உத்தரப் பிரதேசத்தின் 24 கோடி மக்களின் நம்பிக்கை.. மருத்துவத்துறையை பாராட்டிய யோகி ஆதித்யநாத்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மருத்துவத்துறை தொடர்பான மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், "மாநிலத்தில் உள்ள 25 கோடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து வரும் மருத்துவ துறைக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மாநாடு மருத்துவ துறையில் முக்கிய மைல் கல்லாக அமையும்" என கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இந்நிலையில் லக்னோ கிங் ஜார்ஜ் மருத்துவக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற இரத்தமாற்ற தொழில்நுட்பம் குறித்த 'டிரான்ஸ்கான் 2023' மாநாட்டில் பங்கேற்ற யோகி ஆதித்யநாத், மாநிலத்தின் மருத்துவத்துறைக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். குறிப்பாக ரத்த மாற்ற துறையில் பணிபுரியும் நிபுணர்களை பாராட்டிய அவர், இந்த மாநாடு ஒரு முக்கிய மைல் கல்லாக அமையும் என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்த துறையில் பணிபுரியும் நிபுணர்களுக்கு விருது வழங்கப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், 25 கோடி உத்திரப் பிரதேச மக்கள் மற்றும் மக்களுக்கு சிறந்த சுகாதார வசதிகளை வழங்க மாநில மற்றும் மத்திய அரசுகள் இரண்டும் உழைத்து வருகின்றன. மருத்துவத்துறையில் புதி தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். அதேபோல மக்களிடையே ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கெனவே அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்த மாநில அரசு சார்பில் ஏராளமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் இந்த மாநாடு உத்தரப் பிரதேச மருத்துவத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications