பெங்களூரு பள்ளிக்குள் வெடித்து சிதறிய டெட்டனேட்டர்: மூன்று மாணவர்கள் காயம்
பெங்களூரு: குப்பை தொட்டியில் கிடந்த டெட்டனேட்டர் வெடிபொருளை பள்ளிக்குள் கொண்டுவந்தபோது அது வெடித்து சிதறியதில் மூன்று மாணவர்கள் காயமடைந்த சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.
பெங்களூரு-ஒசூர் சாலையிலுள்ளது ரூபேன அக்ரஹாரா பகுதி. இங்கு ஸ்ரீ சாய்பாபா ஆரம்ப பள்ளி இயங்கிவருகிறது. இன்று காலை பள்ளிக்கு வந்த கிரண், சூர்யா, சிவநாத் ஆகிய 4ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மூன்று பேர் பள்ளி அருகே இருந்த குப்பை தொட்டியில் வித்தியாசமான ஒரு பொருள் இருப்பதை பார்த்துள்ளனர். அந்த பொருளில் ஒயர் சுற்றப்பட்டிருந்ததையும் பார்த்தனர்.

அது பாறைகளை உடைக்க பயன்படுத்தும் டெட்டனேட்டர் குண்டு என்பது தெரியாமல் குப்பை தொட்டியில் இருந்த டெட்டனேட்டர்களை எடுத்துக் கொண்டு பள்ளிக்குள் சென்றுள்ளனர் அம்மூன்று மாணவர்களும்.
பள்ளிக்குள் உள்ள சுவிட்ச் போர்டில் டெட்டனேட்டரின் ஓயரை இணைத்து சுவிச் போட்டுள்ளனர். அவ்வளவுதான் அது வெடித்து சிதறியது. மூன்று மாணவர்களும் காயமடைந்து அலற ஆரம்பித்தனர். தகவல் அறிந்ததும், மாணவர்கள் மூவரையும் மருத்துவமனையில் சேர்த்த பள்ளி நிர்வாகத்தினர், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
கடந்த 28ம்தேதி பெங்களூரு எம்ஜி ரோட்டில் வெடிகுண்டு வெடித்து பெண் உயிரிழந்த நிலையில், இதுவும் வெடிகுண்டாக இருக்கலாமோ என்ற சந்தேகத்தில், உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தில் குவிந்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இறுதியில் வெடித்தது டெட்டனேட்டர் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவம் நடைபெற்ற பள்ளிக்கு சற்று தொலைவில் கல் குவாரிகள் அதிகம் உள்ளன. அங்கு பாறையை தகர்க்க பயன்படுத்த வாங்கப்பட்ட டெட்டனேட்டர்தான் குப்பை தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. எனவே சுற்றுவட்டாரத்திலுள்ள குவாரிகளில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து மடிவாளா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் பெங்களூருவாசிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications