இந்திராவை கவிழ்த்த இந்தி பேசும் மாநிலங்கள்.. எமெர்ஜென்சிக்கு பிந்தைய தேர்தலில் நடந்தது என்ன?
டெல்லி: எந்த இந்தி மொழியை தேசிய மொழியாக அறிவிக்க காங்கிரஸ் அரசாங்கம் முயற்சி செய்ததோ அந்த இந்தி மொழி பேசும் மாநிலங்கள்தான் எமெர்ஜென்சிக்கு பிறகு, இந்திரா காந்திக்கு தேர்ந்தலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தின. ஆனால் பாதிக்கப்பட்ட தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்கள், இந்திராவுக்கு எதிராக பெரும் கோபத்தை வெளிப்படுத்தவில்லை. 'இந்தியாஸ்பென்ட்' இணையதளம் இதுகுறித்த ஆய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளது.

அண்ணா போராட்டம்
"பெரும்பான்மையானோர் பேசும் மொழிதான் தேசிய மொழியாக்கப்பட வேண்டும் என்றால், இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள காக்காவைதான், மயிலுக்கு பதிலாக தேசிய பறவையாக அறிவிக்க வேண்டும்" என்று, 1962ம் ஆண்டு, இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அண்ணா முழங்கிய 13 ஆண்டுகளுக்கு பிறகுதான், இந்திரா காந்தி காலத்தில் எமெர்ஜென்சி கொண்டுவரப்பட்டது.

எமெர்ஜென்சி
சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் நிகழ்வு எமெர்ஜென்சி. 1971ம் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலில் பெரும்பான்மை பலம் கொடுத்து நாடாளுமன்றம் அனுப்பிய மக்களுக்கு இந்திரா அளித்த அதிர்ச்சி பரிசு அது. நாடு முழுவதிலும் எமெர்ஜென்சிக்கு எதிராக பெரும் போராட்டங்கள் வெடித்தன. தமிழகத்திலும் பல தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்திராவுக்கு பின்னடைவு
இதையடுத்து 1977ம் ஆண்டு, மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற்றது. அப்போதுதான் ஆச்சரியம் காத்திருந்தது. எந்த ஹிந்தியை ஜவகர்லால் நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு தேசிய மொழியாக்க முன்முயற்சி எடுத்து பெரும் போராட்டங்களை எதிர்கொண்டதோ, அந்த இந்தி பேசும் மாநிலங்கள்தான், நேருவின் மகள் இந்திராவை விரட்டி விரட்டி அடித்தன.

இந்தி பேசும்-பேசாத மாநிலங்கள்
உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகியவை இந்தி பேசும் மாநிலங்களாக வரையறுக்கப்பட்டால், தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்கள் இந்தி பேசாத மாநிலங்கள் என்று வறையறுக்கலாம்.

90 சதவீதம் எதிர்ப்பு
12 கோடிக்கும் அதிக வாக்காளர்கள், 1977ம் ஆண்டு வாக்குப்பதிவின்போது, வாக்களிக்க தகுதியுடையவர்கள். அதில் 65 சதவீதம் பேர் காங்கிரசுக்கு எதிராக வாக்களித்தனர். எதிர்ப்பு வாக்குகளில் 90 சதவீதம், இந்தி பேசும் மாநிலங்களில் விழுந்தவை என்பதுதான் இதி்ல சிறப்பு. எஞ்சிய 35 சதவீத அதிருப்தி வாக்குகள் மட்டும் தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் இருந்து விழுந்தவை.

ஆதரவு
1971 மற்றும் 1977ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், காங்கிரசுக்கு எதிராக வாக்களித்த 63 லட்சம் வாக்காளர்கள் இந்தி பேசும் மாநிலங்களை சேர்ந்தவர்கள். ஆதரவாக வாக்களித்தவர்களில் 20 லட்சம் பேர் இந்தி பேசாத மாநிலங்களை சேர்ந்தவர்கள்.

இந்தி பேசா மாநிலங்கள்
இன்னும் சொல்லப்போனால், 1971ம் ஆண்டு பொதுத் தேர்தலைவிட, எமெர்ஜென்சிக்கு பிந்தைய 1977ம் ஆண்டு தேர்தலில்தான் இந்தி பேசாத மாநிலங்கள் காங்கிரசுக்கு கொஞ்சம் அதிக வாக்குகளை அள்ளிக் கொடுத்துள்ளன.
இந்திராவுக்கு எதிராக விழுந்த வாக்குகளில் 90 சதவீதம் இந்தி பேசும் மாநிலங்களில் பதிவானவைதான் என்பது புள்ளி விவரங்கள் மூலம் நன்கு தெரிகிறது.

எப்போதும் வித்தியாசமே
அண்ணா தனது கொள்கையை வென்று காட்டி, இந்தியை, கட்டாய திணிப்பு செய்யவிடாமல் தடுத்துவிட்டார். இன்றுவரையில் இந்தி மற்றும் இந்தி பேசாத மாநிலங்கள் அரசியல்ரீதியாக மாறுபட்ட கருத்தை கொண்டுள்ளது மட்டும் அப்படியே தொடருகிறது. உதாரணம், 2014ம் ஆண்டு மக்களவை தேர்தல் ரிசல்ட்.












Click it and Unblock the Notifications