Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓகி புயல் எதிரொலி: தமிழக மீனவர்களுக்காக தனி சேட்டிலைட்

Subscribe to Oneindia Tamil
தமிழக மீனவர்களுக்காக தனி சேட்டிலைட்
Getty Images
தமிழக மீனவர்களுக்காக தனி சேட்டிலைட்

ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பிரத்யேக செயற்கைக்கோள் ஒன்றை விரைவில் தமிழக அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.

மீனவர்களுக்காக பயன்படுத்தப்படும் அந்த செயற்கைக்கோள் தற்போது சோதனை ஓட்டத்தில் இருப்பதாக தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.

2017ல் ஏற்பட்ட ஓகி புயலில் சிக்கி 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் உயிரிழந்தனர். அதன் பின்னர்தான் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களின் பாதுகாப்பு பற்றிய கவனம் அதிகரித்தது. தமிழக அரசும் 16 சேட்டிலைட் போன்களை முதற்கட்டமாக மீனவர்களுக்கு அளித்தது.

இந்தியாவில் முதல்முறையாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலை பெற்று தமிழக அரசு 2019ல் சேட்டிலைட் போன்களை மீனவர்களுக்கு வழங்கியது. பின்னர் கூடுதலாக 500 போன்களை அளிப்பதாகவும் அரசு அறிவித்திருந்தது. தமிழகத்தை அடுத்து, கேரளாவும் மீனவர்களுக்கு சேட்டிலைட் போன் வழங்கியது. இந்திய அளவில் சேட்டிலைட் போன் வழங்கியது பெரிதும் கவனிக்கப்பட்டது.

இருந்தபோதும், ஒரு குழுவாக செல்லும் மீனவர்களுக்கு ஒரு போன் என்ற முறையில்தான் அளிக்கப்பட்டது என்பதால், முழு தீர்வு எட்டப்பட்டதாக மீனவர்கள் கருதவில்லை. தற்போது தனி சேட்டிலைட் ஒன்று அறிமுகப்படுத்தவுள்ளது என்பதால் அது பெரிய முன்னெடுப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

மீனவர்களுக்காக சேட்டிலைட் வரவேற்கக்கூடியது என்றும் ஓகி புயலுக்கு பின்னர், ஆழ்கடல் பகுதிகளுக்கு செல்லும் மீனவர்களை தொடர்பு கொள்வதற்காக தொலைத்தொடர்பு மையம் தேவை என மீனவர்கள் வைத்த கோரிக்கையை அரசு பரிசீலிக்கவேண்டும் என்கிறார் தெற்காசிய மீனவர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சர்ச்சில்.

''புயல் வீசும் காலங்களில் மட்டும்தான் பாதிப்புகள் பற்றி அதிகம் பேசப்படுகிறது. எதிர்வரும் பிரச்னைகளை சமாளிக்க மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருக்கும் தொலைத்தொடர்பு மையத்தை ஏற்படுத்த நடவடிக்கையும் எடுக்காதது வருத்தம் தருகிறது.

ஆழ்கடல் மீன்பிடி தொழில் காரணமாக பல ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது, அரசுக்கும் வருமானம் கிடைக்கிறது என்றபோதும், ஆழ்கடல் மீனவர்களின் நலன் பற்றி தற்போது தான் கவனம் பெறுகிறது. இருந்தபோதும், எங்களுக்கான சேட்டிலைட் ஒன்றை அரசு கொண்டுவரவுள்ளது என்பது எங்களுக்கு கிடைத்த சுபசெய்தி,'' என்கிறார் சர்ச்சில்.

தொலைத்தொடர்பு மையத்தின் அவசியம் குறித்து பேசிய அவர், ''ஓகி புயல் நேரத்தில், வானிலை அறிவிப்பு வருவதற்கு முன்னதாக கடலுக்கு பலர் சென்றிருந்தனர் என்பதால், அவர்களை தொடர்பு கொண்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்வது பற்றி சொல்ல முடியவில்லை.

மீனவர்கள் பலர் காணாமல் போய்விட்டதாக மீனவ குடும்பங்கள் சொல்லியபோதும் அதிகாரிகள் நம்பவில்லை. எங்கள் பகுதி மீனவர்கள் ஆழ்கடலில் ஒரு மாதம் வரைகூட தங்கிமீன்பிடிப்பவர்கள்.

அதனால், தொலைத்தொடர்பு மையம் இருந்தால்,உடனடியாக மீனவ குடும்பங்கள் தங்களது வீட்டில் இருந்து சென்றவர்கள் யார், எத்தனை நாட்கள் ஆகின்றன, எந்தவிதமான படகில் சென்றனர் போன்ற விவரங்களை தருவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

கடலில் இருப்பவர்கள் தங்களது இருப்பிடம் பற்றி உடனே சொல்வதற்கும், அவர்களை மீட்பதற்கு பேருதவியாக இருக்கும். இதுபோன்ற ஒரு மையம் கன்னியாகுமாரி மாவட்டத்தில் அமைக்கப்படவேண்டும்,''என்கிறார்.

மேண்டோஸ் புயல் உணர்த்தும் உண்மைகள்

தற்போதுவரை தொலைத்தொடர்பு மையம் பற்றி மத்திய, மாநில அரசுகள் செவிசாய்க்கவில்லை என்றும் மேண்டோஸ் புயல் அதனை நினைவூட்டியுள்ளது என்றும் கூறுகிறார் மீனவர் சேவியர்(34).

இவர் ஓகி புயலில் சிக்கி நான்கு நாட்கள் கழித்து மீட்கப்பட்டவர்களில் ஒருவர். ''நான் பத்து வயது முதல் கடலுக்கு சென்றவன். ஆனால் ஓகி புயல் ஏற்படுத்திய அச்சம் மிகவும் பயங்கரமானது. அதில் எங்கள் சொந்தங்கள் பலரையும் இழந்தோம். தனி சேட்டிலைட் வருவது சிறந்தது.

அதேநேரம், தொலைத்தொடர்பு மையம் ஒன்றை ஏற்படுத்தி, எங்கள் மீனவர்கள் எங்குள்ளனர், அவர்களை மீட்பதற்கான வசதிகள் ஏற்படுத்துவது பற்றி சொல்வதற்கு மையம் இருந்தால், ஆபத்து காலத்தில் கடலில் உள்ள மீனவர்களுக்கு நம்பிக்கை தரும், மீனவ குடும்பங்களுக்கும் ஆறுதலாக இருக்கும்,''என்கிறார் சேவியர்.

"மீனவர்களின் கோரிக்கை நியாயமானதே"

மீனவர்களின் கோரிக்கைக்கான தேவை உள்ளது என்கிறார் கடலோர காவல்படையின் பிராந்திய தலைவராக (கிழக்கு)செயல்பட்ட வாசன்.

''கடந்த ஐந்து ஆண்டுகளில் கடல் பரப்பில் தொலைத்தொடர்பு வசதிகள் தேவை என்பதை இந்திய அரசாங்கம் நன்கு உணர்ந்துள்ளது. கடலில் முதல் 12 கடல் மைல் வரை சாதாரண செல்பேசி வசதி இருந்தாலே பேசமுடியும்.

அதற்கு அடுத்ததாக 50 கடல் மைல்வரை சென்றால், அதற்கு மிகவும் உயர் அலைவரிசை வசதியுள்ள போன் தேவை, அதற்கு அப்பால் சேட்டிலைட் போன்தான் பயன்படும்.

தமிழக அரசு சாட்டிலைட் போன் கொடுத்திருப்பது வரவேற்ககூடிய ஒன்றுதான். சாட்டிலைட் போன் இருந்தால் மீனவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தொடர்பு கொள்ள முடியும்.

ஆனால் குழுவாக செல்பவர்களுக்கு ஒரு போன் வீதம் கொடுத்திருக்கிறார்கள். அது போதாது, இந்த முயற்சியை ஒரு தொடக்கமாக கொள்ளலாம், இன்னும் பல அளவுகளில் முன்னேற்றத்தை அடைய வேண்டும்,''என்கிறார் வாசன்.

செயற்கைக்கோள் போன் - அமைச்சர் விளக்கம்

சாட்டிலைட் போனின் ஆரம்ப விலையே ரூ.ஒரு லட்சம் என்பதால், உடனடியாக அனைவருக்கும் கொடுக்க முடியாது என்றும் அதற்கான முன்னெடுப்புகள் தேவைதான் என்கிறார் அவர்.

''ஓகி புயலுக்கு பின்னர்தான் இதற்கான அவசியம் மேலும் உணரப்பட்டது. ஆழ்கடல் மீனவர்களுக்கு தொலைத்தொடர்பு மையம் வேண்டும் என்பது குறைந்தபட்ச தேவை,''என்கிறார் வாசன்.

பிபிசி தமிழிடம் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ''ஓகி புயலில் பல மீனவ குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். மீனவர்கள் கடலில் தத்தளித்து உயிரிழந்தனர். தற்போதுவரை சேட்டிலைட் போன் வழங்கும் நடைமுறைதான் பின்பற்றப்பட்டது. தற்போது மீனவர்களுக்காக ஒரு சேட்டிலைட் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளோம்.

அதன் சோதனை ஓட்டத்தின் முடிவில் அறிவிப்பு வரும். விரைவில் அறிவிப்பு வரும். ஆழ்கடலில் உள்ள மீனவர்களின் பாதுகாப்பை இந்த சேட்டிலைட் உறுதிப்படுத்தும். ஆழ்கடல் மீனவர்களின் தேவையை கருத்தில் கொண்டு வடிவமைப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.

மீனவர்களின் கோரிக்கையான தொலைத்தொடர்பு மையம் பற்றி கேட்டபோது, ''இதுகுறித்து தனியாக விவாதித்து முடிவு செய்யப்படும். தனியாக ஒரு சேட்டிலைட் கொண்டுவரும்போது, பிறவசதிகளை ஏற்படுத்துவதில் அதிக சிக்கல்கள் இருக்காது. தற்போது சேட்டிலைட் சோதனை ஓட்டம் மற்றும் ஆழ்கடலுக்கு செல்லும் மீனவர்கள் பெரும்பாலானோருக்கு சேட்டிலைட் போன் வழங்குவதில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்,''என்கிறார் அமைச்சர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+