போலீஸ் தடுத்தும் விடவில்லை.. திடீரென சுவர் ஏறி குதித்து மயானத்திற்கு போன காஷ்மீர் முதல்வர்! என்ன காரணம்
டெல்லி: காஷ்மீர் முதல்வராக இருப்பவர் உமர் அப்துல்லா. இவர் இன்று தனது அமைச்சர்களுடன் திடீரெனக் கல்லறை ஒன்றுக்குச் செல்கிறார். அங்கிருந்த பாதுகாவலர்கள் அவரை அனுமதிக்க மறுக்கவே உடனடியாக அவர் கல்லறை சுவர் மீது ஏறிக் குதித்து உள்ளே செல்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
காஷ்மீரில் 1931ம் ஆண்டு அப்போது மன்னராக இருந்த ஹரி சிங்கிற்கு எதிராக அங்குள்ள இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்திக் கொண்டு இருந்தனர். ஸ்ரீநகர் மத்தியச் சிறைக்கு அவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது மன்னரின் டோக்ரா ராணுவத்தினர் திடீரென அவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை ஆரம்பித்தனர். அதில் 22 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர்.

தடை விதித்த ஆளுநர்
22 பேர் கொல்லப்பட்ட இந்த ஜூலை 13ம் தேதி காஷ்மீர் தியாகிகள் தினமாக அங்கு அரசகரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அங்குள்ள பல்வேறு கட்சியினரும் அந்த 22 பேர் புதைக்கப்பட்ட கல்லறைக்குச் சென்று மரியாதை செலுத்துவார்கள். இருப்பினும், இந்தாண்டு அங்குள்ள லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா நிர்வாகம் இதற்குத் தடை விதித்தார். ஜூலை 13ம் தேதி எந்தவொரு நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என உத்தரவிட்டார்.
சுவர் ஏறி குதித்தார்
மேலும், ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர்கள் பலர், நேற்று வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். அவர்கள் தியாகிகள் தினத்தை அனுசரிப்பதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தச் சூழலில் இன்று திங்கள்கிழமை ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா தனது அமைச்சர்களுடன் தியாகிகள் கல்லறைக்குச் செல்லத் தடுப்புச்சுவரை ஏறிக்குதித்தார். பிறகு அங்குள்ள தியாகிகள் கல்லறைக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
இது தொடர்பான வீடியோவையும் அவர் தனது ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கல்லறையை போலீஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரைச் சூழ்ந்துள்ளனர். அதை நோக்கி அப்துல்லா தனது அமைச்சர்களுடன் செல்கிறார். கல்லறை கதவு பூட்டப்பட்டு இருக்கவே அப்துல்லா சுவர் மீது ஏறிக் குதித்துள்ளார். உள்ளே அஞ்சலி செலுத்திவிட்டுத் திரும்பியுள்ளார்.
உமர் அப்துல்லா
இது தொடர்பாக முதல்வர் உமர் அப்துல்லா, "1931 ஜூலை 13 தியாகிகளின் கல்லறைகளுக்கு எனது மரியாதையைச் செலுத்தி, பிரார்த்தனை செய்தேன். இங்குள்ள தேர்ந்தெடுக்கப்படாத அரசு (துணை நிலை ஆளுநரைக் குறிப்பிடுகிறார்) இதற்காக நௌஹட்டா சௌக்கிலிருந்து என்னை நடக்க வைத்துத் தடுத்தது. உள்ளே செல்ல வழியைத் தடுத்ததால் சுவர் ஏறிக் குதிக்க வேண்டி இருந்தது. எனது கைகளை எல்லாம் பிடித்து இழுத்துத் தடுக்க முயன்றனர். ஆனால், இன்று என்னை நிறுத்த முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.
சட்டவிரோதம் இல்லை
மேலும், கல்லறையின் உள்ளேயும் தன்னை சிலர் தாக்கியதாக அப்துல்லா மற்றொரு வீடியோவில் கூறியுள்ளார். அதில் அவர் மேலும், "என்னை எப்படியாவது நிறுத்திவிட வேண்டும் என அவர்கள் நினைத்தனர். ஆனால் நான் மிகவும் உறுதியானவன். சட்டவிரோதமாக நான் எதுவும் செய்யவில்லை. உண்மையில், நாங்கள் பிரார்த்தனை செய்வதை எந்தச் சட்டத்தின் அடிப்படையில் தடுக்கிறார்கள் என்பதை அவர்கள் தான் விளக்க வேண்டும்" என்று ட்வீட் செய்திருந்தார்.
பாஜக பதிலடி
முந்தைய பதிவில் அப்துல்லா இந்தச் சம்பவத்தை ஜாலியன்வாலா பாக் படுகொலையுடன் ஒப்பிட்டிருந்தார். இருப்பினும், பாஜக தேசிய பொதுச் செயலாளரும், ஜம்மு காஷ்மீர் பொறுப்பாளருமான தருண் சுக் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து, "ஜாலியன்வாலா பாக் என்பது ஆயுதங்கள் இல்லாத பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனம். ஜூலை 13 சம்பவம் என்பது அமைதியைக் குலைக்க முயன்ற போது நடந்த சம்பவம். உண்மைகளைத் திரித்து எங்கள் சுதந்திர இயக்கத்தை அவமதிக்க வேண்டாம். இது தியாகம் அல்ல. வன்முறையை மூடி மறைக்கும் செயல்" என்று பதிலளித்திருந்தார்.












Click it and Unblock the Notifications