ஜம்மு காஷ்மீர்: பாஜகவுடன் கூட்டணியா? நாங்க இல்லாம எந்த ஆட்சியும் அமையாது: மெகபூபா முப்தி பரபர
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மக்கள் ஜனநாயகக் கட்சி இணைவதற்கான வாய்ப்புகள் இல்லை என அக்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். ஆனால் ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரவு இல்லாமல் எந்த ஒரு கட்சியாலும் ஆட்சி அமைத்துவிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார் மெகபூபா முப்தி.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் வரும் 18-ந் தேதி தொடங்கி அக்டோபர் 1-ந் தேதி வரை மொத்தம் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீரின் 90 தொகுதி வாக்குகளும் அக்டோபர் 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
ஜம்மு காஷ்மீர் முதல் கட்ட தேர்தலில் மொத்தம் 244 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். ஜம்மு காஷ்மீரில் தற்போது 2-வது கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது. இந்த வேட்பு மனுத் தாக்கல் நாளை நிறைவடைகிறது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் காங்கிரஸ்- தேசிய மாநாட்டுக் கட்சி- இடதுசாரிகளை உள்ளடக்கியதாக இந்தியா கூட்டணி களம் காண்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜேடியூவும் இணைந்து களம் காண்கிறது. மக்கள் ஜனநாயகக் கட்சி எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை.
ஜம்மு காஷ்மீர் தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளில் இந்தியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கக் கூடிய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாஜகவுடன் மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி அமைக்குமா? என்பது தொடர்பாக அக்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி விளக்கம் அளித்துள்ளார்.
ஶ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய மெகபூபா முப்தி, ஜம்மு காஷ்மீரில் பாஜகவுடன் தற்போதைய நிலையில் கூட்டணிக்கான வாய்ப்பு எதுவும் இல்லை. மக்கள் ஜனநாயகக் கூட்டணியின் செயல் திட்டத்தை எந்தக் கட்சி ஏற்கிறதோ அந்தக் கட்சியுடன் மட்டுமே கூட்டணி என தெரிவித்துள்ளோம். மக்கள் ஜனநாயகக் கட்சியைப் பொறுத்தவரை தொகுதி பங்கீடு, தேர்தல் வெற்றி என்பதற்காக களத்தில் இல்லை. ஜம்மு காஷ்மீரின் உரிமைகள், கண்ணியத்தைப் பாதுகாப்பதற்காக, மீட்பதற்காக களத்தில் உள்ளோம். ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவு இல்லாமல் எந்த ஒரு கட்சியாலும் ஆட்சி அமைத்துவிட முடியாது என்கிற நிலைமைதான் உருவாகும் என்றார்.
மேலும் 1947-ம் ஆண்டு முதலே தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சி அமைப்பதில்தான் கவனமாக இருக்கிறது. அதனைத் தாண்டி தேசிய மாநாட்டுக் கட்சி சிந்திப்பதே இல்லை. தேசிய மாநாட்டுக் கட்சியைப் போல அமைச்சர் பதவிக்கு ஆசைப்படுகிறவர்கள் இல்லை நாங்கள் என்றும் மெகபூபா முப்தி சாடினார்.












Click it and Unblock the Notifications