வசமாய் சிக்கிய ‛பார்டர்’ பரோட்டா கடை.. கெட்டுப்போன 150 கிலோ இறைச்சி பறிமுதல்.. குடோனுக்கு சீல்!
பார்டர் ஓட்டலில் தரமற்ற உணவுகள் விற்கப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு சமீபகாலமாக புகார்கள் சென்றுள்ளன.
தென்காசி: தென்காசியில் உள்ள பிரபல பார்டர் புரோட்டா கடையில் கிலோக்கணக்கில் கெட்டுப்போன இறைச்சியை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் விரும்பி வந்து சாப்பிடும் பார்டர் ஓட்டலில் இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது சுற்றுவட்டார பகுதி மக்களை அதிருப்தியடைய செய்துள்ளது.
மேலும், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் என்றைக்காவது நடத்தும் இந்த சோதனையை, அடிக்கடி ஓட்டல்களில் நடத்த வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்களை கவர்ந்த பார்டர் ஓட்டல்
ஒரு பகுதியிலோ அல்லது மாவட்டத்திலோ பிரபலமான ஓட்டல்கள் என பல இருக்கும். ஆனால் மாநில அளவில் பெயர் பெற்ற ஓட்டல்கள் ஒன்று இரண்டு மட்டுமே இருக்கும். அதில் ஒன்றுதான் தென்காசி பார்டர் கடை. தென்காசியில் தமிழகம் - கேரளா எல்லைப் பகுதியில் உள்ளதால் இதற்கு பார்டர் கடை என்று பெயர். தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து குற்றாலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்டர் கடைக்கு சென்று சாப்பிடாமல் வர மாட்டார்கள். புரோட்டாவும், கோழிக்கறியும்தான் இங்கு ஃபேமஸ்.

திடீர் சோதனை
இப்படிப்பட்ட பார்டர் ஓட்டலில் தரமற்ற உணவுகள் விற்கப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு சமீபகாலமாக புகார்கள் சென்றுள்ளன. இதன்பேரில், உணவு பாதுகாப்பு அலுவலர், பார்டர் புரோட்டா கடையில் திடீர் சோதனை மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த ஒரு குடோன் மூடப்பட்டிருந்தது. அந்த குடோனை திறக்குமாறு அதிகாரி கேட்டதற்கு சாவி இல்லை என ஓட்டல் ஊழியர்கள் கூறியிருக்கின்றனர்.

கெட்டுப்போன இறைச்சி
இதையடுத்து, அந்த குடோனுக்கு அதிகாரி சீல் வைத்தார். பின்னர் சாவி எடுத்து வரப்பட்ட பிறகு அந்த குடோனை திறந்து பார்த்த அதிகாரி அங்கு சமைக்கப்படும் உணவுகளை ருசித்து பார்த்தார். பின்னர் அங்கிருந்த குளிர்சாதனப் பெட்டியில் உள்ள இறைச்சிகளை சோதனை செய்தார். அப்போது சுமார் 150 கிலோ எடையிலான இறைச்சிகள் கெட்டுப் போயிருப்பதை அவர் கண்டறிந்தார்.

வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
பின்னர், அந்த கெட்டுப்போன இறைச்சிகளை பறிமுதல் செய்து அவர் அழித்தார். மேலும், இதுபோன்ற கெட்டுப்போன இறைச்சிகளை பயன்படுத்தக்கூடாது என ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களை அவர் கடுமையாக எச்சரித்தார். இந்நிலையில், பிரபலமான பார்டர் ஓட்டலில் கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications