1992 முதல் பேசவில்லை! முடிவுக்கு வரும் பாட்டியின் 30 ஆண்டு மவுன விரதம்! ராமர் கோவிலுக்காக இப்படியா
அயோத்தி: கடந்த 1992ம் ஆண்டு முதல் தொடர்ந்து 30 ஆண்டுகளாக ஒரு வார்த்தை கூட பேசாமல் மவுன விரதம் இருந்து வரும் 85 வயது மூதாட்டி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி மீண்டும் பேச உள்ளார். அவர் ஏன் மவுன விரதம் இருந்தார்?, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் அவர் ஏன் மவுன விரதத்தை கலைக்க உள்ளார்? என்பது பற்றிய விபரம் வருமாறு:
பல்வேறு சர்ச்சைகள், நீதிமன்ற வழக்குகளைதொடர்ந்து உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோவில் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த கரசேவர்களுக்கு கிடைத்த வெற்றி இது என இந்து அமைப்பினரும், பாஜகவினரும் கூறி வருகின்றனர்.

அயோத்தி ராமர் கோவில் தொடர்பான வழக்கில் கடந்த 2019ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிது. அதில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை தொடர்ந்து ராமர் கோவில் கட்டுவதற்கு ஸ்ரீராம ஜென்ம தீர்த்த அறக்கட்டளை அமைக்கப்பட்டது. அதன்பிறகு பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோவில் கட்டும் பணிக்கான அடிக்கல்லை நாட்டினார்.
ராமர் கோவில் கும்பாபிஷேகம்: இதையடுத்து ராமர் கோவில் கட்டும் பணி விறுவிறுப்பாக தொடங்கியது.. நாகரா கட்டடக்கலையில் மொத்தம் 3 அடுக்குகளாக ராமர் கோவில் அங்கு கட்டப்பட்டு வருகிறது. தற்போது முதற்கட்ட பணிகள் முடிவடைந்துள்ளன. இதையடுத்து வரும் 22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்த விழாவில் பங்கேற்கிறார். இதற்கான பணிகள் வரும் 16ம் தேதியே தொடங்கி நடைபெற உள்ளது. இதனால் அயோத்தி ராமர் கோவில் விழாக்கோலம் பூண்டுள்ளது.
மவுன விரத மூதாட்டி: இந்நிலையில் தான் அயோத்தி ராமர் கோவிலுக்காக கடந்த 30 ஆண்டுகளாக 85 வயது மூதாட்டி ஒருவர் மவுன விரதம் இருந்து வருவதும், அவர் தனது மவுன விரதத்தை முடிவுக்கு கொண்டு வர உள்ளார். இந்த மூதாட்டியின் பெயர் சரஸ்வதி தேவி அகர்வால். இவர் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் அருகே உள்ள கரம்தாண்ட் பகுதியில் வசித்து வருகிறார். இவர் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் எனக்கூறி கடந்த 30 ஆண்டுகளாக மவுன விரதம் இருந்து வருகிறார். ராமர் கோவில் கட்டி திறக்கப்பட்ட பிறகு தான் மவுன விரதத்தை கைவிடுவதாக அவர் தெரிவித்து இருந்தார்.
யார் இவர்: சரஸ்வதி தேவி அகர்வாலின் கணவர் பெயர் தேவ்கினந்தன். இவர் உத்தர பிரதேச மாநிலம் போன்ரா கிராமத்ததை சேர்ந்தவர். தேவ்கினந்தன் இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு 4 மகன்கள், 4 மகள்கள் என மொத்தம் 8 குழந்தைகள். இதில் 3 பேர் இறந்த நிலையில் 5 பேருடன் சரஸ்வதி தேவி அகர்வால் வாழ்ந்து வருகிறார். இவர் ராஜஸ்தானில் பிறந்தார். திருமணமான பிறகு ஜார்க்கண்டில் வசிக்க தொடங்கினார். இவர் பள்ளிக்கு செல்லவில்லை. கணவர் கூறியபடி எழுதவும் படிக்கவும் கற்று கொண்டார். இந்து மதத்தில் தீவிர நம்பிக்கை கொண்ட இவர் ராமர் சார்ந்த புத்தகத்தை படிக்க தொடங்கினர். ஒருவேளை மட்டுமே அவர் தினமும் சாப்பிட்டு வருகிறார்.
1992 முதல் மவுன விரதம்: அதன்படி அவர் கடந்த 1992ம்ஆண்டு முதல் யாரிடமும் பேசாமல் மவுன விரதம் இருந்து வருகிறார். நம்மால் சில மணிநேரங்கள் கூட பேசாமல் இருப்பது கடினமாக காரியமாக உள்ள நிலையில் அவர் ராமர் கோவிலுக்காக 30 ஆண்டுகளாக மவுன விரதம் இருந்து வருகிறார். தற்போது ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் அவர் ஜனவரி 22ம் தேதி ஜெய் ஸ்ரீராம் கோஷத்துடன் மவுன விரதத்தை முடிக்க உள்ளார். இந்நிலையில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழாவில் பங்கேற்க வரும்படி சரஸ்வதி தேவி அகர்வாலும் ஸ்ரீராம ஜென்ம தீர்த்த அறக்கட்டளை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அயோத்திக்கு பயணம்: இவர் ராமர் கோவில் விழாவில் பங்கேற்பதற்கான நேற்று ஜார்கண்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இவரை அயோத்தி ரயில் நிலையத்தில் ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேத்திரத்தின் தலைவரான மஹந்த் நிருத்ய கோபால் தாஸின் மாணவர்களான மணீஷ் தாஸ் மற்றும் சஷி தாஸ் ஆகியோர் வரவேற்க உள்ளனர். அதன்பிறகு சரஸ்வதி தேவி அகர்வால் அடுத்த 4 மாதங்கள் வரை அங்கேயே தங்க உள்ளார்.
விரதம் தொடங்கியது எப்படி: இதுபற்றி சரஸ்வதி தேவி அகர்வாலின் மகன் ஹரிராமர் கூறுகையில், ‛‛எனது தாய் ஆன்மீக பயத்தை கடந்த 1992 மே மாதம் தொடங்கினார். ராம ஜென்மபூமி அறக்கட்டளையின் தலைவரான மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் கூறியபடி அவர் கம்தநாத் மலையை வலம் வந்தார். சித்ரகூடத்திற்குச் சென்று கல்பவாஸில் ஏழரை மாதம் தங்கினார். அப்போது நாள் ஒன்றுக்கு ஒரு கிளாஸ பால் மட்டும் குடித்து தினமும் 14 கிலோமீட்டர் மலையை சுற்றி வந்தார். 1992 டிசம்பர் 6ம் தேதி சுவாமி நிருத்ய கோபால் தாஸை சந்தித்தார். அப்போது ராமர் கோவில் கட்டுவதற்கான மவுன விரதம் இருக்கும்படி அவர் கூறினார். இதையடுத்து எனது தாய் மவுன விரதத்தை தொடங்கினார்''
சரஸ்வதி தேவி கூறுவது என்ன: இந்நிலையில் தான் ராமர் கோவில் கும்பாபிஏஜகத்துக்கு அழைக்க்பட்டது பற்றி சரஸ்வதி தேவி அகர்வாலிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் புத்தகத்தில் எழுதி பதிலளித்தார். அப்போது, ‛‛என் வாழ்க்கை முடிந்துவிட்டது. ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு ராமர் என்னை அழைத்துள்ளோம். எனது பிரார்த்தனையும், தியானமும் வீண்போகவில்லை. நன்கு பலன் அளித்துள்ளது. ராம நாமத்துடன் எனது மவுன விரதத்தை முடிக்க இருக்கிறேன்'' என்றார்.












Click it and Unblock the Notifications