ராயல் சல்யூட்! 300 அடி போர்வெல்லில் சிக்கிய சிறுவன்! உயிரோடு மீட்ட ராணுவம்! நடந்ததை நீங்களே பாருங்க!
காந்திநகர் : குஜராத் மாநிலத்தில் 300 அடி போர்வெல் கிணற்றில் விழுந்த சிறுவனை சுமார் 40 நிமிட போராட்டங்களுக்கு பிறகு இந்திய ராணுவத்தினர் அடங்கிய மீட்புக் குழுவினர் மீட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களிலும் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளில் சிறுவர், சிறுமியர் விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.
இத்தகைய மரணங்களைத் தடுப்பதற்கான உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்பது பெரும் கவலையாகவே உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.

ஆழ்துளைக் கிணறு மரணம்
இதுபோல் நாடு முழுவதிலும் ஏதும் அறியாத சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தைகள் பலர் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்து உயிரை விடும் துயரங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. திருவண்ணாமலை தேவி, கிருஷ்ணகிரி குணா, திருநெல்வேலி சுதர்சன் ஆகியோர் ஆழ்துளை கிணறுகளில் சிக்கியனர். இதில் குணா மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். தமிழக மட்டுமில்லை இந்தியா முழுவதும் இதே நிலைதான் நீடிக்கிறது. அரசு எவ்வளவோ நடவடிக்கைகள் எடுத்தும் ஆழ்துறை கிணறு மரணங்களை தடுக்க முடியவில்லை.

அதிர்ச்சி சம்பவங்கள்
குறிப்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருச்சி மாவட்டம் மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் தனது வீட்டருகில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் அங்கிருந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தான். அவனை மீட்க அன்றிரவு முழுவதும் எடுக்கப்பட்ட முயற்சிகள் வீணான நிலையில் அதிகாலையில் 70 அடிக்கும் கீழே சென்றுவிட்ட நிலையில் நீண்ட போராட்டங்களுக்கு பிறகும் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போனது அனைவரது நெஞ்சையும் உலுக்கியது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் 300 அடி போர்வெல் கிணற்றில் விழுந்த சிறுவனை சுமார் 40 நிமிட போராட்டங்களுக்கு பிறகு இந்திய ராணுவத்தினர் அடங்கிய மீட்புக் குழுவினர் மீட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 வயது சிறுவன்
குஜராத் மாநிலத்தில் உள்ள சுரேந்தர் நகர் மாவட்டத்தில் துடாபூர் கிராமத்தில் ஒரு தோட்டத்தில் சிவம் என்கிற இரண்டு வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அவனது பெற்றோர் அப்போது அதே தோட்டத்தில் கூலி வேலை செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது நேற்று இரவு 8 மணி அளவில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அங்கு மூடப்படாமல் இருந்த 300 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் சிறுவன் சிவம் விழுந்துள்ளார். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும் பேரிடர் மேலாண்மை பிரிவு அதிகாரிகளுக்கும் தகவல் கிடைத்ததையடுத்து அங்கு விரைந்த மீட்புக் குழுவினர் இந்திய ராணுவத்துடன் சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

உயிருடன் மீட்பு
நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சுமார் 30 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிவம் ஆழ்துளை கிணற்றில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டார். பின்னர் அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். ராணுவம் காவல்துறை மற்றும் கிராம மக்கள் உதவியுடன் 40 நிமிடங்களை சிறுவனை மீட்கும் பணி நிறைவடைந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். உயிருடன் மீட்ட சிறுவனை ராணுவத்தினர் கட்டியணைத்து முத்தமிட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications