ஜெயலலிதாவின் தகுதி நீக்கம் முடிந்தது... ஆனால் மீண்டும் தேர்தலைச் சந்தித்தாக வேண்டும்!
டெல்லி: கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாது என்ற தகுதி நீக்கம் தானாகவே முடிந்து விட்டது. இருப்பினும் அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டுத்தான் சட்டசபை உறுப்பினராக முடியும் என்று தேர்தல் ஆணையத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து ஜெயலலிதா தனது சட்டசபை உறுப்பினர் பதவி, முதல்வர் பதவி ஆகியவற்றை இழந்தார். இந்த நிலையில் தற்போது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதால், அவரது தகுதி நீக்கமும் தானாகவே விலகி விட்டதாக தேர்தல் ஆணையத் தகவல்கள் கூறுகின்றன.

இருப்பினும் அவர் மீண்டும் தேர்தலில் நின்றுதான் சட்டசபை உறுப்பினராக முடியும். இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் சிலர் கூறுகையில், சட்டப்படி, அவரது தகுதி நீக்கம் முடிவுக்கு வந்து விட்டது. இனிமேல் அவர் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட முடியும். இருப்பினும் ஏற்கனவே ரத்தான அவரது சட்டசபை உறுப்பினர் பதவியை அவர் திரும்பப் பெற முடியாது. மீண்டும் போட்டியிட்டு வென்றுதான் அவர் சட்டசபை உறுப்பினராக முடியும் என்றனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி பெங்களூரு கோர்ட் தீர்ப்பு வெளியானது. அன்றே ஜெயலலிதா தனது சட்டசபை உறுப்பினர் பதவியை இழந்தார். தகுதிநீக்கத்தையும் சந்தித்தார்.
தற்போதைய கர்நாடக உயர்நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து ஜெயலலிதா மீண்டும் தேர்தல்களில் போட்டியிட தடை நீங்கியுள்ளது. அவர் முதல்வராகப் பதவியேற்றால், அன்றிலிருந்து அடுத்த 6 மாதத்திற்குள் அவர் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெல்ல வேண்டும்.












Click it and Unblock the Notifications