"மீண்டும் முதல்வராக அவைக்குள் நுழைவேன்.." 3 ஆண்டு சபதம்.. சொல்லியடித்த சந்திரபாபு நாயுடு! பின்னணி
விசாகப்பட்டினம்: சந்திரபாபு நாயுடு நேற்று முதல்வராக ஆந்திரா சட்டசபைக்கு நுழைந்தார். இதன் மூலம் அவர் சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த சபதத்தை முடிந்துள்ளார். அதென்ன சபதம். இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
ஆந்திர மாநிலத்திற்குக் கடந்த மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடந்தது. இதன் முடிவுகள் ஜூன் மாதம் வெளியான நிலையில், இதில் சந்திரபாபு நாயுடு மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தார்.

ஆந்திரா தேர்தல்: ஆந்திராவில் மொத்தம் 175 தொகுதிகள் உள்ள நிலையில், அதில் 135 தொகுதிகளில் தெலுங்கு தேசம் வெற்றி பெற்றது. சந்திரபாபு நாயுடு கூட்டணியில் இருந்த பவன் கல்யாணின் ஜனசேனா 21 சீட்களில் வென்ற நிலையில், பாஜக 8 சீட்களில் முன்னிலையில் இருக்கிறது.. ஆளும் கட்சியாக இருந்த ஒஎய்எஸ்ஆர் காங்கிரஸ் வெறும் 11 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியை ஆட்சியைப் பிடித்த நிலையில், சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாக முதல்வராகப் பதவியேற்று இருக்கிறார். ஆந்திராவில் 16-வது சட்டப் பேரவையின் தொடக்கக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நேற்று தான் அனைத்து எம்எல்ஏக்களும் பதவியேற்றுக் கொண்டனர். இடைக்கால சபாநாயகர் அவையைச் சனிக்கிழமை காலை 10.30 மணி வரை ஒத்திவைத்தார்.
சபதம்: இதன் மூலம் முதல்வரான பிறகே ஆந்திர சட்டசபையில் நுழைவேன் என்று தனது சபதத்தை நிறைவு செய்துள்ளார். அதென்ன சபதம்.. 3 ஆண்டுகளுக்கு முன்பு அவர் எதற்காக இதுபோல சபதம் எடுத்தார் என்பது குறித்து நாம் பார்க்கலாம். கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆந்திரா சட்டசபையில் இருந்து தான் அசிங்கப்படுத்தி வெளியேற்றப்பட்டதாக சந்திரபாபு நாயுடு கூறியிருந்தார்.
என்ன நடந்தது: அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, தன்னை பற்றி ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொடர்ந்து இழிவுபடுத்தி வருவதாகக் குறிப்பிட்ட சந்திரபாபு நாயுடு கண்ணீர்விட்டு அழுதார். அவர் மேலும் கூறுகையில், "கடந்த 2.5 ஆண்டுகளாகத் தொடர்ந்து என்னை அவமானப்படுத்தி வருகிறார்கள்.. நான் அமைதியாக இருந்தேன். ஆனால், இப்போது எனது மனைவி குறித்தும் அவதூறாகப் பேசுகிறார்கள்.. என் மனைவிக்கும் அரசியலுக்கும் தொடர்பே இல்லை.. நான் மரியாதையுடன் வாழ்ந்து வருகிறேன். இதையெல்லாம் கேட்டு சும்மா இருக்க முடியாது.
எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசினார்கள். நான் பதில் அளிக்க வந்த போது திட்டமிட்டு மைக்கை ஆஃப் செய்துவிட்டனர். பதில் சொல்லக் கூட எனக்கு வாய்ப்பு தரவில்லை.. இதன் காரணமாகவே நான் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தேன். ஆனால், இப்போது நான் சொல்கிறேன். மீண்டும் ஆட்சியைப் பிடித்த பிறகு முதல்வராகவே இந்த அவைக்குத் திரும்புவேன். அதுவரை ஆந்திர சட்டசபைக்குள் கால் வைக்க மாட்டேன்" என்று சபதம் ஏற்று இருந்தார்.
நிறைவேறிய சபதம்: அதன் பிறகு கடந்த மூன்று ஆண்டுகள் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் அவர் ஆந்திர சட்டசபைக்குச் செல்லவில்லை. 3 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ஆந்திர சட்டசபைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதல்வராகக் கடந்த ஜூன் 12ஆம் தேதி பதவியேற்ற நிலையில், நேற்று முதல்வராகவே அவர் ஆந்திர சட்டசபைக்குள் நுழைந்தார். இதன் மூலம் சந்திரபாபு நாயுடு தனது சபதத்தை நிறைவேற்றி உள்ளார்.












Click it and Unblock the Notifications