"கோமியம் குடித்தால் மட்டுமே நவராத்திரி நிகழ்ச்சிக்கு அனுமதி.." பாஜக நிர்வாகியின் அறிவிப்பால் சர்ச்சை!
இந்தூர்: நவராத்திரி பண்டிகை வரும் அக். 3ம் தேதி முதல் 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு நடக்கும் நிகழ்ச்சியில் கோமியம் குடிப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி தரப்படும் என்று பாஜக நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்துக்கள் மட்டுமே வருவதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இந்துக்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி. மொத்தம் 9 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கும்.

இந்தாண்டு அக். 3ம் தேதி முதல் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை வெகு சிறப்பாகக் கொண்டாட நாடு முழுக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
நவராத்திரி: அதன்படி மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரில் பாஜக சார்பில் நவராத்திரி விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு உள்ளூர் பாஜக நிர்வாகி பிறப்பித்த உத்தரவு தான் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதாவது கர்பா நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குக் கோமியம் குடிக்கும் மக்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று அம்மாவட்ட பாஜக தலைவர் சிந்து வர்மா கூறியதே இந்த சர்ச்சைக்குக் காரணம்.
இதற்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இந்துவாக இருக்கும் யாரும் கோமியம் குடிப்பதை எதிர்க்க மாட்டார்கள் என்று தடாலடியாகப் பேசியுள்ளார் சிந்து வர்மா இது தொடர்பாக அவர் பேசுகையில், "கர்பா நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் பக்தர்களை அனுமதிக்கும் முன், அவர்கள் கோமியத்தைக் குடிப்பதை உறுதி செய்யுமாறு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம்" என்றார்.
இந்துக்கள் மட்டும்: இது சர்ச்சையான நிலையில், இந்துக்கள் மட்டுமே வருவதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அவர் கூறுகையில், "ஆதார் அட்டையைக் கூட திருத்த முடியும். ஆனால், ஒருவர் இந்துவாக இருந்தால் மட்டுமே அவர் கோமியத்தைக் குடிப்பார். அதன் பிறகு கர்பா நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அனுமதிக்கலாம். உண்மையான இந்து கோமியம் குடிக்க மறுக்க மாட்டார்" என்று தனது நிலைப்பாட்டில் உறுதியாகவே உள்ளார்.
அதேநேரம் வர்மாவின் இந்த உத்தரவுக்கு உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேவையில்லாமல் நவராத்திரி பண்டிகையை வைத்து அரசியல் செய்ய முயல்வதாகவும் சமூகத்தில் பிளவை ஏற்படுத்த பாஜக போடும் திட்டம் தானே தவிர வேறு எதுவும் இல்லை என்றும் காங்கிரஸ் சாடியுள்ளது.
நெட்டிசன்கள்: இணையத்திலும் நெட்டிசன்கள் இரு வேறு கருத்துகளையே கூறி வருகிறார்கள். ஒரு தரப்பினர் கோமியம் குடிப்பது இந்துக்களின் வழக்கம் தான்.. வர்மாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கத் தேவையில்லை என்று கூறி வருகிறார்கள். அதேநேரம் மற்றொரு தரப்பு பாஜக இந்து பண்டிகைகளை வைத்து அரசியல் செய்வதாகவும் இதைத் தலைமை கண்டிக்க வேண்டும் என்ற விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications