அடிபட்ட புலியாக உறுமும் சீனா.. போர் விமானங்களை பறக்கவிட்ட இந்தியா? என்ன நடக்கிறது எல்லையில்?
இட்டாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா - இந்தியா மோதல் எதிரொலியாக அங்கு இந்திய ராணுவம் சார்பில் போர் விமானங்கள் இரவும் பகலுமாக பறந்து வருவதால் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை குறிவைத்து வரும் சீனா, இந்த முறை அருணாச்சலப் பிரதேசத்தை கைப்பற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளன.
உளவுத்துறையின் இந்த எச்சரிக்கை காரணமாகவே, அருணாச்சலப் பிரதேசத்தின் வான் பகுதிகளில் இந்திய போர் விமானங்கள் வட்டமிட்டு வருவதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பரபரப்பை ஏற்படுத்திய மோதல்
அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டார் பகுதிக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உருட்டுக்கட்டை, ஹாக்கி மட்டை, இரும்பு ராடு சகிதமாக நுழைந்த 300 சீனப் படையினரை, வெறும் 50 இந்திய ராணுவ வீரர்கள் இணைந்து விரட்டி அடித்துள்ளனர். கடந்த 2020-இல் லடாக்கில் பெரும் ஆராவாரத்துடன் நுழைந்து, பின்னர் இந்திய ராணுவத்தினருடன் சண்டையிட முடியாமல் ஓடியதை போல இந்த முறையும் சீன ராணுவத்தினர் பின்வாங்கியுள்ளனர்.

அடிபட்ட புலி - உளவுத்துறை எச்சரிக்கை
தவாங்கில் இருந்து இப்போதைக்கு சீன ராணுவம் பின் வாங்கினாலும், நிச்சயமாக மறுபடியும் அவர்கள் நுழைவார்கள் என 'ரா', 'ஐ.பி.' ஆகிய உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன. அருணாச்சலப் பிரதேச எல்லைப் பகுதிகளில் போர்புரிய வசதியாக விமானப் படை தளங்கள், ஓடுபாதைகள், பெரிய பாலங்கள் உள்ளிட்டவற்றை சீனா கட்டி இருக்கிறது. எனவே, கடந்த 9-ம் தேதி நடந்த மோதல் சீனாவின் ஒரு ஒத்திகை முயற்சியாகவே இருந்திருக்கிறது. அருணாச்சலப் பிரதேசத்தில் இந்தியாவின் தயார் நிலையையும், தவாங்கில் இந்தியா மேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அறிந்துகொள்வதற்காகவே சீனா இவ்வாறு அத்துமீறி நுழைந்ததாக உளவு அமைப்புகள் கூறுகின்றன. எனவே, இப்போது அடிபட்ட புலியாக இருக்கும் சீனா, மீண்டும் அருணாச்சலில் நுழையும் என அவை கூறியுள்ளன.

சீறிப்பாயும் போர் விமானங்கள்
இதன் தொடர்ச்சியாகவே, அருணாச்சலப் பிரதேசத்தில் தவாங், தலைநகர் இட்டாநகர் மற்றும் சீன எல்லையை ஒட்டிய பகுதிகளில் இந்திய போர் விமானங்கள் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து பறந்து வருகின்றன. இந்திய எல்லைக்குள் சீன துருப்புகள் நுழைந்தால் தாக்குதல் நடத்தும் நோக்கில் போர் விமானங்கள் பறந்து வருவதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அருணாச்சலப் பிரதேசம் - சீன எல்லையில் பதற்றமான சூழல் காணப்படுகிறது.

பேச்சுவார்த்தையும் தீவிரம்
ஒருபுறம், அருணாச்சலப் பிரதேசத்தில் போர் விமானங்கள் பறந்து, பதற்றத்தை அதிகப்படுத்தி வரும் நிலையில், மறுபுறம் இந்தியா - சீனா இடையே ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தையும் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியப் பகுதிகளை குறிவைத்து சீனா தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வரும் நிலையில், அந்நாட்டுக்கு சீனாவுக்கு கடுமையான வார்த்தைகளில் இந்திய ராணுவம் கண்டனம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications