பஞ்சாப் தேர்தல்: முதல்வர் அமரீந்தர்சிங் தலைமையில் காங். தேர்தலை எதிர்கொள்ளும்: ஹரீஷ் ராவத் திட்டவட்டம்
டேராடூன்: பஞ்சாப் சட்டசபை தேர்தலை முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலேயே காங்கிரஸ் எதிர்கொள்ளும் என்று அம்மாநில மேலிட பொறுப்பாளரான ஹரீஷ் ராவத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் அமரீந்தர்சிங்கை முதல்வர் பதவியில் இருந்து மாற்றும் கோரிக்கையை ஏற்கப் போவதில்லை என்பதையும் தெரிவித்துள்ளார் ஹரீஷ் ராவத்.
பஞ்சாப் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ளது. ஆனால் பஞ்சாப் மாநில ஆளும் காங்கிரஸில் அதிருப்தி குரல்கள் பகிரங்கமாக வெடித்துள்ளன.

முதல்வர் அமரீந்தர்சிங் மீது அடுக்கடுக்கான புகார்களை 4 கேபினட் அமைச்சர்கள் முன்வைத்துள்ளனர். அத்துடன் முதல்வர் அமரீந்தர்சிங்கை மாற்றியே ஆக வேண்டும் என்பதிலும் அவர்கள் பிடிவாதமாக இருக்கின்றனர்.
இந்நிலையில் 4 அதிருப்தி அமைச்சர்களும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான ஹரீஷ் ராவத்தை இன்று சந்தித்து பேசுவதாகவும் அதன் பின்னர் டெல்லி சென்று சோனியா காந்தியிடம் தங்களது கோரிக்கையை வலியுறுத்த உள்ளதாகவும் கூறியிருந்தனர். இதனையடுத்து 4 பேரும் டேராடூனில் ஹரீஷ் ராவத்தை சந்தித்து பேசினர். அப்போது அமரீந்தர்சிங் மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தனர்.
அத்தனையையும் கேட்டுக் கொண்ட ஹரீஷ்ராவத், அமரீந்தர்சிங்கை மாற்றும் கோரிக்கையை ஏற்க முடியாது என்பதை வெளிப்படுத்தி உள்ளார். அத்துடன் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை அமரீந்தர் சிங் தலைமையிலேயே காங்கிரஸ் கட்சி சந்திக்கும் எனவும் திட்டவட்டமாக ஹரீஷ் ராவத் அந்த அதிருப்தி அமைச்சர்களிடம் கூறியிருக்கிறார். இதன் மூலம் அதிருப்தியாளர்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதிருப்தி அமைச்சர்கள் டெல்லி சென்று சோனியா காந்தியிடம் முறையிட உள்ளனர்.












Click it and Unblock the Notifications