எம்எல்ஏக்கள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவர் சிவ்ராஜ் சவுகான்.. ஆதாரத்துடன் காங் குற்றச்சாட்டு
போபால்: எம்எல்ஏக்கள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவர் சிவ்ராஜ் சிவுகான் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தானிலும் காங்கிரஸ் கட்சி நேரடியாக ஆட்சியில் உள்ளது. ஏனைய சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் ஆளும் கட்சியுடன் கூட்டணியில் உள்ளது. தற்போது மத்திய பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் கர்நாடகத்தில் செய்தது போல் ஆட்சியை கவிழ்த்துவிட்டு பாஜக ஆட்சி செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
இதற்காக மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எம்எல்ஏக்களுக்கு பாஜக போன் போட்டு ரூ 25 முதல் 30 கோடி வரை பேரம் பேசியதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றம்சாட்டியிருந்தார்.

தங்க வைப்பு
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ம.பி.யில் ஆளும் கூட்டணியை சேர்ந்த 8 எம்எல்ஏக்களை பாஜக வலுக்கட்டாயமாக அழைத்து சென்று ஹோட்டல்களில் தங்கவைத்துள்ளதாக காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளது. 8 பேரில் 4 எம்எல்ஏக்கள் ஐடிசி மவுரியாவிலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ மற்றும் இரு சுயேச்சைகள் கர்நாடகாவில் உள்ள சொகுசு விடுதியிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாயாவதி கட்சியின் பெண் எம்எல்ஏ தப்பி வந்துவிட்டார்.

பெரும்பான்மைக்கு 115
மொத்தம் 230 தொகுதிகளை கொண்ட ம.பி. சட்டசபையில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களையும், பகுஜன் சமாஜ் 2 இடங்களையும் சமாஜ்வாதி ஒரு இடத்தையும் சுயேச்சை 4 இடத்தையும், பாஜக 107 இடங்களையும் பிடித்துள்ளது. இரு தொகுதிகள் காலியாக உள்ளது. எனவே 228-இல் பெரும்பான்மைக்கு 115 எம்எல்ஏக்கள் தேவைப்படுகிறது.

எஸ்பி
பிஎஸ்பி, எஸ்பி, சுயேச்சை ஆதரவுடன் 121 பலத்துடன் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. தற்போது 7 எம்எல்ஏக்கள் (பெண் எம்எல்ஏ தப்பிவிட்டார்) பாஜக அழைத்து சென்றுவிட்டது. ஒரு வேளை இவர்கள் பாஜகவுக்கு விலை போய்விட்டால் ஆளும் கூட்டணி கட்சியின் பலம் 114 ஆக இருக்கும். இதனால் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவே கருதப்படுகிறது.

சவுகான்தான் காரணம்
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் ஜீத்து பட்வாரி கூறுகையில் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ள அரசியல் குழப்பங்களுக்கு முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்தான் மூளையாக செயல்பட்டுள்ளார். இந்த எம்எல்ஏக்கள் கடத்தலில் நிச்சயம் அவருக்கு தொடர்புள்ளது என்பது எங்களுக்கு தெரியும். இதற்கான வீடியோக்கள், ஆடியோக்கள் எங்களிடம் உள்ளன என தெரிவித்தார். காங்கிரஸும் பதிலுக்கு 4 பாஜக எம்எல்ஏக்களை பிடித்து வைத்துக் கொண்டுள்ளதாக அக்கட்சி புகார் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications