இஸ்லாமியர்களுக்கு முக்கியத்துவமா? காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பற்றி தவறான தகவலை சொன்னாரா மோடி?
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து தவறான தகவலை கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 543 லோக்சபா தொகுதிகளில் முதற்கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை தற்போது தீவிரமடைந்துள்ளது. 13 மாநிலங்களில் உள்ள 89 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பரப்புரையை போலவே வெயிலும் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் நேற்று ராஜஸ்தானில் பிரசாரம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் சொல்லாததை குறிப்பிட்டு பிரசாரம் மேற்கொண்டிருந்தார். இதற்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
பிரசாரத்தில் மோடி பேசியதாவது, "காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, நாட்டின் சொத்துக்களில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று பேசினார்கள். உங்களிடம் உள்ள தங்கம் உள்ளிட்ட சொத்துக்களை பறித்து அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்களிடம் கொடுத்து விடுவார்கள். சட்டவிரோதமாக நாட்டிற்குள் ஊடுருவியவர்களிடம் உங்கள் சொத்துக்களை கொடுத்து விடுவார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை அவர்களிடம் கொடுக்க வேண்டுமா? இதை நீங்கள் ஏற்பீர்களா?
இதை செய்வோம் என்றுதான் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறார்கள். தாய்மார்கள், சகோதரிகளின் தங்க நகைகளை கணக்கெடுத்து அவற்றை உங்களிடமிருந்து பறித்து அவர்களிடம் கொடுத்துவிடுவார்கள். மன்மோகன் சிங் என்ன சொன்னார் தெரியுமா? நாட்டின் சொத்துக்களில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் எனக் கூறினார். சகோதர சகோதரிகளே இதுதான் நகர்ப்புற நக்சல்களின் சிந்தனை. என் தாய்மார்கள், சகோதரிகளின் தாலியை பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை” என்று பேசியிருக்கிறார்.
இவ்வாறு அவர் பேசியது உண்மைக்கு மாறான தகவல் எனவும், காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் இப்படி எதையும் கூறவில்லை என்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
பிரதமரின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்த ராகுல் காந்தி, "முதல்கட்ட வாக்குப்பதிவில் ஏற்பட்ட ஏமாற்றத்திற்குப் பிறகு, நரேந்திர மோடியின் பொய்களின் தரம் மிகவும் தாழ்ந்துவிட்டது. பயத்தின் காரணமாக, அவர் இப்போது பொதுமக்களின் கவனத்தைப் பிரச்னைகளில் இருந்து திசைதிருப்ப விரும்புகிறார். காங்கிரஸின் புரட்சிகர தேர்தல் அறிக்கைக்கு இப்போது நாடு முழுவதும் ஆதரவு வரத் தொடங்கிவிட்டது. இந்த நாடு அதன் பிரச்னைகளில் வாக்களிக்கும். அதன் வேலைவாய்ப்பு, அதன் குடும்பம் மற்றும் அதன் எதிர்காலத்திற்காக வாக்களிக்கும்" என்று கூறியுள்ளார்.
அதேபோல காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “மோடி ஜி கூறியது வெறுப்புப் பேச்சு மட்டுமல்ல, கவனத்தைத் திசைதிருப்பும் நன்கு சிந்திக்கப்பட்ட சூழ்ச்சியும் கூட. அதிகாரத்திற்காக பொய் பேசுவதும், ஆதாரமற்ற விஷயங்களைப் பேசுவதும், எதிரிகள் மீது பொய் வழக்கு போடுவதும் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் பயிற்சியின் சிறப்பு. இந்திய வரலாற்றில் மோடி அளவுக்கு எந்த பிரதமரும் தனது பதவியின் கண்ணியத்தை குறைத்ததில்லை” என்று கூறியுள்ளார்.
தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பிரதமரின் பேச்சு குறித்து தேர்தல் ஆணையம் மவுனம் காப்பதாக “Rest in Peace....Election Commission of India?” என x சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications