ஆந்திர பட்டாசு ஆலையில் தீவிபத்து! 20 தொழிலாளர்கள் பலி! 100 அடி தூரத்தில் சிதறி கிடக்கும் உடல்கள்
அமராவதி: ஆந்திரா மாநிலம் காகிநாடா அருகே பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டு 20 தொழிலாளிகள் உடல் சிதறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
காகிநாடா அருகே வேட்டப்பாளையம் பகுதியில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு 35-க்கும் மேற்பட்ட நபர்கள் தொழிலாளிகளாக பணியாற்றி வருகிறார்கள்.

இன்றைய தினம் பட்டாசு ஆலையில் தொழிலாளிகள் வேலை பார்த்து வந்தனர். அப்போது அவர்கள் தயாரித்து வைத்திருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறியது. இதனால் கட்டட இடிபாடுகளுக்குள் தொழிலாளர்கள் சிக்கினர்.
சில தொழிலாளிகள் 100 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டனர். இந்த தீவிபத்தில் 20 பேர் உடல் சிதறி இறந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறார்கள். இந்த பட்டாசு ஆலை உரிய அனுமதியுடன் இயங்கி வந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் காகிநாடாவில் இவ்வளவு பெரிய பட்டாசு ஆலை இயங்கி வருவது இப்போதுதான் தெரிகிறது என்பதால் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழகத்தில் சிவகாசி, விருதுநகர் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் பலியாகும் சம்பவம் தொடர்ந்து வரும் நிலையில் ஆந்திராவிலும் இது போன்ற சோகம் நிகழ்ந்துள்ளது.
செல்வப்பெருந்தகை இரங்கல்
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: ஆந்திரா மாநிலம், காகிநாடா அருகில் உள்ள வேட்டப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் சூரிய ஸ்ரீ என்ற பட்டாசு ஆலை வெடி விபத்தில் 20 நபர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். பலர் படுகாயம் அடைந்துள்ள செய்தியும் வந்து கொண்டுள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் பூரண நலம் பெற வேண்டுமென விரும்புகிறேன்.
பட்டாசு ஆலைகள், கிடங்குகளிலும் அடிக்கடி வெடி விபத்துக்கள் நடைபெறுவதும், அதில் தொழிலாளர்கள் உயிரிழப்பதும் தொடர் கதையாகியுள்ளது. இவ்வாறான வெடி விபத்துகள் உடனடியாக தடுக்கப்படவேண்டும்.
பட்டாசு ஆலைகளிலும், அவை பாதுகாத்து வைக்கப்படும் கிடங்குகளிலும் முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாதது மிகப்பெரிய குறையாக இருக்கிறது. இந்தக் குறைகளை நிவர்த்தி செய்து இனி வரும் காலங்களில் வெடி விபத்தே இல்லாத மாநிலமாக உருவாக்கிட ஆந்திரா அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும், தொழிலாளர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததும் இத்தகைய கோர விபத்துகள் ஏற்பட காரணமாகிறது.
தமிழ்நாட்டில் கோடைகாலம் ஆரம்பிக்கும் முன்பே, வெயில் வாட்டி வதைக்கிறது. எனவே, எளிதில் தீப்பற்ற கூடிய பட்டாசு ஆலை, பெட்ரோல், டீசல் பங்குகள், கேஸ் பங்குகள் ஆகியவை பாதுகாப்பாகவும் முறையாக இயங்குகிறதா எனவும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications