கர்நாடக அரசின் அடுத்த அதிரடி.. பெங்களூர் சிறை சூப்பிரண்டென்ட் கிருஷ்ணகுமார் டிரான்ஸ்பர்!
பெங்களூர்: பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான புகாரில் சிக்கிய சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட நிலையில் பெங்களூர் மத்திய சிறை தலைமை சூப்பிரண்டென்ட் கிருஷ்ணகுமார் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கும் எந்த பதவியும் கொடுக்கப்படவில்லை.
பெங்களூரு சிறையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிறைத்துறை டிஐஜி ரூபா வழங்கிய அறிக்கையை தொடர்ந்து பெரும் புயல் வீசி வருகிறது. இந்த நிலையில், மூத்த ஓய்வு பெற்ற அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர் தனது விசாரணையை தொடக்க உள்ள நிலையில், புகார் தெரிவித்த ரூபா மற்றும் புகாருக்கு உள்ளான டிஜிபி சத்யநாராயணராவ் ஆகியோர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கர்நாடக அரசு இன்று வெளியிட்டது.
ரூபாவுக்கு, சாலை போக்குவரத்து பாதுகாப்பு கமிஷனர் மற்றும் டிஐஜி பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், சத்யநாராயணராவ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை.
இதனிடையே, இன்று மதியம் மற்றொரு பணியிடமாற்ற உத்தரவை மாநில அரசு வெளியிட்டது. இதன்படி, பெங்களூர் மத்திய சிறை தலைமை சூப்பிரண்டென்ட் கிருஷ்ணகுமார் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, அனிதா என்ற பெண் அதிகாரி சூப்பிரண்டென்ட்டாக நியமிக்கப்பட்டுள்ளார். சிறைத்துறை ஏடிஜிபியாக, என்.எஸ்.மேக்ரிக் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரூபா அறிக்கையை தொடர்ந்து ஒரே நாளில் அதிரடியாக பல மாற்றங்களை செய்து வருகிறது கர்நாடக அரசு.












Click it and Unblock the Notifications