தேனி மாவட்டத்தில் தினமும் 500 மெகாவாட் மின் உற்பத்தி.. தென்மேற்கு பருவ காற்றால் குட்நியூஸ்
தேனி: மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதன் அடிவாரங்களில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் காற்றாலைகளால் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவ காற்று தீவிரமாக வீசுவால் மின் உற்பத்தி 500 மெகாவாட் என்கிற அளவிற்கு தினசரி உயர்ந்துள்ளது. இந்த மின்சாரம் முழுமையாக மின் வலையமைப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேனி மாவட்டம் முழுமையாக மேற்குத் தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டுள்ளது. இந்த மலைகளுக்கு இடையே அமைந்துள்ள கம்பம் பள்ளத்தாக்கு மற்றும் போடி, ஆண்டிபட்டி போன்ற பகுதிகளில் காற்று இயற்கை முறையில் மிகவும் வேகமாக வீசுவது வழக்கம்.

தென்மேற்கு பருவக்காற்று காலமான மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை மிக அதிகமாக வீசும், மேற்கு தொடர்ச்சி மலையின் 'பாலக்காடு மற்றும் குமுளி கணவாய்' வழியாக அதிக வேகத்துடன் தேனி மாவட்டத்திற்குள் தென்மேற்கு பருவ காற்று நுழைகிறது.
எனவே காற்றாலைகள் அமைப்பதற்கு உகந்த சீரான காற்று ஆண்டு முழுவதும் வீசுகிறது. எனவே தான் தேனி பகுதியில் நூற்றுக்கணக்கான காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது
அந்த வகையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி, காமலாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட காற்றாலைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிவிட்டது. எனவே மே மாத இறுதியில் இருந்தே பலத்த காற்று தேனி மாவட்டத்தில் வீசி வருகிறது. இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக காற்றாலைகளின் மின் உற்பத்தி படிப்படியாக அதிகரித்தபடியே இருந்தது.
தேனி மாவட்டத்தில் உள்ள சிறிய ரக காற்றாலைகளில் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 20 ஆயிரம் யூனிட் வரையும், பெரிய ரக காற்றாலைகளில் 38 ஆயிரம் யூனிட் வரையும் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் உள்ளதாகும். தற்போது காற்றின் வேகம் வினாடிக்கு 12 முதல் 13 மீட்டர் வரை பதிவாகி வருவதால், காற்றாலைகளின் மின் உற்பத்தி உச்சநிலையை எட்டியுள்ளது. இதன் மூலம் சிறிய ரக காற்றாலைகளில் நாளொன்றுக்கு சுமார் 17 ஆயிரம் யூனிட்டும், பெரிய ரக காற்றாலைகளில் 35 ஆயிரம் யூனிட்டும் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து காற்றாலைகளில் இருந்தும் நாளொன்றுக்கு சுமார் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகின்றன,. உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுமையாக மின் வலையமைப்பில் பயன்படுத்தப்பட்டு வருவதால், காற்றாலைகள் 24 மணி நேரமும் தொடர்ந்து சுழன்று மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறது என்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.














Click it and Unblock the Notifications