டாடி பொறுத்தது போதும்.. ஓபிஎஸ்ஸை நச்சரிக்கும் ஓபிஆர்! மதிக்காத திமுக.. தவெக தாவ பரபரப்பு டீலிங்!
சென்னை: தேனி வட்டாரத்திலும் அறிவாலய வட்டாரத்திலும் தற்போதைக்கு பரபரப்பாக பேசப்படும் ஒரு விஷயம் ஓ.பன்னீர்செல்வம் என்ன செய்யப் போகிறார் என்பதுதான். அதிமுகவில் உரிய மரியாதை கிடைக்கவில்லை என போர்க்கொடி தூக்கி அவர் கட்சியிலிருந்து விலகிய நிலையில் திடீரென திமுகவில் இணைந்தார்.
ஆனால் கட்சியில் சேர்ந்து மூன்று மாதம் ஆகியும் இதுவரை கட்சி பொறுப்பு அல்லது நிர்வாகப் பொறுப்பு வழங்கப்படாததால் அதிருப்தியில் உள்ளாராம். இதை அடுத்து ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்பு கொண்டு தவெகவின் முக்கிய நிர்வாகிகள் பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஓபிஎஸ் மகனும் தவெக நிர்வாகிகளுடன் தொடர்பில் இருப்பதாக சொல்கின்றனர்.

ஒரு மினி அதிமுக போலவே தமிழக வெற்றிக் கழகம் மாறி வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சி அமைக்க தேவையான தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதை அடுத்து விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியில் அமர்ந்திருக்கிறது.
ஓ பன்னீர்செல்வம்
அதே நேரத்தில் கட்சியில் விஜய் மட்டுமே முக்கிய முகமாக இருக்கும் நிலையில் மாவட்ட அளவில் இரண்டாம் கட்ட தலைவர்கள் தேவை என்பதை உணர்ந்து இருக்கிறது அந்த கட்சி தலைமை. இதை அடுத்து திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து முக்கிய பிரமுகர்களை வளைக்கும் வேளையில் பனையூர் வட்டாரம் இறங்கியுள்ளது. திமுகவினர் பிடி கொடுக்காத நிலையில் அதிமுகவினர் தமிழக வெற்றிக் கழகம் விரித்த வலையில் சிக்கி வருகின்றனர். ஏற்கனவே ஆறு எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகம்
இதில் கரூர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் முக்கியமானவர்கள். தேர்தலுக்கு முன்னரே தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தற்போது சிட்டிங் அமைச்சராக இருக்கிறார். இதை அடுத்து இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றால் தங்களுக்கும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற ஆவலில் பலரும் தமிழக வெற்றிக்கழகத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
பனையூர் வட்டாரம்
இந்த நிலையில் கொங்கு தென் மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழகத்தை வலுப்படுத்த மேலும் சில முக்கிய சீனியர்களை தட்டி தூக்க வேண்டும் என பனையூர் வட்டாரம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தென் மாவட்டங்களில் செல்வாக்கு கொண்ட தலைவரான ஓ பன்னீர்செல்வத்தை கட்சிக்கு அழைத்து வரவேண்டும் என தலைமை உத்தரவிட்டதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அதிமுகவில் முதலமைச்சர் பொறுப்பை வகித்த ஓ பன்னீர்செல்வம், 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜயுடன் கூட்டணி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
திமுக
ஆனால் அப்போதைய சூழலால் திமுகவில் இணைந்து போட்டியிட்டு வென்றார் ஓபிஎஸ். ஆனால் ஓபிஎஸ் உடன் சேர்ந்த சில தலைவர்களுக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் முதலமைச்சராக இருந்த தனக்கு இதுவரை எந்த பொறுப்பையும் திமுக தலைமை வழங்கவில்லை என்பதால் ஓ பன்னீர்செல்வம் அதிருப்தியில் இருக்கிறாராம். மேலும் தனது மகனுக்கும் பதவி கேட்டு திமுக தலைமையை தொடர்பு கொண்ட போது இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாது.. கொஞ்ச காலம் பொறுத்து இருங்கள் என சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது.
இடைத்தேர்தல்
இதனால் கடும் அதிர்ச்சியில் ஓ பன்னீர்செல்வம் இருப்பதை தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் தெரிந்து கொண்டு அவரை தங்கள் கட்சிக்கு வருமாறு அழைக்கிறார்களாம். கட்சிக்கு வந்தால் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்பு அமைச்சர் பதவி கூட தரப்படும். மேலும் செங்கோட்டையனை போல ஒருங்கிணைப்பாளர் பதவி, மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படும் என சொன்னார்களாம். மேலும் ஓ பி ரவீந்திரநாத் குமாரையும் கட்சியில் சேர வைத்தால் அவருக்கும் உரிய பதவி தரப்படும் என சொன்னதாக சொல்லப்படுகிறது.
ரவீந்திரநாத் குமார்
ஓ பன்னீர்செல்வத்தை விட ரவீந்திரநாத் குமார் தமிழக வெற்றி கழகத்தில் இணைய ஆர்வம் காட்டி வரும் நிலையில், அது தொடர்பான மறைமுக பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருவதாக சொல்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர். விரைவில் இதற்கான பதில் கிடைக்கும் என்கின்றனர் தேனி வட்டாரத்தினர்.












Click it and Unblock the Notifications