"கலாச்சாரக் காவலர்களுக்கு" எதிராக "இச் இச்" திருவிழா... கேரளாவில் வினோதம்!
திருவனந்தபுரம்: கேரளாவில் கலாச்சாரக் காவலர்கள் என்று கூறிக் கொள்பவர்களுக்கு எதிராக "முத்தத் திருவிழா" நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய கலாச்சாரத்தை இளம் தலைமுறையினர் சீரழித்து வருவதாக கூறி அடிக்கடி சில அமைப்புகள் போராட்டத்தில் குதிப்பதண்டு. குறிப்பாக காதலர் தினத்தின்போது இந்த போராட்டங்கள் ஜோராக நடந்தேறும்.
சமீபத்தில் பாஜகவின் இளைஞர் அணியான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவைச் சேர்ந்த தொண்டர்கள் கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள ஒரு ஹோட்டலை அடித்து, உடைத்து, துவம்சப்படுத்தினர். அந்த ஹோட்டலில் இளம்வயது ஆண்களும், பெண்களும் ஒழுங்கீனமான முறையில் நடந்து கொண்டதால் நாங்கள் தலையிட நேர்ந்தது என தாக்குதல் நடத்தியவர்கள் தெரிவித்தனர்.

வெளிச்சத்துக்கு வந்த விவகாரம்:
இந்த காட்சிகளை பாஜகவுக்கு எதிரான ஒரு கட்சிக்கு சொந்தமான தொலைக்காட்சி சேனல் கடந்த 23 ஆம் தேதி ஒளிபரப்பியதையடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு:
கலாச்சார பாதுகாவலர்கள் என்ற போர்வையில் சட்டம், ஒழுங்கை சிலர் தங்களது கையில் எடுத்துக் கொண்டு வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுவதை ஆதரித்தும், கண்டித்தும் கேரள மக்களிடையே பரபரப்பான பட்டிமன்றங்கள் நடைபெற்று வருகின்றன.
முத்தமிடும் திருவிழா:
இந்நிலையில் வரும் நவம்பர் 2 ஆம் தேதி மாலை 5 மணியளவில் கொச்சி நகரில் உள்ள கடற்கரையோர உணவகம் ஒன்றின் பொதுவெளியில் ஆண்களும், பெண்களும் கட்டியணைத்து முத்தமிடும் திருவிழாவுக்கு ஃபேஸ்புக் மூலம் ஒரு அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
பேஸ்புக் பக்கத்தில் "லைக்குகள்":
"கிஸ் ஆஃப் லவ்" என பெயரிடப்பட்டுள்ள இந்த பேஸ்புக் பக்கத்தில் இதுவரையில் 2,722 பேர் உறுப்பினராக இணைந்துள்ளனர். 8,510 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதே நாளில் கோழிக்கோடு, திருச்சூர் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களிலும் இந்த முத்தத் திருவிழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற இடங்களிலும் விரைவில்:
இந்த செய்தி சமூக வலைத்தளங்களின் மூலம் வேகமாக பரவி வருகின்றது. கேரளாவின் இதர பெருநகரங்களிலும் இதைப்போன்ற முத்தத் திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை எனவும் இந்த அமைப்பினர் கூறுகின்றனர்.
இதனால் கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications