கறுப்புப் பணம் பதுக்கினாரா காங். முன்னாள் மத்திய அமைச்சர் பிரனீத் கவுர்?
சண்டிகர்: காங்கிரஸின் முன்னாள் மத்திய அமைச்சர் பிரனீத் கவுர் தம் மீது வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கியுள்ளதாக எழுந்துள்ள புகாரை மறுத்துள்ளார்.
பிரனீத் கவுர் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய அமைச்சராக பதவி வகித்தவர். தற்போது பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

பிரனீத் கவுர் பெயரிலும், அவரின் குடும்பத்தினரால் நடத்தப்படும் அறக்கட்டளை மற்றும் கம்பெனிகள் பெயரிலும் ஜெனிவா நகரில் உள்ள எச்.எஸ்.பி.சி வங்கியில் கணக்கு உள்ளதாகவும், அதில் கறுப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதால் அதுபற்றி மத்திய நேர்முக வரிகள் வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக பிரனீத் கவுர், அவரின் கணவர் அமரேந்தர் சிங், மகன் ராணிந்தர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அத்துடன் லண்டன் மற்றும் துபாயில் பிரனீத் கவுர் மற்றும் அவரின் குடும்பத்தினர் பெயரில் சொத்துகள் உள்ளன.
எனவே பிரனீத் கவுர் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் வங்கி கணக்கு தொடர்பான விவரங்களைப் பெற மத்திய நேர்முக வரிகள் வாரிய அதிகாரிகள் சுவிஸ் அரசு நிர்வாகத்தை அணுகி உள்ளனர் என ஆங்கில பத்திரிகை ஒன்றில் நேற்று செய்தி வெளியானது. இந்தத் தகவலை பிரனீத் கவுர் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் எனக்கு எந்த கணக்கும் இல்லை. இதுதொடர்பாக வருமான வரித்துறையினர் முன்னர் விசாரணை நடத்திய போதும் இதே தகவலை கூறியுள்ளேன்.
எனக்கு அல்லது என் குடும்பத்தினருக்கு சொந்தமான அறக்கட்டளைக்கோ வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு எதுவும் கிடையாது. வெளிநாட்டு வங்கிகளில் என் பெயரில் எந்த வங்கிக் கணக்கும் இல்லை என கடந்த காலங்களிலும் தெரிவித்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications