"இந்தி என்ன.. நமக்கு தேவை என்றால் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்கலாம்!" சந்திரபாபு நாயுடு நறுக்
அமராவதி: மும்மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக இப்போது நாடு முழுக்க விவாதங்கள் எழுந்துள்ளது. இதற்கிடையே இது தொடர்பாக ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு சில முக்கிய கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளார். ஒருவர் எத்தனை மொழிகளைக் கற்க முடியுமோ.. அவ்வளவு மொழிகளைக் கற்பது நல்லது தான் என அவர் குறிப்பிட்டார்.
நமது நாட்டில் இப்போது மொழி கொள்கை குறித்தே விவாதம் நடந்து வருகிறது. திமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் இரு மொழி கொள்கையே போதும் என்றும் மும்மொழி கொள்கை தேவையில்லை என்றும் கூறி வருகிறது. அதேநேரம் பாஜக உள்ளிட்ட கட்சிகள் மும்மொழி கொள்கையின் அவசியத்தை வலியுறுத்தி வருகிறது.

சந்திரபாபு நாயுடு
இதற்கிடையே ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இது தொடர்பாக சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டுக்கும் அவற்றின் பயன்பாடுகள் உள்ளதாகக் குறிப்பிட்ட சந்திரபாபு நாயுடு, இரண்டையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார். இது தொடர்பாக ஆந்திர சட்டசபையில் அவர் மேலும் பேசுகையில், "இந்தி தேசிய மொழி. ஆங்கிலம் சர்வதேச மொழி.. இந்தியர்கள் இப்போது வெவ்வேறு நாடுகளுக்குச் செல்கிறார்கள். இதனால் நமக்குச் சர்வதேச மொழிகளும் தேவை" என்றார்.
வாழ்க்கை தேவை என்றால்
அடுத்து அவர் சொன்ன விஷயம் தான் முக்கியம். அதாவது நமது வாழ்க்கை நடத்த எந்த மொழி தேவையோ அதை கற்றுக் கொள்ள வேண்டும்.. அதேநேரம் தாய்மொழியை விட்டுக்கொடுக்கக்கூடாது என அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், "நமது வாழ்வாதாரத்திற்காக, நாம் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக் கொள்வோம். ஆனால், தாய்மொழியை மறக்க மாட்டோம். மொழி என்பது தொடர்புக்கு மட்டுமே. ஆனால், ஒரு விஷயத்தை மறந்துவிடாதீர்கள். நாம் எவ்வளவுக்கு எவ்வளவு அதிக மொழிகளைக் கற்றுக்கொள்கிறோமோ.. அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது.
மொழி வேறு அறிவு வேறு
மொழி என்பது தொடர்புக்கு மட்டுமே.. மொழி தெரிந்ததால் மட்டும் அறிவு வந்துவிட்டதாக ஆகாது.. தாய் மொழியில் (தாய் மொழி வழிக் கல்வி) படிப்பவர்கள் மட்டுமே உலகம் முழுவதும் சிறந்து விளங்குகிறார்கள். எந்தவொரு விஷயத்தையும் நாம் தாய் மொழியில் படிக்கும் போது அதை எளிதாகப் புரிந்து கொள்வோம்.
நான் உங்களுக்கு மிகத் தெளிவாகச் சொல்கிறேன். மொழி என்பது வெறுப்பதற்கானது அல்ல. இங்கு (ஆந்திரப் பிரதேசத்தில்) தாய்மொழி என்பது தெலுங்கு. இந்தி தேசிய மொழி.. சர்வதேச மொழி ஆங்கிலம். மேலும், ஜப்பான், ஜெர்மனி போன்ற பிற நாடுகளுக்கும் இப்போது இந்தியர்கள் பலர் செல்கிறார்கள். அந்த மொழிகளையும் அவர்கள் அங்குக் கற்க முடிந்தால் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மொழிகளை வைத்து தேவையற்ற அரசியலில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை.. முடிந்தவரைப் பல மொழிகளைக் கற்க வேண்டும்" என்றார்.
பவன் கல்யாண்
சில நாட்களுக்கு முன்பு தான் மொழி பிரச்சினை தொடர்பாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருந்தார். இப்போது கிட்டதட்ட ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்த கருத்துகளைக் கூறியுள்ளார். கடந்த வாரம் தனது கட்சியின் 11வது ஆண்டு விழாவில் பேசிய நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண், "நாட்டின் ஒருமைப்பாட்டைப் பேணவும் மக்களிடையே அன்பையும் ஒற்றுமையையும் வளர்க்கவும் மொழியியல் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்..
இந்தியாவிற்குத் தமிழ் உட்படப் பல மொழிகள் தேவை, இரண்டு மொழிகள் மட்டும் போதாது. தமிழக அரசியல்வாதிகள் ஏன் இந்தியை எதிர்க்கிறார்கள்? ஆனால், அவர்களே தங்கள் திரைப்படங்களை இந்தியில் டப்பிங் செய்ய அனுமதிக்கிறார்கள்? அவர்களுக்கு பாலிவுட் பணம் வேண்டும்? ஆனால், இந்தியை எதிர்க்கிறார்கள். இந்த லாஜிக் புரியவில்லை" என்று பேசியிருந்தார்.

கொடுத்த விளக்கம்
அவரது இந்த பேச்சு இணையத்தில் பேசுபொருள் ஆன நிலையில், இது தொடர்பாகப் பின்னர் பவன் கல்யாணே விளக்கமளித்தார். அதாவது தான் ஒரு போதும் இந்தியை ஒரு மொழியாக எதிர்த்தது இல்லை என்றும் அதேநேரம் இந்தியைக் கட்டாயப்படுத்தும் போது அதை நிச்சயம் எதிர்ப்பேன் என்றார். மேலும், புதிய கல்விக் கொள்கை 2020ம் கூட எந்தவொரு இடத்திலும் இந்தியைக் கட்டாயமாக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications