செம்ம ஸ்டைலிஷ்..1986-ல் மிசோரமில் ராஜீவ்- சோனியா; ராகுல் பிரசாரத்தில் வீடியோ ரிலீஸ் செய்த காங்கிரஸ்!
ஐஸ்வால்: மிசோரம் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் 1986-ல் மிசோரம் மாநிலத்துக்கு ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் பயணம் மேற்கொண்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
மிசோரம் சட்டசபைக்கு நவம்பர் 7-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் சட்டசபைக்கான தேர்தலில் ஆளும் மிசோ தேசிய முன்னணி, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இம்மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமையக் கூடும் என்பது பெரும்பாலான கருத்து கணிப்புகளின் முடிவுகள்.

ராகுல் அதிரடி பிரசாரம்: தற்போது மிசோரம் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மேலும் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்றும் நாளையும் மிசோரமில் தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார். பொதுக் கூட்டங்களில் மட்டுமே பங்கேற்காமல், தமது பாதயாத்திரை ஸ்டைலையும் ராகுல் காந்தி கையில் எடுத்திருப்பதால் கூட்டம் அலைமோதுவதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணிப்பூர் வன்முறை: மிசோரம் மாநிலத்தின் மக்களோடு மணிப்பூர் குக்கி இன மக்கள் தொப்புள் கொடி உறவு கொண்டவர்கள். இதனால் மணிப்பூர் வன்முறை, மிசோரம் மாநில தேர்தலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். இதனை கவனத்தில் கொண்டு மணிப்பூர் வன்முறை விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து பிரசாரம் செய்கிறார்.
அந்த நாள் ஞாபகம்: இந்த பிரசாரத்தின் போது, 1986ல் அப்பாவுடன் (ராஜீவ் காந்தியுடன்) இங்கு நான் வந்தபோது எனக்கு வயது 16. மிசோரம் மக்கள் மென்மையானவர்கள், கனிவானவர்கள் மற்றும் பாசமுள்ளவர்கள். வலுவான சமூக உணர்வு கொண்டவர்கள். ஒருவரையொருவர் மதிக்கும் மனிதர்கள் மற்றும் வெவ்வேறு எண்ணங்களைக் கொண்டவர்கள். இது மிகவும் பெருமைப்பட வேண்டிய விஷயம்! நீங்கள் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள். இவை 21 ஆம் நூற்றாண்டின் சக்திவாய்ந்த விழுமியங்கள் என மறக்காமல் நினைவுகூர்ந்தார்.
அசத்தல் வீடியோ ரிலீஸ் செய்த காங்கிரஸ்: ராகுல் காந்தி இப்படி பேசிக் கொண்டிருக்கும் போதே சமூக வலைதளங்களில் 1986-ல் ராஜீவ் காந்தி- சோனியா இருவரும் மிசோரம் மாநிலத்துக்கு பயணம் செய்த வீடியோ பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. ராஜீவ் காந்தி பிரதமராகி 2 ஆண்டுகள் கழித்து மிசோரம் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட தருணத்தில் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது. ராஜீவ் காந்தி, சோனியா காந்தி இருவரும் ஸ்டைலிஷாக இடம் பெற்றுள்ள இந்த வீடியோவில் அன்றைய மிசோரம் மக்கள் பெருத்த ஆரவாரத்தையும் பேரன்பையும் வீதிகளில் நின்றபடி வெளிப்படுத்தும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ராகுல் அங்கிட்டு பேச.. இங்கிட்டு வீடியோ ரீலிஸ் செய்ய தேர்தல் களத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் பட்டாளம் என்கின்றனர் மிசோரம் ஊடகவியலாளர்கள்.












Click it and Unblock the Notifications