தேனியில் மனைவியை மாமனார் வீட்டில் விட்டுவிட்டு கல்யாணமான 9 நாளில் புதுமாப்பிள்ளை காதலியுடன் ஓட்டம்
தேனி: தேனி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 21 வயது இளைஞருக்கும் 19 வயது பெண்ணுக்கும் கடந்த மாதம் 26 தேதி திருமணம் நடந்தது. இருவீட்டார் ஏற்பாட்டில் திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான 9 நாட்களில் மனைவியை மாமனார் வீட்டில் விட்டுவிட்டு புதுமாப்பிள்ளை காதலியுடன் ஓட்டம் பிடித்தார். தற்போது காதலியுடன் ஓடிய இளைஞர் திருப்பூரில் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
யாரையாவது காதலித்து இருந்தால் முடிந்தால் அவரை திருமணம் செய்துவிட வேண்டும். அவரை நினைத்துக் கொண்டு வாழ்ந்து புதிதாக வந்த வாழ்க்யை துணையை ஏமாற்றிவிடக்கூடாது. சிலர் காதலியை மறந்துவிட்டு பெற்றோரின் விருப்பம், நண்பர்களின் கட்டாயம் என ஏதாவது வற்புறுத்தலால் பெண்ணை திருமணம் செய்கிறார்கள் . ஆனால் சில நாட்களிலேயே காதலியுடன் ஓடிப்போகிறார்கள்.

அதேபோல் பெற்றோரின் விருப்பத்திற்கு திருமணம் செய்துவிட்டு, காதலன் வந்து கூப்பிட்டதும் பெண்கள் சிலர் ஓடிப்போகிறார்கள். இதுவும் நடக்கிறது. இதில் நாம் பார்க்க போவது முதல் ரகம். அதாவது காதலி வந்து கூப்பிட்டதும், காதலன் திருமணம் செய்த மனைவியை பிரிந்து ஓடிப்போயிருக்கிறார்
தேனி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 21 வயது இளைஞருக்கும், தேனி பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த மாதம் 26-ந்தேதி திருமணம் நடந்தது. இருவீட்டு பெற்றோரும் சேர்ந்து இனிதே திருமணத்தை நடத்தி வைத்தனர்.
கடந்த 3-ந்தேதி அந்த இளைஞர் தனது மனைவியை அழைத்துக் கொண்டு மாமனார் வீட்டுக்கு சென்றார். அங்கு மனைவியை விட்டுவிட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவே இல்லை. அவருடைய செல்போன் எண்ணும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து அந்த இளம்பெண் தேனி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர்.
திருமணமான 9 நாட்களில் புதுமாப்பிள்ளை மாயமான சம்பவம் குறித்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த வாலிபர் திருப்பூர் பகுதியில் இருப்பது தெரியவந்தது. இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாமல் அவர், தான் காதலித்த பெண்ணுடன் ஓட்டம் பிடித்து உள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதுகுறித்து தேனி போலீஸ் தரப்பில் கூறுகையில், 'மாயமான புதுமாப்பிள்ளை ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி, கணவரை பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வேறு பெண்ணை அந்த இளைஞருக்கு திருமணம் செய்து வைத்தனர். இந்த நிலையில் தான் அவர் திடீரென மாயமாகியுள்ளார்' என்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.














Click it and Unblock the Notifications