உச்சநீதிமன்ற தீர்ப்பு- "விஷத்தை கொடுங்க.." கர்நாடகாவில் ஆவேச போராட்டங்கள்- மண்டியாவில் மறியல்!
மண்டியா: காவிரியில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5,000 கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தை கர்நாடகா அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக கன்னட விவசாயிகள், கன்னட அமைப்புகள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.
உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு காவிரியிலிருந்து 24,000 கன அடி நீர் வழங்கக்கோரி வழக்கு தொடர்ந்தது. ஆனால் கர்நாடகாவில் வறட்சி நிலவுகிறது; தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறக்க முடியாது எனவும் காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தடை கோரியும் கர்நாடகா மனுத் தாக்கல் செய்தது.

கர்நாடகாவின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 5,000 கன அடி நீரை திறக்க உத்தரவிட்டது. ஏற்கனவே காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு திறக்க கூடாது என கன்னட விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு கன்னட விவசாயிகளை கடும் அதிருப்தி அடைய வைத்தது.
கர்நாடகா மாநிலம் மண்டியாவில், மாவட்ட விவசாயிகள் நலக் குழுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். மண்டியா விஸ்வேஸ்வரய்யா சிலை முன் அவர்கள் போராட்டம் நடத்தினர். கர்நாடகா அரசு, தமிழ்நாட்டுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை அவர்கள் எழுப்பினர். இந்தப் போராட்டம் தொடருகிறது.

மண்டியாவில் ஹிதரக்ஷன சமிதியினர் இருசக்கர வாகனப் பேரணி நடத்தினர். மைசூர்- பெங்களூர் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டமும் நடத்தினர். இதேபோல மைசூரிலும் காவிரி பிரச்சனையை முன்வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். மேலும் கர்நாடகா எம்.பிக்கள் ஒட்டுமொத்தமாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இப்போராட்டங்கள் குறித்து கன்னட விவசாயிகள் சங்கத் தலைவர் சுனந்த ஜெயராம் கூறியதாவது: உச்சநீதிமன்ற உத்தரவானது மண்டியா மாவட்ட விவசாயிகளுக்கு பேரிடியாக இருக்கிறது. கர்நாடகாவுக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மண்டியா விவசாயிகள் நிராகரிக்கிறோம். இத்தீர்ப்பை ஏற்கவே முடியாது. குடிக்கவே நீர் இல்லாத போது தமிழ்நாட்டுக்கு எப்படி நீரை திறந்துவிட முடியும்? கர்நாடகாவில் வறட்சி நிலவுவதை உச்சநீதிமன்றத்தில் எடுத்து வைக்க கர்நாடகா அரசு தவறிவிட்டது. எங்களுக்கு விஷத்தை கொடுத்து கொன்றுவிடலாம் கர்நாடகா அரசு. இவ்வாறு சுனந்த ஜெயராம் கூறினார்.













Click it and Unblock the Notifications