசமாக உள்ளனர்.

கணிசமானோர் தமிழர்களே

கணிசமானோர் தமிழர்களே

எப்படிப்பார்த்தாலும், கன்னடர்கள் முழு அளவில் வசிக்கும் பகுதிகளை தவிர்த்த பிற மொழி, இனத்தவர்கள் வசிக்கும் பகுதிகளில் தமிழர்கள் ஓரளவுக்காவது வசித்துதான் வருகிறார்கள். எனவே பெங்களூரிலுள்ள 28 சட்டசபை தொகுதிகளிலாகட்டும், பெங்களூர் நகரின் 198 வார்டுகளிலாகட்டும், வேட்பாளர்கள் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக தமிழர்களே விளங்குகிறார்கள்.

தமிழர்கள் பலவகை

தமிழர்கள் பலவகை

பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனங்களில் பணியாற்றுவோர், கடைகள், வணிக நிறுவனங்கள் நடத்துவோர், இனிப்பு, காரம் உற்பத்தி செய்வோர், கூலித்தொழிலாளர்களில் கணிசமானோர் தமிழர்கள். ஐடி நிறுவனத்தில் பணிபுரிவோர் சென்னை, திருச்சி, கோவை, மதுரை என பல மாவட்டங்களில் இருந்தும் இங்கு வந்து தங்கியிருந்து பணியாற்றுகின்றனர். பெரும்பாலும் கோரமங்களா, மற்றும் எலக்ட்ரானிக் சிட்டியை சுற்றியுள்ள பகுதிகளில் அவர்கள் தங்கியுள்ளனர். வார இறுதி நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்வது வாடிக்கை என்பதால் அதில் பலருக்கும் ஓட்டுரிமை கிடையாது.

வாக்கு வங்கி

வாக்கு வங்கி

வணிகர்கள் பெரும்பாலும், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்கள் குடும்பத்தோடு இங்கேயே பல ஆண்டுகளாக செட்டில் ஆனவர்கள் என்பதால் ஓட்டுரிமை, ரேஷன்கார்டு உள்ளிட்ட பல வசதிகளை பெற்றுள்ளனர். இதுதவிர கட்டிட கூலி வேலை செய்வோர், ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட அடித்தட்டு மக்களும் வாக்குரிமை பெற்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் வேலூர் உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இந்த இரு பிரிவினரின் வாக்குகள்தான் அரசியல் கட்சிகளுக்கு பொக்கிஷம் போன்றது.

பணம், மது கொடுத்தால் ஓட்டு

பணம், மது கொடுத்தால் ஓட்டு

தமிழர்கள் குறித்து பொதுவாக கர்நாடக அரசியல் கட்சிகளுக்கு ஒரு எண்ணம் உண்டு. மது பாட்டிலும், செலவுக்கு பணமும் கொடுத்தால் அவர்கள் வாக்குகளை வாங்கிவிடலாம் என்பதுதான் அந்த எண்ணம். இதை உறுதி செய்யும்விதமாகவே பல்வேறு சட்டசபை தொகுதியின் வெற்றி தோல்விகள் அமைந்துள்ளன. பெங்களூரில் தொடக்கம் முதலே காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்திவருவதால், தமிழர்களை அக்கட்சி தனது கைக்குள் வைத்துக்கொண்டது. சோனியா காந்தி, ராகுல்காந்தி போன்ற மூத்த தலைவர்கள் பொதுக்கூட்டங்களுக்கு வரும்போது, அங்கு தமிழ் பெண்கள்தான் அதிக அளவில் காசு கொடுத்து அழைத்துவரப்படுவார்கள். இதுபோல கூட்டத்திற்காக கூட்டிவரப்படும் பெண்கள் கூலித்தொழிலாளர்கள் உள்ளிட்ட அடித்தட்டு மக்கள்தான்.

காங்கிரஸ் கைக்குள் தமிழர்கள்

காங்கிரஸ் கைக்குள் தமிழர்கள்

வணிகம் செய்வோர், ஐடி துறையில் உள்ள தமிழர்கள் பெரும்பாலும் இதுபோன்ற கூட்டங்களுக்கு செல்வதில்லை. ஆனால் பெங்களூரில் பெருவாரியாக உள்ளது தமிழகத்தின் வடமாவட்டங்களை சேர்ந்த அடித்தட்டு மக்கள்தான் என்பதால், காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள், மாஜி எம்.எல்.ஏக்கள், பிளாக் தலைவர்கள் அந்த மக்களை அலேக்காக வளைத்து கூட்டங்களுக்கு அழைத்துச் சென்று மாஸ் காட்டி வருகின்றனர்.

தமிழர்களுக்கு இது போதும்

தமிழர்களுக்கு இது போதும்

எனவேதான், கன்னடர்கள், தெலுங்கர்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்தி வாக்குகளை பெறும் கட்சிகள், தமிழர்களுக்கென்று எந்த நலத்திட்டங்களையும் கொண்டுவராமல், பெண்களுக்கு தினசரி 500 ரூபாய், ஆண்களுக்கு பணத்தோடு மது பாட்டில், ரேஷன்கார்டு வழங்குவது போன்றவற்றோடு நிறுத்திக்கொள்கின்றன. சட்டசபை தேர்தலில் தமிழர்களுக்கு சீட் தருவதுமில்லை.

தமிழர் பகுதி மோசம்

தமிழர் பகுதி மோசம்

பெங்களூரில் தமிழர்கள் பெருவாரியாக வசிக்கும் பகுதிகளில் குடிநீர் சிக்கல், ஓட்டை உடைசல் சாலைகள் இருப்பதற்கும், கன்னடர்கள், தெலுங்கர்கள் பகுதிகள் ஜொலிப்பதற்கும் காரணம், தமிழர்கள் வாக்குகளை பணம் கொடுத்து வாங்கிவிடலாம் என்ற அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுதான். ஆனால், இந்த எண்ணத்தை மாற்றி, தமிழர்களுக்கு உரிமையை கொடுத்துதான் வாக்குகளை கேட்க வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தவர் பாஜக முன்னாள் முதல்வர் எடியூரப்பா.

திருவள்ளுவர் சிலை

திருவள்ளுவர் சிலை

பெங்களூரில், 18 வருடங்களாக மூடப்பட்டு திறக்க முடியாமல் இருந்த தெய்வப் புலவர் திருவள்ளுவர் சிலையை, கன்னடர்கள் எதிர்ப்பை மீறி திறந்து வைத்தார் அப்போதைய முதல்வர் எடியூரப்பா. தமிழக முதல்வராக அப்போது பதவி வகித்த, கருணாநிதியை விழாவுக்கு அழைத்து, அண்ணன் என்று அழைத்து, பெருமிதம் காட்டினார். கடந்த மாநகராட்சி தேர்தலுக்கு சில மாதங்கள் முன்புதான் இந்த வைபவம் நடந்தது.

தமிழர் மரியாதை காத்த எடியூரப்பா

தமிழர் மரியாதை காத்த எடியூரப்பா

தமிழர்கள் வாக்குக்காகவே எடியூரப்பா இதை செய்தார் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். ஆனால், மதுவுக்கும், பணத்துக்கும் தமிழன் வாக்களிப்பான் என்று நினைத்த காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில், சுயமரியாதையை காப்பாற்றி கொடுத்தால் தமிழன் வாக்களிப்பான் என்று நம்பிய கர்நாடகாவின் முதல் தலைவர் எடியூரப்பா.

கைகொடுத்த தமிழர்கள்

கைகொடுத்த தமிழர்கள்

எடியூரப்பாவின் நம்பிக்கையை தமிழர்கள் வீணாக்கவில்லை. பாரம்பரியமாக காங்கிரசின் கைக்குள் இருந்த தமிழர்கள் அக்கட்சிக்கு வாக்களித்தாலும், வணிக பிரிவு தமிழர்கள் பாஜகவுக்கே வாக்களித்தனர். அப்போது, எடியூரப்பாவின் அலை மாநிலத்தில் வீசிய காரணத்தால், கன்னடர்கள், தெலுங்கர்கள், முஸ்லிம்கள் வாக்குகளும் பாஜகவுக்கே கிடைக்க, முழு பெரும்பான்மையுடன் பெங்களூர் மாநகராட்சியை முதல்முறையாக பிடித்தது பாஜக.

காங்கிரசுக்கு வழிகாட்டிய எடியூரப்பா

காங்கிரசுக்கு வழிகாட்டிய எடியூரப்பா

எடியூரப்பாவின் இந்த யுக்தி, தற்போது காங்கிரசின் கண்களையும் திறந்துவிட்டுள்ளது. எடியூரப்பாவை போன்றே தமிழர்களுக்கு உரிய மரியாதை கொடுத்தே வாக்குகளை வாங்க வேண்டும். பணத்தை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்ற நிலைப்பாட்டை காங்கிரஸ் எடுத்துள்ளது. அதன் ஒருபகுதியாக, பெங்களூர் மாநகர தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக, கன்னடம், ஆங்கிலத்தோடு சேர்த்து, தமிழிலும் தேர்தல் வாக்குறுதி பட்டியலை வெளியிட்டுள்ளது காங்கிரஸ்.

பிரச்சாரத்தில் குஷ்பு

பிரச்சாரத்தில் குஷ்பு

தமிழகத்தில் இருந்து குஷ்பு, திருநாவுக்கரசர் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை பெங்களூரில் பிரச்சாரம் செய்ய வைத்தும், செய்தியாளர்களை சந்திக்க வைத்தும் தமிழர்கள் வாக்குகளை ஈர்க்க முயன்றுவருகிறது காங்கிரஸ். இதுதவிர லோக்கல் காங்கிரஸ் பிரமுகர்கள் தங்களுக்கே உரிய பாணிகளில் கூலித்தொழிலாளர்களை ஈர்க்கும் வேலையிலும் ஈடுபட்டுவருகின்றனர். தமிழரான எஸ்.எஸ்.பிரகாசத்துக்கு, தொழிலாளர் பிரிவு தலைவர் பதவியை கொடுத்து, காங்கிரஸ்-தமிழர் ஒருங்கிணைப்பு பணியையும் அவரிடம் ஒப்படைத்துள்ளார் முதல்வர் சித்தராமையா. தமிழர்களுக்கு தேர்தலில் போட்டியிட இம்முறை கணிசமான சீட்டுகளையும் காங்கிரஸ் அளித்துள்ளது.

எடியூரப்பா பிரச்சாரம்

எடியூரப்பா பிரச்சாரம்

தமிழர்கள் வாக்குகளை பெற்று ருசிபார்த்த பாஜக மட்டும் விட்டுவிடுமா என்ன,.. இங்கும் தமிழ் வேட்பாளர்களுக்கு கணிசமான சீட்டுகள் தரப்பட்டுள்ளன. பாஜகவின் தேசிய துணை தலைவர் பதவியிலுள்ள எடியூரப்பாவே, நேரடியாக பிரச்சார களம் வந்து, தமிழர் பகுதிகளில் வார்டு வார்டாக வாக்குகள் கேட்டு பிரச்சாரம் நடத்திவருகிறார். அவர்கள் பிரச்சாரத்தில் திருவள்ளுவரே கருப்பொருளாக உள்ளார்.

இறங்கி வந்த தேவகவுடா

இறங்கி வந்த தேவகவுடா

தேவகவுடா தலைமையிலான மஜத தீவிர கன்னட ஆதரவு கட்சியாக பார்க்கப்படுகிறது. ஆனால், அவர்களும் இம்முறை தமிழ் வேட்பாளர்களுக்கு கணிசமாக சீட் கொடுத்துள்ளனர். தமிழர் பகுதிகளில் விழுந்துவிழுந்து வேலை பார்க்கின்றனர். இதனிடையே, தமிழர் வேட்பாளராக நிற்கும் பகுதிகளில் தமிழர்களுக்கும், அப்படி இல்லாத பகுதிகளில் நல்ல பணியாற்றுவோருக்கும் வாக்களிக்குமாறு தமிழ்ச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழர்கள் குரல் ஒலிக்குமா?

தமிழர்கள் குரல் ஒலிக்குமா?

அவ்வாறு தமிழர்கள் வாக்களித்தால், மாநகராட்சியில் இம்முறை தமிழ் கவுன்சிலர்கள் குரல் ஓங்கி ஒலிக்கும் என்று எதிர்பார்க்கலாம். கடந்த முறை சுமார், 20 வார்டுகளில் தமிழ் வேட்பாளர்கள் வெற்றி வாகை சூடினர். இம்முறை அது 40 வார்டுகளை தாண்ட வேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு. 198 வார்டுகள் கொண்ட பெங்களூர் மாநகராட்சிக்கான தேர்தல் வாக்குப்பதிவு வரும் 22ம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 25ம் தேதி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+