"பாஜகவுக்கு பின்னடைவு".. ஹரியானாவில் ஆட்சியை கைப்பற்றும் காங்கிரஸ்! பரபர கருத்து கணிப்பு
சண்டிகர்: ஹரியானாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆட்சியில் இருக்கும் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் அரியணை ஏறும் என்று பரபரப்பான கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. லோக்சபா தேர்தலில் 370 தொகுதிகளில் வெல்லும் முனைப்புடன் இறங்கிய பாஜகவுக்கு வெறும் 240 தொகுதிகள் மட்டுமே கிடைத்த நிலையில் தற்போதைய இந்த கருத்து கணிப்பும் பெரிய அதிர்ச்சியை வழங்கி உள்ளது.
ஹரியானா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக மனோகர் லால் கட்டார் இருந்தார். லோக்சபா தேர்தலையொட்டி மனோகர் லால் கட்டார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பாஜக தலைவரான நவாப் சிங் சைனி முதல்வராக செயல்பட்டு வருகிறார்.

ஹரியானாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 46 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும். கடந்த 2019 தேர்தலில் பாஜக ஆட்சியை பிடித்தது. பாஜக 41 இடங்களில் வென்ற நிலையில் பிற கட்சி மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது.
தற்போது 3 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் பெரும்பான்மைக்கு மொத்தம் 44 எம்எல்ஏக்கள் வேண்டும். தற்போது பாஜகவுக்கு 41 எம்எல்ஏக்கள், ஒரு எச்எல்பி கட்சி எம்எல்ஏ, ஒரு சுயேச்சை என்று மொத்தம் 43 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் மைனாரிட்டி ஆட்சியில் பாஜக நிர்வாகம் செய்து வருகிறது. மறுபுறம் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 29 எம்எல்ஏக்கள் உள்ளன. மேலும் 3 சுயேச்சைகள் காங்கிரஸ் பக்கம் உள்ளனர். இதுதவிர ஜேஜேபி கட்சிக்கு 10 எம்எல்ஏக்கள், ஐஎன்எல்டி கட்சிக்கு ஒரு எம்எல்ஏக்கள், ஒரு சுயேச்சைகள் என்று மொத்தம் 14 பேர் பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்காமல் உள்ளனர்.
இந்நிலையில் தான் வரும் அக்டோபர் மாதம் மீண்டும் ஹரியானாவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தயாராகி வருகின்றனர். மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதேவேளையில் பாஜகவை வீழ்த்தி அரியணை ஏறும் முனைப்புடன் காங்கிரஸ் கட்சி களப்பணியை தொடங்கி உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ளதால் தற்போது அங்கு தேர்தல் களம் மெதுமெதுவாக சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
இத்தகைய சூழலில் தான் ஹரியானா சட்டசபை தேர்தல் தொடர்பாக People Pulse Research Organization சார்பில் அந்தமாநிலத்தில் மக்களிடம் நேரடியாக கருத்துகள் கேட்டு Haryana Mood Survery என்ற பெயரில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பு என்பது ஜூன் 25ம் தேதி தொடங்கி ஜூலை 24ம் தேதி வரை ஒரு மாதம் வரை நடந்தது. இதன் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.
அதன்படி வரும் சட்டசபை தேர்தலில் பாஜகவை விட காங்கிரஸ் கட்சி அதிக ஓட்டுகளை பெற்று வென்று ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு 44 சதவீத ஓட்டுகளை பெற்று 43 முதல் 48 தொகுதிகளில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் ஆட்சியை பிடிக்க 46 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் அந்த கட்சி 43 முதல் 48 தொகுதிகளில் வெல்லும் என கூறப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கலாம். இல்லாவிட்டால் தனிப்பெரும்பான்மைக்கு 3 எம்எல்ஏக்கள் வரை குறைவாக கிடைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‛‛மைனாரிட்டி அரசு’’.. ஹரியானாவில் கலையப்போகிறதா பாஜக ஆட்சி? மெஜாரிட்டி பெறுவதில் சிக்கல்
அதேவேளையில் பாஜகவுக்கு இந்த கருத்து கணிப்பு என்பது பெரும் அதிர்ச்சியை வழங்கி உள்ளது. அதாவது பாஜகவுக்கு 41 சதவீத ஓட்டுகள் கிடைக்கும் என்றும், அந்த கட்சி 34 முதல் 39 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியிடம் பாஜக ஆட்சியை பறிகொடுக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் ஜேஜேபி, என்ஐஎல்டி, பகுஜன் சமாஜ், ஆம்ஆத்மி, மற்றவர்கள் 3 முதல் 8 இடங்களில் வெற்றி பெறலாம் என்று கூறப்படுகிறது. இதில் ஐஎன்எல்டி மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு 3 சதவீத ஓட்டும், ஜேஜேபி கட்சிக்கு 2 சதவீத ஓட்டும், ஆம்ஆத்மி கட்சிக்கு ஒரு சதவீத ஓட்டும், மற்றவர்களுக்கு 9 சதவீத ஓட்டுகளும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications