குடும்பத்தை பற்றி மோசமான பிரசுரங்களை வீசுவது கோழைத்தனமானது: பிரியங்கா காந்தி ஆவேசம்
அமேதி: நான் பேசும் இடங்களில் எனது குடும்பத்தை பற்றிய தரக்குறைவான துண்டு பிரசுரங்களை வீசிவருவது கோழைத்தனமானது என்று பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு கேட்டு சகோதரி பிரியங்கா வாக்கு சேகரித்து வருகிறார். கவுரிகஞ்ச் என்ற இடத்தில் அவர் பேசியதாவது:

எனது பொதுக்கூட்டங்கள் நடைபெறுவதற்கு முந்தைய நாள் இரவில் எனது குடும்பத்தை பற்றி அடிப்படை ஆதாரம் இல்லாமல் எழுதப்பட்டுள்ள தரக்குறைவான கையடக்க புத்தகங்கள், துண்டு பிரசுரங்களை வீசிச் செல்கிறார்கள். இது கோழைத்தனமான செயல். அவர்கள் ஏதாவது சொல்ல வேண்டும் என்று நினைத்தால் என் முன்னால் வந்து பேசட்டும். இந்த மாதிரி நடு இரவில் வந்து செய்கிற செயல்கள் ஏற்புடையது இல்லை.
தேர்தல்களை கொள்கையின் அடிப்படையில் சந்திக்க வேண்டும். பின்வாசல் வழியாக அணுக கூடாது. இந்த நாட்டில் தேர்தல் பிரச்சாரம் மிகவும் தரம் குறைந்து போய்விட்டது. அரசியல் என்பது சேவை உணர்வுடன் பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த நாட்டில் சில தலைவர்கள் அதை கருத்தில் கொள்வதில்லை.
நான் உங்களிடம் ஓட்டு கேட்க மாட்டேன். எனக்கு தேவை உங்களது அன்புதான். நல்ல நேரங்களிலும், கெட்ட நேரங்களிலும் நீங்கள் அனைவரும் எங்களுடன் இருந்தீர்கள், நாங்களும் உங்களுடன் எப்போதும் துணை நிற்போம். இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications