கலவர பெங்களூரில் சிக்கிக் கொண்ட சின்ன பாப்பா சித்ரா.. சீரியலுக்கு போய் தப்பி வந்த திரில் அனுபவம்!
சென்னை: நமது சென்னையில் கர்நாடகா எண்களை கொண்ட பல வாகனங்கள் சுதந்திரமாக ஓடுகின்றன. ஆனால், அங்கே நமது வாகனங்களைக் கண்டாலே அடித்து உடைக்கிறார்கள். இந்த வெறுப்புணர்ச்சி கன்னட அமைப்பினரிடேயே மாறவேண்டும். அங்கிருக்கும் தமிழர்கள் பழையபடி நிம்மதியான நிலைக்கு வரவேண்டும் என்று சின்னத்திரை நடிகை சித்ரா கூறியுள்ளார்.
சின்ன பாப்பா பெரிய பாப்பா, டார்லிங் ஆகிய தொடர்களில் நடித்து வரும் பிரபலமான சீரியல் நடிகை சித்து என்று அழைக்கப்படும் சித்ரா.
சமீபத்தில் சீரியல் ஷூட்டிங்குக்காக பெங்களூரு சென்றவர் உயிர்பிழைத்தால் போதும் என்றுசென்னைக்கு தப்பி வந்திருக்கிறார். அந்த பதற்றம் நிறைந்த அனுபவத்தை அவரே கூறியுள்ளார்.

பெங்களூருவில் பெரியபாப்பா
பெங்களூரு செல்வது எப்போதும் எனக்கு இனிமை நிறைந்த அனுபவமாக இருக்கும். அதன் ஜில்லான கிளைமேட் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் மிகவும் உற்சாகத்துடன் செல்வேன். இந்த முறை மிகவும் கசப்பான அனுபவமாக மாறிவிட்டது. பெங்களூரு கன்னட சீரியலை ரீமேக் செய்து தமிழில் எடுப்பதற்கான படப்பிடிப்பு கிட்டத்தட்ட 15 நாட்கள் நடந்து கொண்டிருந்தது. கடைசி இரண்டு நாட்கள் ஷூட்டிங்கை நடத்த முடியாமல் அறைக்குள் அடைந்து கிடக்க வேண்டியிருந்தது. தமிழ் பேசுபவர்களை, தமிழ்நாட்டின் பதிவு எண் உள்ள வாகனங்களைத் தேடி தேடி கன்னட அமைப்பினர் தாக்குதல் நடத்தினார்கள். கார்களை அடித்து நொறுக்கினார்கள்.

மொழி பிரச்சினை
நான் உள்பட இன்னும் சிலர் எங்கள் சொந்த காரில் சென்றிருந்தோம். எனது கார், புதிய கார் என்பதால் இந்த பிரச்னையைக் கேள்விப்பட்டவுடன் ஒரு அண்டர் கிரவுண்டில் ஒளித்து வைத்து விட்டேன். எனக்கு கன்னட மொழியும் பேச தெரியாது. கன்னட மொழி பேசினால் எந்த பிரச்னையும் செய்யாமல் போய் விடுகிறார்கள்.

படப்பிடிப்பு நிறுத்தம்
நாங்கள் ஷூட்டிங் நடத்திய இடத்தில் இருந்து தங்கும் இடத்துக்குச் செல்ல 10 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டும். ஒவ்வொரு நாளும் என்ன நடக்குமோ என பயந்துதான் அறைக்குத் திரும்புவோம். இறுதி இரண்டு நாட்கள் வன்முறை பெங்களூருவில் அதிகரிக்க, சென்னை திரும்பி விடுவது என எங்கள் படப்பிடிப்பு குழுவினருடன் இணைந்து முடிவெடுத்தோம். பேருந்து போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டதால் ரயிலில் டிக்கெட் எடுத்து படப்பிடிப்பு குழுவினரை அனுப்பி வைத்தார்கள்.

காரில் பயணம்
நான் சொந்த காரில் சென்றதால் அதில் தான் ஊர் திரும்பியாக வேண்டும் என்ற நிர்பந்தம் இருந்தது. நண்பர்கள் சிலர் காரில் போவது பெரிய ஆபத்து. தமிழர்களை கண்டாலே தாக்குகிறார்கள் என்றார்கள். இதனால் எங்களுடன் காரில் கன்னடம் பேச படிக்க தெரிந்த ஒருவரை அமர்த்திக் கொண்டோம். ஆனால், அவர் தமிழர்தான்.

ஒளிந்து ஒளிந்து வந்தோம்
கர்நாடகா எல்லையில் செக்போஸ்ட் ஒவ்வொன்றாக வரும்போது காருக்குள் நானும், உதவியாளர் பெண்ணும் கிட்டத்தட்ட ஒளிந்த நிலையில் இருப்போம். கன்னடம் தெரிந்த நண்பர் மட்டும்தான் வெளியில் தெரிவார். இப்படி தீவிரவாதிகள் போல ஒளிந்து கொண்டேதான் வந்தோம். ஓசூர் வழியாக சென்னை வரும் பாதை பதற்றம் நிறைந்ததாக இருந்ததால் ஆந்திரா எல்லை சித்தூர் வழியாக சென்னை வரும் பாதையைப் பிடித்தோம். தமிழக எல்லை வந்தவுடன்தான், அப்பாடா, உயிர் பிழைத்தோம் என பெருமூச்சை இழுத்துவிட்டேன்.

மனநிலை மாறவேண்டும்
நமது சென்னையில் கர்நாடகா எண்களை கொண்ட பல வாகனங்கள் சுதந்திரமாக ஓடுகின்றன. ஆனால், அங்கே நமது வாகனங்களைக் கண்டாலே அடித்து உடைக்கிறார்கள். இந்த வெறுப்புணர்ச்சி கன்னட அமைப்பினரிடேயே மாறவேண்டும். அங்கிருக்கும் தமிழர்கள் பழையபடி நிம்மதியான நிலைக்கு வரவேண்டும். ஒற்றுமை வந்தால் அடுத்த முறை பெங்களூரு செல்லும்போது மிகுந்த உற்சாகத்துடன் செல்வேன் என்று கூறுகிறார் சித்து.

தமிழகம் வரும் கன்னட நடிகைகள்
தமிழக சீரியலில் ஏராளமான கன்னட நடிகைகள் நடித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் மிகவும் பாதுகாப்பாக சென்னை வந்து பெங்களூருவிற்கு திரும்பி செல்கின்றனர். ஆனால் தமிழ் நடிகர்கள்தான் பெங்களூரு, மைசூருவில் தாக்கப்படுகின்றனர். பெரியபாப்பா சித்ரா சொல்வதைக் கேட்டால் தமிழர்கள் அங்கே திகிலுடனேயே வாழ்நாட்களை கழித்து வருவது தெரிய வருகிறது.












Click it and Unblock the Notifications