மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்: எதிர்பார்ப்புகள் என்னென்ன?
டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட் ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. விவசாயிகள், முதலீட்டாளர்கள், நிறுவனங்கள், மாதாந்திர சம்பளம் பெறுவோர் என அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்புகளையும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நிறைவேற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பொருளாதார சர்வேயை தொடர்ந்து இன்று நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்கிறார். இந்த ஆண்டு தமிழகம், மேற்கு வங்கம், புதுவை, அசாம்,கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. எனவே இன்று தாக்கல் ஆகும் மத்திய பட்ஜெட்டில் சலுகைகள் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடுத்தர வர்க்க மக்கள் அதிக அளவில் வருமான வரி செலுத்துகிறார்கள். அவர்களை கவரும் வகையில் வருமான வரிவிலக்கில் உச்ச வரம்பு உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வருமானவரி விலக்கு உச்சவரம்பு 2.5லட்சத்தில் இருந்து ரூ3லட்சமாக அதிகரிக்கப்படும் என தெரிகிறது.
வருமான வரி கணக்கிடுவதில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது எனலாம். மேலும் மின்னணு பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், நுகர் பொருட்கள் போன்றவற்றின் தயாரிப்புகளுக்கு வரிச்சலுகைகள் அளிக்கும் வாய்ப்பு உள்ளது.

மானியங்கள் ரத்து?
மத்திய அரசுக்கு மானிய சுமைகள் அதிகரித்துள்ளதால் குறிப்பிட்ட அளவிற்குமேல் வருமானம் உள்ளவர்களுக்கு மானியங்கள் ரத்து செய்யப்படும் என்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் நிறுத்தப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இது தவிர மானிய சிலிண்டர்கள் எண்ணிக்கையும் குறைக்கப்படலாம்.

அறிவிக்க வாய்ப்பு
கிராமப்புற வேலை உறுதித் திட்டத்துக்கான செலவை தொடர்வது, பயிர் காப்பீட்டுத் திட்டத்தை விரிவுப்படுத்துவது குறித்த அறிவிப்புகளை, அவர், பட்ஜெட்டில் வெளியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அன்னிய முதலீட்டாளர்கள்
சமூக திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிர்ப்பந்தமும், சீர்திருத்தங்களை வேகப்படுத்துவதற்காக, அன்னிய முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டிய நெருக்கடியும் அவருக்கு உள்ளது.

நிதியமைச்சர் சமாளிப்பாரா?
அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த 1.02 லட்சம் கோடி ரூபாய் என்ற பெருந்தொகையை ஒதுக்க வேண்டிய அவசியம் உள்ளது. நிதிப் பற்றாக்குறையை, 3.5 சதவீதமாகக் குறைக்கப் போவதாக, கடந்த பட்ஜெட்டில் அறிவித்த அமைச்சர் ஜெட்லி, அதில் சமரசம் செய்து கொள்ளாமல், இப்பிரச்னையை எப்படி கையாளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

எதிர்பார்ப்புகள்
'கார்ப்பரேட் வரிகளை, 30 சதவீதத்தில் இருந்து, 25 சதவீதமாக படிப்படியாகக் குறைக்கப்படும்' என, 2015ல், வெளியிட்ட அறிவிப்பை நிறைவேற்ற, இந்த பட்ஜெட்டில் நடவடிக்கைகளை அறிவிப்பார் என தெரிகிறது. முக்கியமாக, வரிச் சலுகைகளை வாபஸ் பெறுவது தொடர்பான முக்கிய அறிவிப்பு, பட்ஜெட்டில் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மறைமுக வரிகளுக்கு வாய்ப்பு
வருவாயைப் பெருக்க, மறைமுக வரிகள் உயர்த்தப்படலாம். புதிய வரிகள் அறிமுகப்படுத்தப்படலாம். சேவை வரி, 14.5 சதவீதத்தில் இருந்து, 18 சதவீதமாக அதிகரிக்கப்படலாம்.

இறக்குமதி வரிகள்
உள்கட்டமைப்பு பணிகளுக்கு தனியார் பங்களிப்பு எதிர்பார்த்த அளவில் கிடைக்காத காரணத்தால், இதற்காக கூடுதலாக அரசு செலவழிக்க வேண்டியிருக்கும். சர்வதேச அளவில் சரிந்து வரும் கச்சா எண்ணெய் விலை அடுத்த ஆண்டில் உயர வாய்ப்பில்லை என்பதால் 2011ம் ஆண்டு விலக்கிக் கொள்ளப்பட்ட கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் மீதான இறக்குமதி வரி மீண்டும் விதிக்கப்படலாம்.

ஏற்றுமதியை ஊக்குவிக்க சலுகைகள்
ஏப்ரல்-செப்டம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மூலம் ₹2.21 லட்சம் கோடி ஏற்றுமதி நடைபெற்றுள்ளது. முந்தைய ஆண்டில் இது ₹4.63 லட்சம் கோடியாக இருந்தது. எனவே ஏற்றுமதியை ஊக்குவிக்க சில சலுகைகள் அறிவிக்கப்படலாம்.

புதிய செஸ் வரிகள்?
துாய்மை இந்தியா திட்டத்துக்காக, 'செஸ்' வரி விதிக்கப்பட்டதைப் போல, ஸ்டார்ட் அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா திட்டங்களுக்காக புதிய, செஸ் வரிகள் அமல்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications