"ட்விஸ்ட் கொடுப்பார் சந்திரபாபு நாயுடு.." துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி சொன்ன வார்த்தை
அமராவதி: நமது நாட்டில் இப்போது துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதில் எதிர்க்கட்சிகள் சார்பில் சுதர்சன் ரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே சந்திரபாபு நாயுடு அரசியல் களத்தில் பல ட்விஸ்ட்களை கொடுத்துள்ளார் என்றும் இந்த முறையும் அவர் சரியான முடிவை எடுப்பார் என்றும் சொல்லி சுதர்சன் ரெட்டி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
ஜெகதீப் தன்கர் ராஜினாமாவை தொடர்ந்து இப்போது துணை குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் பாஜக சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மறுபுறம் இந்தியா கூட்டணி சார்பில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார்.

சுதர்சன் ரெட்டி
தமிழகத்தில் அடுத்தாண்டு தேர்தல் நடக்கும் நிலையில், ராதாகிருஷ்ணனை வேட்பாளராக அறிவித்து பாஜக செக் வைத்தது. அதற்கு பதிலடியாகவே ஆந்திராவைச் சேர்ந்த சுதர்சன் ரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது ஆந்திராவில் ஆளும் கட்சியாக இருக்கும் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் பவன் கல்யாணுக்கு வைக்கப்பட்ட செக்காக பார்க்கப்படுகிறது.
ட்விஸ்ட் கொடுப்பார்
இதற்கிடையே சமீபத்தில் ஆங்கில டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சந்திரபாபு நாயுடு குறித்து சுதர்சன் ரெட்டி சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "சந்திரபாபு நாயுடு ஒரு தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர்.. நாட்டின் உயர்ந்த தலைவர்களில் ஒருவர். அவர் என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். தேசிய நலன் கருதி அவர் சரியான முடிவை எடுப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இதற்கு முன்பும் பல சந்தர்ப்பங்களில் அவர் அதைச் செய்திருக்கிறார்.
இந்திய அரசியல் களத்திற்கு அவர் பல ட்விஸ்ட்களை கொடுத்தவர்.. அரசியலில் பல மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளார். எனவே அவர் தேவையான முடிவை எடுப்பார்" என்றார். சுதர்சன் ரெட்டி ஆந்திராவைச் சேர்ந்தவராக இருந்தாலும் தெலுங்கு தேசம் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரான சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவளிப்பதாகக் கூறியிருக்கிறார். இந்தச் சூழலில் சந்திரபாபு நாயுடு ட்விஸ்ட் கொடுப்பார் என சுதர்சன் ரெட்டி கூறியிருக்கிறார்.
அரசியல் கட்சி சாராத வேட்பாளர்
எந்தவொரு அரசியல் கட்சியையும் சேராமல் இருப்பதால் பல்வேறு கட்சி பிரதிநிதிகள் தன்னுடன் தொடர்பில் இருப்பதாகவும் சுதர்சன் ரெட்டி கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "சில கட்சிகள் என்னுடன் நேரடியாகப் பேசி, எனக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளன. இதற்கு எளிய காரணம், நான் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருப்பதே அதற்குக் காரணமாகும்.
என்னை வேட்பாளராக எதிர்க்கட்சிக் கூட்டணி அறிவித்துள்ளது. அதாவது இந்த நாட்டில் எதிர்க்கட்சிகள் தான் சுமார் 66-67% மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. அதாவது, நான் இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர். என்டிஏ கூட்டணி பலமாகத் தோன்றினாலும், உண்மையில் போட்டி கடுமையாக இருக்கிறது. கூட்டணியைப் பொறுத்து முடிவுகள் ஈஸியாக மாற்றக்கூடும்.
அரசியலமைப்பு பதவி
துணை ஜனாதிபதி என்பது அரசியல் பதவி அல்ல.. மாறாக ஓர் அரசியலமைப்பு ரீதியான பதவி.. அரசியலமைப்புடன் எனது பயணம் 1971இல் தொடங்கியது. அப்போது நான் வழக்குரைஞராக எனது பணியை ஆரம்பித்தேன். அதன் பின்னர், நீதிபதியாகவும், தலைமை நீதிபதியாகவும் பதவியேற்றபோது, அதைப் பாதுகாப்பதாக உறுதிமொழி எடுத்தேன்" என்றார்.












Click it and Unblock the Notifications