ஊழல் செய்தவர்களால் என் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது- மோடி 'திடுக்' பேச்சு
ஊழல் செய்தவர்களால் தம்முடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பனாஜி: 70 ஆண்டுகாலமாக ஊழல் செய்தவர்களால் தம்முடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பிரதமர் மோடி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவா தலைநகர் பனாஜியின் சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி பேசியதாவது:
நான் அகந்தைக்காக ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கவில்லை. மக்களின் துயரம் எனக்கு புரிகிறது. கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அதிகாரத்தில் அமர்ந்திருக்க வேண்டும் என்பதற்காக நான் பிறக்கவில்லை. இந்த நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதற்காக என்னுடைய குடும்பத்தை, வீட்டை விட்டு வெளியே வந்திருக்கிறேன் (கண்கள் கலங்கியபடி பேசினார்).

இன்னொரு முகம்...
ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் மக்கள் 2014-ம் ஆண்டு எனக்கு வாக்களித்தார்கள். டிசம்பர் 30-ந் தேதிக்குள் பணத்தை பதுக்கியவர்கள் அபராதத்துடன் வங்கியில் செலுத்தாவிட்டால் என்னுடைய இன்னொரு கடுமையான முகத்தை காட்ட நேரிடும்.

கடல் கடக்கும் பணம்...
என்னிடம் நகைகள் வாங்க பான் கார்டு கட்டாயம் என அறிவிக்க வேண்டாம் என சில எம்.பிக்களே வலியுறுத்தினர். இந்தியாவின் பணம் சூறையாடப்பட்டு அது கடல் கடந்து கொண்டு செல்லப்பட்டால் அதை மீட்பதுதான் என்னுடைய கடமை.

மக்களின் விருப்பம்
கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என மக்கள் விரும்புகிறபோது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் நான் எப்படி இருக்க முடியும்? நவம்பர் 8-ந் தேதிக்குப் பின்னர் பலர் தூக்கத்தை தொலைத்துவிட்டனர்.

உயிருக்கு அச்சுறுத்தல்
எனக்கு எதிரான சக்திகள் என்னை அழிக்க நினைக்கிறார்கள்... அவர்களால் என்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது.

எதற்கும் தயார்...
2ஜி, நிலக்கரி ஊழல் செய்தவர்கள் எல்லாம் இன்று ரூ4,000 மாற்ற வரிசையில் நிற்கிறார்கள் (ராகுல் காந்தி).. 70 ஆண்டுகாலம் இந்த தேசத்தை கொள்ளையடித்த அவர்களை எதிர்கொள்ள நான் எதற்கும் தயாராகவே இருக்கிறேன்.

அதிரடி தொடரும்
என்னை உயிரோடு எரித்தாலும் கூட கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் இருந்து பின்வாங்க மாட்டேன். நீங்கள் 50 நாட்கள் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் நாட்டையே மாற்றி காட்டுவேன். ஊழல் செய்தவர்களின் நிஜமுகத்தை நான் அம்பலப்படுத்துவேன்.

தண்டனை தாருங்கள்...
டிசம்பர் 30-க்குப் பிறகு என்னுடைய இந்த திட்டம் தவறு என நிரூபணம் ஆனால் அதற்காக எந்த ஒரு தண்டனையையும் ஏற்கவும் நான் தயாராகவே இருக்கிறேன். கருப்பு பணத்தை ஒழிப்பதற்கான அதிரடி நடவடிக்கைகள் தொடரும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.












Click it and Unblock the Notifications