தமிழகத்தில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் அதிருப்தி... மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்
டெல்லி: தமிழகத்தில் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் செயல்படுத்தப்படுவது குறித்து மத்திய கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மத்திய கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
2013-14 நிதியாண்டில் தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை 2013-14 நிதியாண்டில் செயல்படுத்த ஏற்கெனவே ரூ. 2,844 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. தற்போது கூடுதலாக ரூ. 1,846 கோடி நிதியை ஒதுக்கியுள்ளோம்.

கணக்கு தணிக்கையாளர் புகார்
மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில், தமிழ்நாட்டில் திட்டத்துக்காக உருவாக்கப்பட்ட சொத்துகள் நீடிக்காத தன்மை வாய்ந்தவையாக உள்ளன எனக் கூறப்பட்டுள்ளது. நீடித்த தன்மை கொண்ட சொத்துகளான சிறு, நடுத்தர விவசாயிகளின் நிலங்களில் வேலை செய்வோருக்கு வேலை இல்லாத நாள்களில் வேலை தருவதுதான் இத் திட்டத்தின் நோக்கமாகும். அதில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்.

மின்னணு முறை
ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மூலம் பயனாளிகளுக்கு நிதி வழங்க மத்திய பிரதேசம், ஓடிசா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மின்னணு நிதி மேலாண்மை முறை கையாளப்படுகிறது. இதன் மூலம் பயனாளிகளுக்கு ஊதியம் தாமதமின்றி கிராம பஞ்சாயத்துகள் மூலம் விநியோகிக்கப்படுகிறது.

தமிழகத்தில் இல்லையே..
ஆனால் தமிழகத்திலோ 31 மாவட்டங்களில் 7 மாவட்டங்களில்தான் அந்த வசதியைத் தமிழகம் தொடங்கியுள்ளது.

ரூ148க்கு பதில் ரூ70 தானே..
இத் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 2013-14 நிதியாண்டில் பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூ.148 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ. 70 ஊதியம் வழங்கப்படுவதாகத் தெரிய வருகிறது.

ரொக்கமாக பட்டுவாடா ஏன்?
நாடு முழுவதும் இத் திட்டப் பயனாளிகளுக்கு வேலைக்கான ஊதியம் வங்கிகள், அஞ்சலகங்கள் மூலம் வழங்கப்படுகிறது. ஆனால், மிக அதிக அளவில் பணப் பட்டுவாடா நடைபெறும் தமிழ்நாட்டில் அத்தகைய முறை கையாளப்படவில்லை. மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த மாவட்டங்களில்தான் திட்டப் பயனாளிகளுக்கு ரொக்கமாக ஊதியம் வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
ஆனால், சிறப்பான வங்கிச் சேவை, நிர்வாக வசதிகளைக் கொண்ட தமிழ்நாட்டில் மிகப் பெரிய அளவிலான தொகையை ரொக்கமாகப் பட்டுவாடா செய்வது ஏன் என விளங்கவில்லை. இவ்வாறு அந்த கடிதத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications