மணமேடையிலேயே இறந்த அக்கா.. உடலை கூலிங் பாக்சில் வைத்துவிட்டு.. தங்கையை மணமுடித்த மாப்பிள்ளை.. ஷாக்
மணமகள் ஊர்வலத்தில் ஹெட்டல் திடீரென மயங்கி விழுந்த நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
காந்திநகர்: குஜராத்தில் திருமணத்தின்போது மணப்பெண் இறந்ததால் மணப்பெண்ணின் சகோதரியை கட்டி வைக்க வேண்டும் என்று மாப்பிள்ளை அடம்பிடித்துள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் ராணாபாய் புத்தாபாய் அல்கோதர். இவர் கடந்த சில நாட்களாக தனது மகன் விஷாலுக்கு பெண் தேடி வந்திருக்கிறார். அதேபோல, பாவ்நகரை சேர்ந்த ஜினாபாய் ரத்தோட் தனது மகள் ஹெட்டலுக்கும் வரன் தேடி வந்துள்ளார். இதனையடுத்து இவர்கள் இருவரும் ஒருவரையொரு சந்தித்து தங்களது மகன்/மகளின் திருமணம் தொடர்பாக ஆலோசனை செய்துள்ளனர்.
பின்னர் விஷாலுக்கும், ஹெட்டலுக்கும் விஷயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து பெற்றோர்களின் யோசனை குறித்து பேசியிருக்கின்றனர். பின்னர் இருவரும் திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பாவ்நகரிலேயே திருமணம் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. அதன்படி திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன. திருமணத்திற்கு முதல்நாள் பெண் அழைப்பு நடந்திருக்கிறது.

திடீரென உயிரிழப்பு
அப்போது மணமகள் ஹெட்டலுக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் அதை பெரிதுபடுத்தாமல் இருந்திருக்கிறார். பின்னர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை எதிர்பாராத விஷால், தனது வருங்கால மனைவி ஹெட்டலை எழுப்ப முயன்றுள்ளார். ஆனால் ஹெட்டல் எழவில்லை, உடனடியாக அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், ஹெட்டல் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக கூற கல்யாண வீடு சோகத்தில் மூழ்கியுள்ளது.

திருமணம்
ஹெட்டாலின் குடும்பம் மருத்துவமனையின் பிணவறையில் இருக்க, அந்த பக்கம் மாப்பிள்ளை வீட்டார் திருமணம் குறித்து நச்சரிக்க தொடங்கியுள்ளனர். உடனடியாக எனது பையனுக்கு பெண் வேண்டும். இந்த திருமணம் நடந்தே ஆக வேண்டும் என்று கேட்க, ஹெட்டல்லின் தந்தைக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. திருமணத்தில் சோக சம்பவம் நடந்துவிட்டது எங்களை மன்னித்துவிடுங்கள் என்று கூறியுள்ளனர்.

தங்கை
ஆனால் என்ன சொல்லியும் சமாதானம் ஆகாத விஷாலின் குடும்பத்தினர் ஹெட்டலின் தங்கையை தங்களது மகனுக்கு மணமுடிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். இதை கேட்டு ஷாக்கான ஹெட்டலின் குடும்பத்தினர், "இன்னும் பெண்ணின் உடல் கூட தகனம் செய்யப்படவில்லை. ஆனால் அதற்குள் இப்படி நிர்ப்பந்தம் செய்கிறீர்களே" என்று சத்தம் போட்டுள்ளனர். என்ன பேசியும் மணமகன் வீட்டார் சமாதானம் ஆகவில்லை. எனவே இறுதியாக மாப்பிள்ளையிடம் ஒரு வார்த்தை கேட்கலாம் என்று கூறியுள்ளனர்.

மீண்டும் திருமணம்
பெண் வீட்டாருக்கு டிவிஸ்ட் வைக்கும் வகையில் மாப்பிள்ளையும், எனக்கு ஹெட்டலின் சகோதரியை திருமணம் செய்ய வேண்டும் என்று சொல்ல மணமகள் வீட்டார் அதிர்ச்சியில் உரைந்துபோயுள்ளனர். பின்னர் ஊர் பெரியோர்கள் பேசி, திருமண வீட்டில் சோகம் நடந்தாலும், அதனை பொருட்படுத்தாது திருமணம் செய்து முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். பின்னர் ஒருவழியாக ஹெட்டலின் சகோதரியை விஷால் திருமணம் செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications