எங்கே ராகுல்? "அங்க அடையாளங்களை" ஆபீசுக்கு போய் சேகரித்த டெல்லி போலீஸ்! காங். அதிர்ச்சி!!
டெல்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி எங்கே இருக்கிறார் என டெல்லி போலீஸ் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. இதற்காக ராகுல் காந்தி அலுவலகத்துக்குப் போய் அவர் பார்ப்பதற்கு எப்படி இருப்பார்? அவரது முடியின் நிறம் என்ன? என்பது உட்பட அனைத்து அங்க அடையாளங்களையும் சேகரித்திருக்கிறதாம் டெல்லி போலீஸ்.
நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் கடந்த மாதம் கூடிய போது ராகுல் காந்தி, கட்சித் தலைவர் சோனியாவிடம் 2 வார காலம் லீவ் கேட்டுவிட்டு 'எங்கேயோ' சென்றுவிட்டார். அவர் ஓய்வெடுக்கச் சென்றிருப்பதாக முதலில் கூறப்பட்டது.

பின்னர் காங்கிரஸ் தலைவர் பதவியைக் கேட்டு அடம்பிடித்தார். ஆனால் சோனியா அதை ஒப்புக் கொள்ளவில்லை.. அதனால் கோபித்துக்கொண்டு போய்விட்டார் என்றும் தகவல்கள் தீயாக பரவின. அப்போது உத்தரகாண்ட்டில் ஒரு டெண்ட் போட்டு அதில் ராகுல் காந்தி தங்கி இருக்கிறார் என சில புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
மேலும் ராகுல் காந்தி உத்தரகாண்ட்டில் இல்லை... தாய்லாந்துக்குப் போய்விட்டார் எனவும் கூறப்பட்டது. ஆனால் இந்த தகவல்களையும் மறுத்தது காங்கிரஸ். காங்கிரஸில் சிலரோ, ராகுலை கண்டுபிடித்து தருவோருக்கு சன்மானம் கொடுப்போம் என்றெல்லாம் போஸ்டர் அடித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
அதன் பிறகு ஏப்ரல் மாதம், காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் பதவி ஏற்க இருக்கிறார். அதற்கான சிறப்பு ஆளுமை பயிற்சிகள் மற்றும் அந்த பதவிக்கேற்ப வியூகங்கள் வகுப்பதற்காக வெளிநாடு சென்றுள்ளார் எனவும் காங்கிரசார் கூறினார்.
அத்துடன் இதோ ராகுலின் லீவ் முடியப் போகிறது.. நாளை ராகுல் வந்துவிடுவார் என்றெல்லாம் காங்கிரசார் பேசிவந்தனர். ஆனால் ராகுல்தான் வந்தபாடில்லை. தன்னுடைய லீவை ராகுல் நீட்டித்துக் கொண்டே இருக்க "ராகுலை காணவில்லை" என புதிய பஞ்சாயத்தும் கிளம்பியது.
இந்நிலையில் கடந்த வாரம் டெல்லி போலீசார் திடீரென ராகுல் அலுவலகத்துக்கு சென்றிருக்கின்றனர். அங்கு இருந்த காங்கிரஸ் நிர்வாகிகளிடம், ராகுல் பார்ப்பதற்கு எப்படி இருப்பார்? அவரது முடியின் நிறம் என்ன? ராகுலின் கண்கள் எப்படி இருக்கும்? அவருடைய போட்டோ ஒன்னு கிடைக்குமா? என "அங்க அடையாளங்களை" கேட்டு விசாரிக்க காங்கிரசார் பீதியாகிப் போனராம்.
ராகுலின் அங்க அடையாளங்களை விசாரிக்க வந்த போலீசார் மீது காட்டமாக இருந்த நிர்வாகிகள் அந்த போலீசாரையும் போட்டோ எடுத்துவிட்டு அனுப்பிய கையோடு, இப்படி எதுக்கு தேவையில்லாமல் இந்த விசாரணை? என கொந்தளித்து வருகின்றனராம்...












Click it and Unblock the Notifications