Tirupati: 116 வயதில் 3,550 படிக்கட்டுகள் ஏறி ஏழுமலையானை தரிசித்த மூதாட்டி.. விஐபி தரிசனம் கொடுத்த கோயில் நிர்வாகம்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய அலிபிரி பாதை வழியாக 3,550 படிக்கட்டுகள் ஏறி வந்த 116 வயது மூதாட்டியான நவநீதம்மாளுக்கு, கோவில் நிர்வாகம் விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை வழிபட அனுமதி அளித்து சிறப்பித்துள்ளது. இளம் வயதினர் கூட அலிபிரி மலைபாதையில் ஏறி வர மூச்சு வாங்கும் நிலையில், 116 வயதில் மூதாட்டி நடந்தே வந்தது திருப்பதி பக்தர்களை வியக்க வைத்துள்ளது. மூதாட்டியின் பக்தியை கண்டு பலரும் மெய்சிலிர்த்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு நவநீதம்மாள் என்ற 116 வயது மூதாட்டி நடந்தே வந்து சாமி தரிசனம் செய்தார். அலிபிரி மலைபாதை வழியாக நவநீதம்மாள் படிக்கட்டுகள் ஏறிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. 3,550 படிகள் கொண்ட இந்த அலிபரி மலை பாதை 9 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.

இளம் வயதினர் கூட இந்த நடைபாதை வழியாக செல்வதற்குள் மூச்சு வாங்கும் நிலையில், 116 வயதில் நவநீதம்மாள் படியேறி சென்றது திருப்பதி பக்தர்களை வியக்க வைத்தது. நவநீம்மாளுடன் அவரது குடும்பத்தினரும் படிகள் வழியாக ஏறி சென்றனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு தனது எக்ஸ் தளத்தில் இந்த மூதாட்டியின் வீடியோவை பகிர்ந்து இருந்தார்.
அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது
அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், 116 வயதில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக திருமலைக்கு 3,550 படிகள் ஏறி வந்துள்ளார். மூதாட்டியின் அசைக்க முடியாத பக்தி அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது. அந்த பக்தைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் சிறப்பு தரிசனம் வழங்க நான் முடிவு செய்துள்ளேன். அவரை பற்றிய விவரங்கள் தெரிந்தால் திருமலையில் உள்ள அலுவலகத்தில் என்னை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். ஏழுமலையான் ஆசீர்வாதம் எப்போதும் அந்த குடும்பத்தினர் மீது இருக்கட்டும் என்று நான் வேண்டிக்கொள்கிறேன்" என்று பதிவிட்டு இருந்தார்.
இதையடுத்து, நவநீதம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினரை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தேடிக் கண்டுபிடித்தனர். நவநீதம்மாள் மற்றும் குடும்பத்தினரை இன்று காலை பயோ மெட்ரிக் மையத்தில் இருந்து நேரடியாக அழைத்து சென்று விஐபி பிரேக் தரிசனத்தில் கோயிலில் வழிபாடு செய்ய அனுமதி அளித்துள்ளனர். திருப்பதி ஏழுமலையானை மனமுருக வழிபட்ட நவநீதம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பின்னர் ரங்கநாயகி மண்டபத்தில் வைத்து பட்டு சால்வை மற்றும் பிரசாதங்களை வழங்கி விஐபி போல அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தி அனுப்பி வைத்தனர்.
ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு பாராட்டு
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் தனது எக்ஸ் பதிவில் நவநீதம்மாளின் உத்வேகத்தை பாராட்டியிருந்தார். அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "பக்தி என்று வரும் போது வயது என்பது வெறும் நம்பர்தான் என்பதை அவரது உத்வேகம் காட்டியுள்ளது. நவநீதம்மாளின் இந்தப் பயணம் மிகவும் ஊக்கமளிக்கிறது.
திருமலை திருப்பதியில் தரிசனம் செய்ய வேண்டும் என்ற அவரது வாழ்நாள் விருப்பத்தை நிறைவேற்ற அவருக்கு உறுதுணையாக இருந்த அவரது குடும்பத்தினரையும் பாராட்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். 116 வயது முதாட்டிக்கு விஐபி தரிசனம் செய்ய அனுமதி அளித்த தேவஸ்தான நிர்வாகத்தின் செயலை பக்தர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.















Click it and Unblock the Notifications