திமுகவும் அதிமுகவும் ஒரே நாளில் ஆளுநரை சந்தித்தது சந்தேகத்தை கொடுக்குது.. சிபிஎம் சண்முகம்
சென்னை: தமிழகத்தில் ஆளும் தவெக அரசு குதிரைபேரம் நடத்துவதாக திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய எதிர்க்கட்சிகள் ஆளுநர் அர்லேகரிடம் ஒரே நாளில் புகார் மனு அளித்தன. அமைச்சரவை கூட்டத்தில் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகிய வெளிநபர்கள் பங்கேற்பதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. திமுக, அதிமுக ஒரே நாளில் ஆளுநரை சந்தித்து இருப்பது சந்தேகத்தை கிளப்புவதாக சிபிஎம் சண்முகம் பரபரப்பாக பேசியிருக்கிறார். அவரது பேச்சின் முழுவிவரங்களை இங்கே பார்க்கலாம்.
தமிழகத்தில் ஆளும் தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகவும் அது குறித்து ஆளுநர் விசாரணை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் தமிழக ஆளுநர் அர்லேகரை திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் நேற்று புகார் அளித்தன. சில மணி நேர இடைவெளியில் இரு கட்சிகளும் அடுத்தடுத்து இந்த புகார்களை ஆளுநரிடம் கொண்டு சென்றன.

பெ சண்முகம் பேட்டி
இன்னொரு பக்கம் பாஜகவும் ஆளுநரை சந்தித்து தங்கள் பங்குக்கு தவெக அரசுக்கு எதிராக புகாரை அளித்தது. சனிக்கிழமை ஒரே நாளில் ஆளுநரை தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சிகள் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில், திமுகவும், அதிமுகவும் அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்து புகார் அளித்து இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக சிபிஎம் சண்முகம் தெரிவித்துள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:- தமிழக ஆளுநர் , அரசியல் சாசனம் அவருக்கு வழங்கியிருக்கக்கூடிய அதிகாரங்களை மீறி, மதுரையில் ஆய்வுக்கூட்டம் நடத்தியது கண்டனத்திற்குரியது. இதற்கு முன்பாக ஆளுநராக இருந்த ஆர்என் ரவி இத்தகைய அணுகுமுறைகளை மேற்கொண்டபோதெல்லாம் தமிழகம் ஒட்டுமொத்தமாக கண்டனம் தெரிவித்தது.
எனவே, இப்போதுள்ள ஆளுநரும் அதே மாதிரியான அணுகுமுறையைத் தொடர்ந்து கடைப்பிடிப்பது என்பது பொருத்தமானது அல்ல. அரசியல் சாசனம் ஆளுநருக்கு என்ன கடமைகளை வரையறுத்துள்ளதோ அதற்கு உட்பட்டு நடக்க வேண்டும். பொதுமக்கள் பிரச்சினைகள் இருந்தால் மக்கள் பவனை அணுகலாம் என்று ஆளுநர் கூறியிருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் இங்கே இருக்கக்கூடிய நிலையில், அவர் தானாகவே பிரச்சினையையெல்லாம் தீர்த்துவிடுவதைப் போல பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்திருப்பது என்பது பொருத்தமானது இல்லை. எனவே ஆளுநர் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும்" என்றார்.
எதிர்க்கட்சி தலைவர் கூறுவது தவறானது
சோஃபா கொடுத்ததால் கூட்டணி கட்சிகள் எங்களை விட்டு போய்விட்டது என்று உதயநிதி விமர்சனம் செய்துள்ளது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சண்முகம், "சட்டமன்றத்திலும் உதயநிதி இதை சொல்லியிருக்கிறார். தொடர்ச்சியாக இதை சொல்லி வருகிறார். இதுபோன்ற அபாண்டமான குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சி தலைவர் கூறுவது தவறானது. ஆதாரம் இருந்தால் வெளியிட வேண்டும்.
தவெகவை ஏன் நாங்கள் ஆதரிக்கிறோம் என்று அரசியல் பூர்வமான காரணங்களை நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம். உதயநிதியின் இந்த பேச்சு கண்டித்தக்கது. இடைத்தேர்தலைப் பொறுத்தவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதுவரைக்கும் எந்த முடிவும் எடுக்கவில்லை. நாங்கள் அந்த அணியிலேயோ, இந்த அணியிலேயோ கிடையாது. நாங்கள் இடதுசாரி அணி என்பதில் தனித்துச் செயல்படுகிறோம்.
சந்தேகத்தை ஏற்படுத்துகிறது
அதே நேரத்தில், தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு என்பது தொடரும். அதுல எந்தவிதமான மாற்றமும் கிடையாது. கரூர் கூட்ட நெரிசல் மரண விவகாரத்தில் மத்திய புலனாய்வு துறை விசாரணை இருக்கும் போதே அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இப்படி பேசுவது தவறானது. ஆதவ் அர்ஜுனா இதுபோன்ற கருத்துகளை பேசியிருக்க கூடாது. அமைச்சர் கருத்து ஏற்புடையதல்ல. தமிழக ஆளுநரை ஒரே நாளில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் சந்தித்து இருக்கிறார்கள்.
ஆளுநர் பதவியே வேண்டாம் என்பதுதான் திமுக, அதிமுகவின் கருத்து. ஆளுநர் என்பவர் ஒரு ஏஜெண்ட் தான், தபால்காரர்தான் என்று அடைமொழி கொடுத்து இருக்கிறார்கள். இத்தகைய சூழலில் ஆளுநரிடம் போய் புகார் கொடுத்து இருப்பது என்பதை ஆழமாக யோசிக்க வேண்டியுள்ளது. இது பற்றி திமுக - அதிமுக தரப்பில்தான் தெளிவுபடுத்த வேண்டும். பாஜக சந்திப்பதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால், அதிமுகவும் திமுகவும் ஒரே நாளில் சேர்ந்தாற்போல் ஆளுநரை சந்தித்தது என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது" என்றார்.














Click it and Unblock the Notifications