ராஜஸ்தானில் தானமாக பெற்ற 742 கண்கள் விரயம்: உயர்மட்ட விசாரணைக்கு அரசு உத்தரவு
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மருத்துவமனை ஒன்றில் தானமாகப் பெறப்பட்ட 742 கண்கள் விரயமாக்கப் பட்ட அதிர்ச்சித் தகவல் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.
தானங்களில் சிறந்த தானம் கண் தானம். வாழ்விற்குப் பின்னரும் மற்றவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றுங்கள் எனப் பலப் பிரச்சாரங்கள் மூலம் கண் தானம் குறித்த விழிப்புணர்வு ஒரு பக்கம் வழங்கப் பட்டிருக்கக் கூடிய நிலையில், ராஜஸ்தான் மருத்துவமனை ஒன்றில் தானமாகப் பெறப்பட்ட 742 கண்கள் விரயமாக்கப் பட்டது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் எஸ்.என். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. அந்த மருத்துவமனையில் இயங்கி வரும் கண் வங்கியின் 17 வருடத் தகவல்களை வேண்டி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் விஜேந்திர ராஜ் மேத்தா என்பவர் விண்ணப்பித்திருந்தார். அதன்படி, கடந்த 1996ம் ஆண்டு முதல் தானமாக பெற்ற மொத்த கண்கள் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து கல்லூரியில் இருந்து பெறப்பட்ட தகவல்களை தகவல் ஆணையம் அவருக்கு அனுப்பி வைத்தது.
அதில், 1996ம் ஆண்டு முதல் இதுவரையில் மருத்துவமனைக்கு 1805 கண்கள் தானம் செய்யப்பட்டதாகவும், அதில் 1063 கண்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், மீதமுள்ள 742 கண்கள் யாருக்கும் பொருத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
கண்பார்வை அற்ற யாருடைய வாழ்விலாவது ஒளியேற்றும் என்ற நம்பிக்கையில் தானமாக வழங்கப் பட்ட கண்கள் இவ்வாறு வீணாக்கப்பட்டிருப்பது ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேந்திர ரத்தோர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், ‘742 கண்களை வீணாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த உத்தரவிடப் பட்டுள்ளது. மேலும், மொத்தம் உள்ள 7 கண் வங்கிகளிலும் ஆய்வு செய்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே, சம்பந்தப்பட்ட கல்லூரியின் துணை முதல்வர், "2006ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை பெறப்பட்ட கண்களில் 90 சதவீத கண்களை பயன்படுத்தி விட்டோம். பொருத்த முடியாமல் போனது மற்றும் நோய்த்தொற்று ஏற்பட்டதால் மற்ற கண்கள் பயன்படுத்தப்படவில்லை" என விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications