அரசனை நம்பி புருஷனை.. அதிமுகவிலேயே சைலண்டாய் சிவி சண்முகம்! தவெகவுக்கு தாவாதது ஏன்? கண்முன் 2 சான்ஸ்
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு அதிகம் பாதிக்கப்பட்ட கட்சி என்றால் அதிமுக தான் அதிமுக அடித்துச் சொல்லி விடலாம். தேர்தலில் மிக மோசமான தோல்வி, உட்கட்சி மோதல், முன்னாள் அமைச்சர்கள் அடுத்தடுத்து விலகல், எம்எல்ஏக்ள் ராஜினாமா என அடுத்தடுத்து ஏற்பட்ட சம்பவங்கள், கட்சியின் எதிர்காலம் என்ன ஆகுமோ? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இந்த சூழலில், முன்னாள் அமைச்சரும், மயிலம் தொகுதி எம்எல்ஏவுமன சி.வி.சண்முகம் பெரிய குழப்பத்தில் உள்ளாராம். அதிமுகவிலேயே இருக்கலாமா? அல்லது தவெகவில் இணையலாமா? என்பது குறித்து நீண்ட காலமாக ஆலோசித்து வருகிறாராம்.
அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிச்சாமியின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை சமீபத்திய நிகழ்வுகள் வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றன, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்த நிலையில் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என சில சீனியர்கள் கூறினர்.

ஆனால் அதனை எடப்பாடி பழனிச்சாமி ஏற்கவில்லை. திமுக ஆதரவோடு ஆட்சியில் அமர எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனையடுத்து, சட்டப்பேரவையில் விஜய் அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவின் 25 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.
சி வி சண்முகம்
அதிமுகவில் மட்டுமல்லாது தமிழக அரசியலிலும் இது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த அணியை ஒருங்கிணைத்த முக்கிய தலைவர்களில் சி.வி.சண்முகமும் ஒருவர். காலச் சூழற்சியில் அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஆறு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதனால் அதிமுகவின் நிலை மேலும் மோசமானது.
எடப்பாடி பழனிசாமி
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட புதிய நிர்வாகிகள் பட்டியலில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பெயர் இடம்பெறாதது அவரையும் அவரது ஆதரவாளர்களையும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருடன் போர்க் கொடி தூக்கிய எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் தங்களுக்கு வழங்கப்பட்ட துணைப் பொதுச்செயலாளர் பதவியை ஏற்க மறுத்ததும் குறிப்பிடத்தக்கது. இது அதிமுகவில் அதிருப்தி இன்னும் நீடிக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
தீவிர ஆலோசனை
இதற்கிடையில், திண்டிவனத்தில் உள்ள தனது இல்லத்தில் சி.வி.சண்முகம் ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டாராம். அந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு தவெக கொடி பொருத்தப்பட்ட காரில் ஒருவர் வந்ததாக வெளியான தகவல்கள் பரபரப்பை மேலும் அதிகரித்தது. இதனால் சி.வி.சண்முகம் தவெகவில் இணையப் போகிறார் என யூகங்கள் பரவியது. ஆனால் செய்தியாளர்களை சந்தித்த சி.வி.சண்முகம், தவெகவுக்கு போகவில்லை என நேரடியாக மறுத்தார்.
அதிமுக
அதே நேரத்தில், "நான் அதிமுகவில் இருக்கிறேனா இல்லையா என்பதை பழனிசாமியிடம்தான் கேட்க வேண்டும். அது எனக்கே தெரியவில்லை" என்ற அவரது கருத்து, எடப்பாடி பழனிசாமி மீது வெறுப்பில் இருப்பதற்கான மெசேஜ் என்கின்றனர். இந்நிலையில், சி.வி.சண்முகம் உடனடியாக எந்த முடிவையும் எடுக்காமல் காத்திருக்கும் நிலைக்கு வந்துள்ளார். இதற்கு பல காரணங்களும் உள்ளதை சுட்டிக் காட்டுகின்றனர்.
முன்னாள் அமைச்சர்கள்
எடப்பாடி பழனிச்சாமி உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஏற்கனவே பல முன்னாள் அமைச்சர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறார்கள். ஆனால் இதுவரை அவர்கள் விஜயை நேரில் சந்தித்து பேச முடியவில்லை சேர்ந்தனர். அதற்குப் பிறகும் விஜய் அவர்கள் சந்திக்க முடியவில்லை. ஜெயலலிதா உடன் நேரடியாக பேசி அரசியல் செய்த நாம் தற்போது விஜய் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களுடன் தான் அரசியல் செய்ய வேண்டுமா என சிவி சண்முகம் யோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதனால் தான் உடனடியாக தவெகவில் இணையும் முடிவை எடுக்கவில்லை என்கின்றனர்.
2 சான்ஸ்
அதுமட்டுமல்லாமல் அதிமுகவில் இன்னும் பல புயல்கள் வீசலாம் என சொல்கின்றனர். சசிகலா டிடிவி தினகரன் கட்சிக்குள் வரலாம் அல்லது பிரிந்து சென்றவர்கள் ஒன்றாக சேரலாம் என சிவி சண்முகம் எதிர்பார்க்கிறார். மேலும் எஸ்பி வேலுமணி தங்கமணி உள்ளிட்ட சில முக்கிய தலைவர்கள் அடுத்தகட்ட புரட்சி போருக்கு தயாராகி வரும் நிலையில் நிச்சயம் ஏதாவது ஒரு விடிவு காலம் பிறக்கும். அப்போது மிகப்பெரிய பொறுப்புகள் தங்களுக்கு கிடைக்கலாம் என சிவி சண்முகம் தரப்பு யோசிக்கிறதாம். இதனால் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுத்து விட வேண்டாம், இன்னும் காலம் இருக்கிறது. எனவே பொறுமையாக செயல்படுவது நல்லது என்ற மனநிலையில் சி.வி சண்முகம் இருக்கிறார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்..














Click it and Unblock the Notifications