காங்கிரஸில் வெடித்த கலகம்.. மாணிக்கத்தை மதிக்காத மாவட்ட தலைகள்! பெரிய ஆயுதத்தை கையிலெடுக்கும் தாகூர்
சென்னை: சேர்ந்தே இருப்பது காங்கிரசும் கலகமும் என்பது போல புதிய மாநில தலைவர் நியமனதிற்கு பின்னும் கட்சிக்குள் அதிருப்தி நிலவுவதாக சொல்கின்றனர். ஏற்கனவே செல்வப் பெருந்தகை மற்றும் முன்னாள் தலைவர்களால் நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர்கள் மாணிக்கம் தாகூருக்கு குடைச்சல் கொடுக்க தொடங்கி இருக்கிறார்களாம். இதை எடுத்து அவர்களை மாற்றி விட்டு புதிய மாவட்ட தலைவர்களை நியமிக்க தற்போதைய தலைவர் மாணிக்கம் தாகூர் திட்டமிட்டுள்ளதாக சொல்கின்றனர்.
கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை பொறுப்பேற்றார். அவரது தலைமையில் கட்சி செயல்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்த அளவிலான வெற்றியைப் பெறவில்லை.
திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் ஐந்து தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. மேலும், மாநில தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை தனது சொந்த தொகுதியான ஸ்ரீபெரும்புதூரிலேயே தோல்வியை சந்தித்தது கட்சிக்குள் பல்வேறு கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு காங்கிரஸ்
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தொகுதி மக்களின் நலனுக்காகவும், அரசியல் பொறுப்புணர்வின் அடிப்படையிலும் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாக செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார். இதையடுத்து தமிழ்நாடு காங்கிரஸில் அடுத்த தலைவர் யார்? என்பது குறித்த விவாதம் தீவிரமடைந்தது. அப்போது மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, பிரவீன் சக்ரவர்த்தி ஆகியோரது பெயர்கள் பலமாக அடிபட்டது.
மாணிக்கம் தாகூர்
தொடர்ந்து மேலும் சில தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டு மாநில தலைவர் பதவியை கைப்பற்ற திட்டமிட்டு இருந்தனர். ஆனால் இளைஞர்கள் செல்வாக்கை அதிகமாக கொண்டிருந்ததாக கூறி மாணிக்கம் தாகூரை மாநில தலைவராக நியமனம் செய்தது காங்கிரஸ் தலைமை. இதை அடுத்து மாநில தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட மாணிக்கம் தாகூர் கட்சி மறு சீரமைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக சொல்கின்றனர் கதர் கட்சியினர்.
செல்வப்பெருந்தகை
அதாவது கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் மாவட்ட தலைவர்கள் நியமனம் நடைபெற்றது. ஒரு சில மாவட்ட தலைவர்களை தவிர்த்து பெரும்பாலும் பல்வேறு மாவட்டங்களில் தலைவர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டவர்கள் தான். ஆனாலும் தேர்தலாக நடக்காமல் கட்சியின் கோஷ்டி தலைவர்கள் மூலம் நியமனம் நடைபெற்றதாக அப்போது குற்றச்சாட்டு எழுந்தது. முன்னாள் தலைவர்களான கே எஸ் அழகிரி, ப சிதம்பரம், செல்வப் பெருந்தகையின் ஆதரவாளர்களே பெரும்பாலும் மாவட்ட தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.
மாவட்ட தலைவர்கள்
இந்த நிலையில் தற்போது மாணிக்கம் தாகூர் மாநில தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் பெரும்பாலான மாவட்ட தலைவர்கள் அவரை மதிக்கவில்லை என சொல்லப்படுகிறது. மேலும் சில மாவட்ட தலைவர்கள் மாணிக்கம் தாகூரின் செல்போன் அழைப்பை கூட எடுக்கவில்லை என்கின்றனர். இதனால் கோபத்தில் இருக்கும் மாணிக்கம் தாகூர் தரப்பு மாவட்ட தலைவர்களில் மாற்றம் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
டெல்லிக்கு புகார்
மேலும் முன்னாள் தலைவர்கள் சிலர் மாணிக்கம் தாகூருக்கு எதிராக மாவட்ட தலைவர்களை வைத்து கலகம் செய்ய முயற்சிப்பதாகவும் சொல்லப்படுகிறது. கட்சியின் தலைவராக பதவியேற்று இன்னும் முழுமையாக வரும் மாதம் கூட முடிவடையாத நிலையில் தனக்கு எதிராக மாவட்ட தலைவர்களில் சிலர் செயல்படுவதை அறிந்து மாணிக்கம் தாகூர், இது தொடர்பாக டெல்லிக்கு புகார் அனுப்பியிருக்கிறாராம்.
பதவி நீக்கம்
மேலும் காங்கிரஸ் உட்கட்சி விதியின்படி புதிதாக நியமனம் செய்யப்பட்ட மாவட்ட தலைவர்கள் ஆறு மாதத்திற்குள் ஒழுங்காக பணியாற்ற வில்லை என்றால் அவர்களை பதவி நீக்கம் செய்யலாம் என இருக்கிறதாம். அந்த விதியை பயன்படுத்தி முன்னாள் தலைவர்களின் ஆதரவாளர்களை களையெடுத்து விட்டு இளைஞர்களை நியமிக்க மாணிக்கம் தாகூர் தரப்பு திட்டமிட்டு வருவதாக சொல்கின்றனர்.














Click it and Unblock the Notifications