லடாக் வன்முறை: மத்திய உள்துறை அமைச்சகம் டெல்லியில் முக்கிய ஆலோசனை
டெல்லி: லடாக் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது. சூழல் ஆர்வலர் சோனம் வாங்க்சுக் கைது, ஊரடங்கு உத்தரவு காரணமாக இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. லடாக் பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக மத்திய உள்துறை அமைச்சகம் லடாக்கில் உள்ள முக்கிய இயக்கங்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லடாக் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரியும், அரசியலமைப்பு 244வது பிரிவின் கீழ் லடாக்கில் ஆறாவது அட்டவணை நீட்டிக்கக் கோரி போராட்டம் தீவிரமடைந்தது. இதை வலியுறுத்தி லடாக்கில் உள்ள சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் சோனம் வாங்க்சுக் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

லடாக் வன்முறை
அவருக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வந்தனர். சோனத்துடன் இணைந்து பலரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். முக்கியமாக எஸ்ஏபி என்றழைக்கப்படும் லே உச்ச அமைப்பினரும் சோனத்துடன் இணைந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து லே உச்ச அமைப்பு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
அதன்படி கடந்த புதன்கிழமை அங்கு நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பாதுகாப்புப் படை மற்றும் போராட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் உயிரிழந்தனர். சுமார் 100 பேர் காயமடைந்தார்கள். சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் லடாக்கில் பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
சோனம் வாங்ச்சுக் கைது
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் சோனம் வாங்க்சுக்கின் வெறுப்பு பேச்சுகள் தான் இளைஞர்களிடம் ஆத்திரத்தை ஏற்படுத்தி வன்முறைக்கு தூண்டியது. என்று சொல்லி அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதும் செய்தது. இது பெரும் சர்ச்சையாகியுள்ளது. சோனம் கைதிற்கு எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
சோனம் நடத்தி வரும் கல்வி அமைப்புக்கு வெளிநாடு நிதியுதவி பெறும் உரிமைத்தையும் மத்திய அரசு ரத்து செய்திருந்தது. லடாக்கில் தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் (சனிக்கிழமை) ஊரடங்கு தொடர்கிறது. அங்கு கல்வி நிறுவனங்கள், அரசு, தனியார் நிறுவனங்களுக்கான விடுமுறை நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இணைய சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லி ஆலோசனை
இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. லடாக் நிலவரத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். தொடர் நடவடிக்கைகள் காரணமாக அங்கு அமைதி திரும்பியுள்ளது என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில் லடாக் வன்முறை தொடர்பாக லே உச்ச அமைப்பு மற்றும் கார்கில் ஜனநாயக கூட்டமைப்பு உள்ளிட்ட முக்கிய அமைப்புகள், லடாக் மக்களவை உறுப்பினர் முகமுது ஹனீஃபா ஜான் ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சகம் டெல்லியில் இன்று மற்றும் நாளை ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது. முன்னதாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் லடாக்கில் நேரடியாக ஆய்வு செய்திருந்தனர்.
அதனடிப்படையில் லடாக் பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு அமைப்பிலும் தலா 3 பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications