ஃபனி புயலை வென்ற மாநிலம்.. கொரோனாவை விரட்டி அடித்தது.. சத்தமின்றி சாதிக்கும் ஒடிசா.. எப்படி நடந்தது?
கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா முழுமைக்கும் ஒடிசா மிக சிறந்த உதாரணமாக மாறியுள்ளது.
புவனேஷ்வர்: கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா முழுமைக்கும் ஒடிசா மிக சிறந்த உதாரணமாக மாறியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தியதில் அந்த மாநிலம் முன் மாதிரி மாநிலமாக மாறியுள்ளது.
Recommended Video
2019ம் ஆண்டு ஒடிசாவை மிக மோசமான ஃபனி புயல் தாக்கியது. தமிழகத்தை தாக்க வேண்டிய ஃபனி புயல் விலகி ஒடிசாவை தாக்கியது. ஒடிசாவை இப்படி எல்லா வருடமும் மிக மோசமான புயல்கள் தாக்குவதும், அங்கு மக்கள் வாழ்வாதாரத்தை இழப்பதும் தொடர்கதையாகி வந்தது.
ஆனால் அந்த முறை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அந்த வரலாற்றை மாற்ற முடிவு செய்தார். துரிதமாக 1.2 மில்லியன் மக்களை அப்புறப்படுத்தி அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினார். விளைவு மிக மோசமான ஃபனி புயலில் இருந்து ஒடிசா தப்பியது. அங்கு மக்களும் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.

ஒடிசாவில் கொரோனாவிற்கு எதிரான போர்
தற்போது அதேபோல்தான் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் ஒடிசா பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. ஒடிசாவில் மொத்தம் 60 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 21 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். ஒரே ஒருவர்தான் அங்கு பலியாகி உள்ளார். மீதம் இருக்கும் 38 பேர் நல்ல உடல் நிலையுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அண்டை மாநிலங்கள் எல்லாம் கொரோனா காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒடிசா பெரிய அளவில் பாதிப்புகளை சந்திக்கவில்லை.

ஒடிசா நிலை
ஒடிசா கொரோனாவில் இருந்து வேகமாக மீண்டு வர காரணம் அம்மாநில அரசின் சரியான திட்டமிடல்தான். இந்தியாவில் அங்குதான் முதலில் லாக் டவுன் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசுக்கும் முன்பாக மார்ச் 13ம் தேதியே அம்மாநில அரசு லாக் டவுனை அறிவித்தது. முழுமையாக தங்கள் எல்லையை மூடியது. இதன் மூலம் அங்கு மாநிலத்திற்கும் யாரும் உள்ளே நுழைய முடியாத நிலை ஏற்பட்டது.

லாக் டவுன் நீட்டிப்பு
இது கொரோனாவின் முதற்கட்ட பரவலை தடுத்தது. அதன்பின் கடந்த 14ம் தேதி மத்திய அரசு லாக் டவுனை நீட்டிக்கும் முன்பே முதல் மாநிலமாக எல்லோருக்கும் முன் லாக் டவுனை நீடித்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்தார். தன்னுடைய மாநிலத்தில் பொருளாதாரம் மிக மோசமாக சரிந்து வருகிறது என்று அவருக்கு தெரியும். உற்பத்தி துறைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று அவருக்கு தெரியும்.

மக்கள் உயிர்தான் முக்கியம்
ஆனாலும் அது பற்றியெல்லாம் கவலை படாமல் மக்கள் உயிர்தான் முக்கியம் என்று முதல் நபராக ஒடிசாவில் லாக் டவுனை நீட்டித்தார். அதோடு இந்தியாவில் கொரோனாவிற்கு என்று தனியாக இரண்டு சிறப்பு மருத்துவமனைகளை உருவாக்கியது ஒடிசா மட்டும்தான். அங்குதான் 1000 பேர் சிகிச்சை பெறும் வகையில் வெறும் 6 நாட்களில் இரண்டு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டது.

கடுமையான சட்டங்கள்
இதெல்லாம் போக அங்கு மிக கடுமையாக லாக் டவுன் பிறக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட இடம், பாதிக்கப்படாத இடங்களில் எல்லாம் மக்கள் வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டனர். அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட இவர்கள் வெளியே அனுமதிக்கப்படவில்லை. எல்லோருக்கும் வீட்டிற்கே அத்தியாவசிய பொருட்கள் அனுப்பப்பட்டது. இதனால் மக்கள் வெளியே வருவது மொத்தமாக தடுக்கப்பட்டது.

5 அடுக்கு காண்டாக்ட் டிரேசிங்
அதேபோல் அங்கு கொரோனா பாதித்த நபர்கள் எல்லோரும் கண்டுபிடிக்கப்பட்டனர். 5 அடுக்கு காண்டாக்ட் டிரேசிங் செய்யப்பட்டு எல்லோரும் கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். இதன் மூலம் அங்கு சமூக பரவல் முற்றாக தடுக்கப்பட்டது. அதேபோல் அங்கு டெஸ்டிங்கும் மிக வேகமாக செய்யப்பட்டது. தொடக்கத்திலேயே அங்கு 5000 பேருக்கு சோதனை செய்யப்பட்டது.

தீவிரமான சோதனை
தற்போது கூடுதலாக அங்கு 1 லட்சம் ரேப்பிட் கிட் சோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அங்கு கொரோனாவிற்கு எதிராக மருத்துவர்கள் எல்லோரும் பயிற்சி அளிக்கப்பட்டு தயார் நிலையில் இருக்கிறார்கள். இப்படி சரியான திட்டமிடல் மற்றும் கண்டிப்பான நடைமுறைகள்தான் கொரோனாவிற்கு எதிராக ஒடிசா வெல்வதற்கு காரணம் ஆகும். எந்த விதமான விளம்பரமும் இன்றி அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் இந்த சாதனையை செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications