கார்த்தி சிதம்பரத்துடன் தொடர்புடைய பெங்களூரு அலுவலகங்களில் அமலாக்கப்பிரிவு அதிரடி 'ரெய்டு'
பெங்களூரு: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்களுடன் தொடர்புடைய பெங்களூர் அலுவலகங்களில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
மத்திய நிதி அமைச்சராக சிதம்பரம் பதவி வகித்த காலத்தில் ஏர்செல் நிறுவனத்தின் பங்குகள் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்டன. இந்த பங்குகளை விற்க முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்தார்; இதற்கு ஆதாயமாக தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான சன் டிடிஎச்சில் மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்தது என்பது சிபிஐ வழக்கு.

இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு வழக்குகளை நடத்தி வருகிறது. அதேபோல ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கப்படுவதற்கு முன்னதாக சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வாங்கி ஆதாயமடைந்தார் என்பதும் குற்றச்சாட்டு.
மேலும் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான அட்வான்டேஜ் நிறுவனமானது வாசன் கண் மருத்துவமனையின் பங்குகளை வாங்கியதிலும் முறைகேடு நிகழ்ந்தது என்பது அமலாக்கப் பிரிவின் புகார். இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக சென்னையில் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய நிறுவனங்களில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இருப்பினும் இந்த குற்றச்சாட்டுகளை சிதம்பரமும் கார்த்தி சிதம்பரமும் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள சிங்கப்பூரைச் சேர்ந்த சீகுயா கேப்பிடல் நிறுவன அலுவலகங்களில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நேற்று இரவு அதிரடி சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.











Click it and Unblock the Notifications